Tuesday, September 24, 2019

மருத்துவம் தெளிவோம் 01: அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்




டாக்டர் கு. கணேசன்

கு. கணேசன்

பத்து மாதக் குழந்தையைக் கூப்பிடுகிறீர்கள். அது திரும்பிப் பார்க்கவில்லை. அந்தக் குழந்தையைக் கொஞ்சுகிறீர்கள். அது முகம் பார்த்துச் சிரிக்கவில்லை; மழலையில் பேசவில்லை அல்லது சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருக்கிறது. குழந்தை பேசுவது உங்களுக்குப் புரியவில்லை. அப்படியென்றால், அந்தக் குழந்தைக்கு ‘ஆட்டிசம்’ இருக்கச் சாத்தியமிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டுகிறது; இந்தியாவில் ஒரு கோடிப் பேர். இன்னும் 10 ஆண்டுகளில் இது 5 மடங்கு அதிகரிக்கும் என்று அச்சுறுத்துகிறது ஒரு புள்ளிவிவரம்.

ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் ஒரு நோயல்ல; குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் மொழித் திறன், பேச்சுத் திறன், மற்றவர்களோடு கலந்து பழகும் திறன், நடத்தைத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் போன்றவற்றில் பின்தங்கி இருப்பார்கள். Autistic disorder, PDD, `Asperger’ என இதில் பல வகை உண்டு. எனவே, இதை `ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ (Autism Spectrum Disorder - ASD) என்கிறது மருத்துவ உலகம். இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எனவே, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் திறமையும் சரி, சிக்கல்களும் சரி தனித்துவமானவை.

ஆட்டிசம் ஏன் வருகிறது? தடுப்பூசி போடுவதால் இது வருமா?


குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை ஆட்டிசத்துக்கு அடிப்படைக் காரணம். அதனால்தான் இது பரம்பரையாக வருகிறது. நெருங்கிய உறவுத் திருமணமும் மிகவும் தாமதமான திருமணமும் தாமதமான குழந்தைப் பேறும் ஆட்டிசத்துக்குக் காரணங்களாகின்றன. கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்சினை இருந்தால் அல்லது ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம்.

கர்ப்பிணியிடம் காணப்படும் மன அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைப்பிடித்தல், வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவது, மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுவது போன்ற காரணிகள் குழந்தைக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவதைத் தூண்டுகின்றன. தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் வருகிறது என்பதற்கு அறிவியல் ஆதாரமில்லை.




ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன? அவற்றை எப்போது அறியலாம்?

# குழந்தைக்குப் பாலூட்டும் போது தாயின் கண்களைக் குழந்தை பார்க்காது;
# ஆறு மாதம் ஆனால்கூடத் தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது;
# ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது.
# கண்ணில் படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது; அவற்றை விளையாடத் தரும்படி கேட்காது;
# ‘டாட்டா’ காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது;
# மற்ற குழந்தைகளுடன் விளையாட விரும்பாது;
# தனக்குத் தேவையானதை விரலால் சுட்டிக் காட்டாது;
# அடுத்தவரின் கைபிடித்துச் சென்றுதான் காட்டும்.
# குழந்தையின் வளர்ச்சிப் படிகளில் தாமதம் ஏற்படும்……

இப்படி இதன் அறிகுறிப் பட்டியல் நீள்கிறது. இந்த அறிகுறிகள் குழந்தையிடம் தெரிந்தால் போகப்போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர் எண்ணிவிடக் கூடாது. அதேவேளையில் இவற்றில் சில அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்கு, ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக் கூடாது. பல அறிகுறிகள் இருந்து, குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்குள் இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்துகொள்ளலாம். குழந்தைக்கு 3 வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்துக்கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

என்ன சிகிச்சை உள்ளது?

ஆட்டிசத்துக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. அன்பும் அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலில் பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையப் பேச வேண்டும், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங், யோகா போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகள் அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்து வதுடன், தத்தம் வேலை களைத் தாமே சுயமாகச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை யையும் தரும்.

இந்தக் குறைபாட்டின் ஆரம்ப கட்டத்திலேயே மொழிப் பயிற்சிக்கும் பேச்சுப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத் திறன் பயிற்சிகள் போன்றவற்றையும் முறைப்படி தர வேண்டும். பேச வேண்டும், பழக வேண்டும் என்பது போன்ற எண்ணங் களைக் குழந்தையிடம் ஏற்படுத்துவதற்குத் தாயின் பங்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.

எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்?

இதற்கெனத் தனியார் பயிற்சி மையங்கள் பெருநகரங்களில் இருக்கின்றன. அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இந்தப் பயிற்சிகளை இலவசமாகப் பெறலாம். தொடர்ந்து பயிற்சிகள் அளித்தால் இவர்களும் மற்ற குழந்தைகளுக்கு நிகராக வாழ முடியும். மேலைநாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஐம்பது வயதைத் தாண்டியும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். சர் ஐசக் நியூட்டன், பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சில பிரபலங்கள்; அரிய சாதனைகளால் உலக வரலாற்றில் இடம் பிடித்தவர்களும்கூட!
இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் இ- சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித் துள்ள நிலையில், நாடு முழுவதும் இ-சிகரெட்டு களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இ-சிகரெட்டினால் ஏற்பட் டுள்ள திடீர் மரணங்கள் அதன் உற்பத்தியை உலகம் முழுக்க மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024