Thursday, May 2, 2019

காஞ்சீபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காஞ்சீபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 02, 2019 04:00 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கோவில்களின் நகரமாகவும், பட்டு சேலை விற்பனை செய்வதில் புகழ் பெற்ற நகரமாகவும் விளங்கி வருகிறது. பட்டு சேலை வாங்குவதற்கும், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜபெருமாள் உள்ளிட்ட புகழ் பெற்ற கோவில்களை தரிசிப்பதற்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான நாட்கள் காஞ்சீபுரம் கோவில்களில் விழா நடந்து வருகிறது.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, மார்கழி மாத தொடக்கத்தில் கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பஸ்கள் மூலம் திரளான பக்தர்கள் காஞ்சீபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் செங்கழுநீரோடை வீதி, கோவில்களின் மாடவீதிகள், காந்திரோடு, சாலைத்தெரு, சின்ன காஞ்சீபுரம், டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பஸ்கள் அதிக அளவில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் முறையாக சாலையை பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அவ்வப்போது, சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. நகர்ப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை போக்குவரத்தில் மாற்றம் செய்தது. அதன்படி, மூங்கில் மண்டபத்தில் இருந்து கீரை மண்டபம், கலெக்டர் அலுவலகம் வரை அனைத்து வாகனங்களும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

மாறாக, அனைத்து வாகனங்களும் இனி பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், பஸ் நிலையம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம், விளக்கடி கோவில் தெரு, கீரை மண்டபத்தை அடைந்து அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. காந்தி சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு எளிதாக வாகனங்கள் அனைத்தும் சுழற்சி முறையில் சிரமமின்றி சென்று வருகின்றன. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

தற்போது உள்ள பஸ் நிலையமோ 44 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதைய சூழலுக்கு பிறகு தற்போது அதிக குடியிருப்புகள், வாகனங்கள் அதிகரித்து விட்டதால், காஞ்சீபுரம் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்து வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு புதிய பஸ்நிலையம் அமைக்க பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் கிளாம்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் காஞ்சீபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். இதற்காக, ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராம பகுதியில் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் சிலர் பட்டா பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. ஏற்கனவே, அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்ட இடம், கீழம்பி அருகே சித்தேரி மேடு, பொன்னேரிக்கரை போன்ற இடங்களில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கு இடம் பார்க்கப்பட்டு பின்னர் இடம் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில், வரதராஜபெருமாள் பிரம்மோற்சவத்தை தொடர்ந்து அத்திவரதர் பெருவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை காண ஏராளமானோர் காஞ்சீபுரம் வரவுள்ளனர். அவ்வாறு வருவோருக்கு தேவையான வசதிகள் செய்யப்படும் அளவுக்கு தற்போது நகர்ப்பகுதியில் வசதிகளும் இல்லை. எனவே, காஞ்சீபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏறபட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காஞ்சீபுரம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது உறுதிதான். தமிழக அரசு இதற்காக ரூ.38 கோடி நிதியும் அறிவித்துள்ளது. இதற்காக, இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. இதனால் பஸ் நிலையப்பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்ற பின்னரும் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இதனால் பஸ் நிலைய திட்டப் பணிகளை மேற்கொள்ள இயலாது. மே மாதம் 23–ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படவுள்ளது. அதன்பிறகே, புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் பணிகள் துரிதப்படுத்தப்படும். மேலும் காஞ்சீபுரம் அருகே கீழ்கதிர்பூர், பொன்னேரிக்கரை உள்பட பல்வேறு இடங்களில் எந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...