Thursday, May 2, 2019

சூறாவளியுடன் பல மாவட்டங்களில் கன மழை: வீடுகள், மரங்கள், மின் கம்பங்கள் சேதம்

Added : மே 02, 2019 01:29




சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சூறாவளியுடன் பெய்த கன மழைக்கு, பல வீடுகள் சேதமாகின. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில், அவ்வப்போது, கோடை மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன், மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றால், தளியை சுற்றிய பகுதிகளில், 11க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமாகின.

ஜவளகிரி - கொலகொண்டப்பள்ளி செல்லும் சாலையில், ஆலமரம் சாய்ந்தது. அஞ்செட்டியை சுற்றிய பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஐந்து மின் கம்பங்கள் சேதமாகின. குமார்தனஹள்ளி பகுதியில், பலத்த காற்றில், மரம் சாய்ந்து, கன்றுக்குட்டி பலியானது. 8 ஏக்கருக்கு மேல் வாழைத் தோட்டங்கள் நாசமாகின.

மக்கள் தஞ்சம்

தர்மபுரி அடுத்த மாதேமங்கலம், குட்டூர், கவலைக்காரன் கொட்டாய் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறைக்காற்று வீசியது.இதில், 19 வீடுகளின் கூரைகள், 100 மீட்டருக்கு அப்பால் போய் விழுந்தன. 15க்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்து, வீடுகள், மின் கம்பங்கள் மீது விழுந்தன.இப்பகுதி இருளில் மூழ்கியதால், சாரல் மழைக்கு மத்தியில், தங்களது உடைமைகளுடன் அருகில் உள்ள வீடுகளில், மக்கள் தஞ்சமடைந்தனர்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல், அரை மணி நேரம் சூறைக்காற்று வீசியது. ஆம்பூரில் மட்டும் மழை பெய்தது.வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டியில், முருகன், 45, என்பவருக்கு சொந்தமான, ஆட்டுக் கொட்டகை இடிந்து, எட்டு ஆடுகள் பலியாகின.வாணியம்பாடியை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 6,000 வாழை மரங்கள் சாய்ந்தன.பேர்ணாம்பட்டு - குடியாத்தம் சாலையில், ஐந்து புளிய மரங்கள், நான்கு டிரான்ஸ்பார்மர்கள், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நிலோபர் கபில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மொரப்பூர் - ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில், சூறை காற்றால், பல இடங்களில், உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், சிக்னல்கள் செயல் இழந்தன. இந்த மார்க்கத் தில், சென்னை செல்லும் ரயில்கள், மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக சென்றன.

மூதாட்டி பலி

சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல இடங்களில் பலத்த காற்று, இடியுடன் மழை கொட்டியது.மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த மூதாட்டி வெள்ளையம்மாள், 80, உறவினர் கள் சிலருடன், வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பலமாக வீசிய காற்றால், கொட்டகையின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை சரிந்து விழுந்தது. இதில் சிக்கி, பசு மாடும், வெள்ளையம்மாளும் இறந்தனர். காயமடைந்த இரண்டு பெண்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...