Wednesday, May 1, 2019

ஓமலூர், மேச்சேரியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கோழிப்பண்ணைகள், வீடுகள் சேதம்

ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றினால் மேற்கூரைகள் பறந்ததால், கோழிப்பண்ணைகள், வீடுகள் சேதம் அடைந்தன.

பதிவு: மே 01, 2019 04:01 AM

ஓமலூர்,

ஓமலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளான உ.மாரமங்கலம், பஞ்சுகாளிப்பட்டி, மேல்காளிப்பட்டி, அழகனம்பட்டி உள்ளிட்ட ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சுகாளிப்பட்டி, மேல்காளிப்பட்டி, அழகனம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வீட்டின் மேற்கூரைகள், ராட்சத விளம்பர பலகைகள் பறந்தன. மேலும் அழகனம்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது வீட்டின் மேற்கூரையும் தூக்கி வீசப்பட்டது. மேல்காளிப்பட்டி பகுதியில் விவசாயி பூபதி என்பவர் 230 அடி நீளத்தில் 5 ஆயிரம் கோழிகள் வளர்க்கும் வகையில் பண்ணை அமைத்து இருந்தார். மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த கோழிகளை விற்று விட்ட பூபதி, மீண்டும் கோழிகளை வளர்க்க ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றுக்கு கோழிப்பண்ணை இடிந்து தரைமட்டமானது. மேலும் அதே பகுதியில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையும் இடிந்து சேதம் அடைந்தது. முத்து என்பவரது தறிக்கூடத்தின் மேற்கூரையும் காற்றில் பறந்தது. அதே பகுதியில் சந்திரன், தங்கமணி, ஆகியோரது வீடுகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதில் மேற்கூரை விழுந்ததில் தங்கமணியின் மனைவி மலர்கொடி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பழமையான வேப்ப மரம், கொன்றை மரங்களும் வேரோடு சாய்ந்தன. பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் மின் கம்பம் மற்றும் கொன்றை மரம் வீட்டின் மீது சாய்ந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பித்தனர். இந்த சூறாவளி காற்றுக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதில் ஓலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிந்தாமணியூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நெசவு கூடம், வீடு ஆகியவை இடிந்து சேதம் அடைந்தன. மேலும் ஜெகநாதன் என்பவரின் ஓட்டு வீடு, நவகோட்டி என்பவரின் நெசவுக்கூடம் ஆகியவைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. வடிவேலு, செல்வம், நேதாஜி ஆகியோரது வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பச்சியப்பன் என்பவரின் மாட்டுக்கொட்டை இடிந்து விழுந்தது. இதே போல பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்ததால், வீடுகளும் சேதம் அடைந்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024