Thursday, September 12, 2019

டைம்ஸ் தரவரிசை பட்டியல்: 200 ரேங்குக்குள் இடம்பிடிக்காத இந்திய கல்வி நிறுவனங்கள்

By எம். மார்க் நெல்சன் | Published on : 12th September 2019 05:25 AM

டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அத்துடன், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) உள்பட பெரும்பாலான இந்திய கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.


சென்னை ஐஐடி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அதுபோல, 2020-ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் 7 அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களும், மூன்று பிரிட்டன் பல்கலைக்கழகங்களும் இடம்பிடித்து அசத்தியுள்ளன.

பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்: இந்திய கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, முன்னணி இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட பெரும்பாலானவை பின்னடைவைச் சந்தித்துள்ளன.

கடந்த முறை 251-300 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்று பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) இந்த ஆண்டு 301-350 இடைப்பட்ட தரவரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனுடன் ரோபர் ஐஐடி-யும் 301-350 இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த முறை 351-400 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்றிருந்து இந்தூர் ஐஐடி, இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறது.

மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி ஆகியவை 401-500 க்கு இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் 501-600 க்கு இடைப்பட்ட தரவரிசையில் மும்பை கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனம், காந்திநகர் ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி: சென்னை ஐஐடி-யைப் பொருத்தவரை கடந்த ஆண்டைப் போலவே 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்றுள்ளது. அமிர்தா விஷ்வ வித்யபீடம், கான்பூர் ஐஐடி, ஐஐடி குவாஹாட்டி, ஐஐடி புவனேஸ்வர், ஐஐடி ஹைதராபாத், புணே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவையும் 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பிடித்துள்ளன.

பட்டியலில் இடம்பிடித்த அண்ணா பல்கலைக்கழகம்: கடந்த ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்காத சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இம்முறை இடம்பிடித்துள்ளது. பட்டியலில் 1000-ஆவது தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்திருக்கிறது.
மேலும் திருச்சி என்ஐடி, வேலூர் விஐடி, கோவை வேளாண் பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டு டைம்ஸ் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கின்றன.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...