Friday, September 27, 2019

உதித்சூர்யா, டாக்டர் தந்தை கைது சிக்குகிறார் பயிற்சி மைய தரகர்

Updated : செப் 27, 2019 00:17 

தேனி,: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாகி திருப்பதியில் சிக்கிய மாணவர் உதித்சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோர் தேனிக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒப்புதல் வாக்குமூலத்தின்படி உதித்சூர்யா, டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர்.

ஆள்மாறாட்டம் செய்ய பயிற்சி மையம் ஒன்று சென்னை தரகர் மூலமாக ரூ.20 லட்சம் வாங்கியது குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா 21. தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த மாதம் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார்.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 'சீட்' பெற்றதாக எழுந்த புகாரில் விசாரணை நடந்தது. புகார் உறுதி செய்யப்பட்டதால், மன உளைச்சலால் படிப்பை தொடர இயலாது' என முதல்வரிடம் கடிதம் தந்து விட்டு உதித்சூர்யா தலைமறைவானார். தேனி போலீசார் வழக்குப்பதிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிக்கிய நண்பர்

இந்நிலையில் டாக்டர் வெங்கடேசன், குடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரது அலைபேசி அழைப்புகளை தேனி தனிப்படை போலீசார் கண்காணித்தனர்.அவரது நண்பர் புகழேந்தி அடிக்கடி தொடர்பு கொண்டார். எஸ்.ஐ.,க்கள் சுல்தான் பாட்ஷா, துரைராஜ் தலைமையிலான போலீசார் அவரை பிடித்தனர். வெங்கடேசன் குடும்பத்தினர் ஆந்திராவின் திருப்பதியில் இருப்பது புகழேந்தி மூலம் தெரிந்தது.

அங்கு சென்ற போலீசார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த வெங்கடேசன், மனைவி கயல்விழி, உதித்சூர்யாவை பிடித்தனர்.நேற்று முன்தினம் இரவு 1:32 மணிக்கு தேனி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். 1:45 மணிக்கு சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., காட்வின் ஜெகதீஷ், இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் உதித்சூர்யா, பெற்றோரை ஒப்படைத்தனர். துவக்கத்தில் விசாரித்த இன்ஸ்பெக்டர் உஷாராணி, வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தார்.
முதல்வரிடம் விசாரணை

நேற்று காலை தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் வந்தனர். அவர்களிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார், டி.எஸ்.பி., காட்வின் ஜெகதீஷ், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் மருத்துவக் கல்லுாரியில் கண்காணிப்பு கேமரா பதிவுகள், முதல்வர் அறை, மாணவர் சேர்க்கை நடந்த அறைகளை ஆய்வுசெய்தனர். பின் உதித்சூர்யா, பெற்றோரிடமும் விசாரணை நடந்தது.பின் உதித்சூர்யா, வெங்கடேசனை கைது செய்து தேனி மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வத்தின் முன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் ஆஜர்படுத்தினர்.

'தந்தையே காரணம்'

சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:'எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் என் தந்தையால் வந்த வினை' என உதித்சூர்யா கூறினார்.வி.ஏ.ஓ., குமரேசன் முன்னிலையில் டாக்டர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில், மகனை எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த தவறை செய்துவிட்டோம்' என கூறினார்.கயல்விழி, 'மகனை குறுக்கு வழியில் மருத்துவக் கல்லுாரியில் சேர்த்திருப்பது தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் தான் எனக்கு தெரிந்தது' என்றார்.

வாக்குமூலத்தின் படி உதித்சூர்யா, வெங்கடேசனை கைது செய்துள்ளோம். ஒரு பயிற்சி மையத்தினர் சென்னையைச் சேர்ந்த தரகர் வாயிலாக 20 லட்சம் ரூபாய் வாங்கி இந்த முறைகேட்டுக்கு வழிவகுத்தது தெரிந்தது. இது குறித்தும் விசாரிக்கிறோம்., என்றார்.

டி.எஸ்.பி., காட்வின் ஜெகதீஷ் கூறியதாவது:

ஒப்புதல் வாக்குமூலத்தின்படி கூட்டுச்சதி, மோசடி, ஆவணங்களை திருத்தி மோசடி ஆகிய பிரிவுகளில் இருவரையும் கைது செய்துள்ளோம். தாயார் கயல்விழியை வழக்கில் சேர்க்க வேண்டிய முகாந்திரம் இல்லை. விசாரணை முடியவில்லை. தொடர்ந்து விசாரித்து முடிவு எடுக்கப்படும். உதித்சூர்யாவுக்கு பதில் 'நீட்' தேர்வு எழுதியவரை விரைவில் கைது செய்வோம், என்றார்.

2017 - 18 முதல் ஆய்வு

இந்தாண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் விபரம் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் இதுவரை பதிவு செய்யப் படவில்லை. மாணவர்களின் பதிவு நவம்பரில் தான் நடைபெறும். இதற்கு முன்பும், முறைகேடாக மாணவர்கள் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவ கல்வி இயக்ககத்துடன் ஆலோசித்து 2017 - 18 முதல், மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதா சேஷய்யன், துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை.

கோவை மாணவர்களிடம் விசாரணை

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தர்மபுரியைச் சேர்ந்த ஒரு மாணவியின் புகைப்படம் வேறுபட்டு இருப்பது தெரிந்தது. இவர்கள் நீட் தேர்வில் முறையே 351 437 மதிப்பெண்கள்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மாணவர் மாணவி மற்றும் அவர்களின் பெற்றோரிடமும் கல்லுாரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையை சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்துள்ளது. 'மருத்துவ கல்வி இயக்குனர் முன் ஆஜராகி விளக்கம் அளித்து தடையில்லா சான்று பெற வேண்டும்' என இருவருக்கும் கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து இருவரும் நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர். மருத்துவ கல்வி இயக்குனர் மாணவர் சேர்க்கை செயலர் ஆகியோர் அரசு பணி காரணமாக டில்லிக்கு சென்றிருந்ததால் விசாரணை நடத்தப்படவில்லை. இன்று விசாரணைக்கு வருமாறு அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்'பள்ளியில் படித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீட் தேர்வு 'ஹால் டிக்கெட்'டிற்கு கொடுத்து இருந்தோம். இதனால் புகைப்படம் வேறுபாடு உள்ளது. இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரிடம் தெரிவிப்போம்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024