தொடரும் மருத்துவர்களின் தற்கொலைகள்: அரசு என்ன செய்ய வேண்டும்?
சிவபாலன் இளங்கோவன்
உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளையும் கருத்தரங்கங்களையும் விழிப்புணர்வு முகாம்களையும் நாம் நடத்திக்கொண்டிருந்த அதே வேளையில், ‘வேலைச் சுமை தாங்க முடியாததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று எழுதிவைத்துவிட்டு ஒரு முதுகலை படிப்பு பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ‘வேலைச் சுமை தாங்க முடியாததால்’ என்ற வரி நமக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
ஒரு தற்கொலை நடக்கும்போது நாம் அதற்கான காரணங்களை வைத்தே அந்தத் தற்கொலையை மதிப்பிடுகிறோம். தற்கொலைகளைத் தடுக்கும் பெரும் பணியில் நாம் இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்பதற்கு நமது இந்த அணுகுமுறைதான் காரணம். ஒன்று, தற்கொலைகளைப் புனிதப்படுத்துகிறோம் அல்லது மட்டம் தட்டுகிறோம். ‘இதெற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்ளலாமா?’ அல்லது ‘தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவளை விரும்பினான்’ என்பதுபோலவே நமது புரிதல்கள் இருக்கின்றன.
தடுக்க என்ன வழி?
உண்மையில், ஒரு தற்கொலை நிகழும்போது தற்கொலைக்கு உண்டான அந்தக் குறிப்பிட்ட மனநிலையையும், அந்தக் குறிப்பிட்ட மனநிலைக்கு அந்த மனிதன் வந்தடைந்த பாதையையும் பார்க்க வேண்டுமே தவிர, அதற்கான காரணங்களையோ, அந்நபரின் ஆளுமையையோ அல்ல. ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மிக நீண்ட பாதையொன்று இருக்கிறது. அந்தப் பாதையில் நம்மையெல்லாம் கடந்துதான் அந்நபர் நிராதரவாகச் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணராத வரை தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
நெருக்கும் அதீதப் பணிச்சுமை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிகழும் பாகுபாடுகள், வரம்பற்ற அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக அண்மைக் காலங்களில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டே வருகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளில் இந்த நெருக்கடிகளின் விளைவாகப் பயிற்சி மருத்துவர்களின் தற்கொலைகளும் ஆங்காங்கு நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தப் போராட்டங்களையும் தற்கொலைகளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாமல் பொதுச் சமூகமும் கடந்துசெல்வதற்குக் காரணம், இதைப் பயிற்சி மருத்துவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகவும், அந்த மருத்துவரின் தனிப்பட்ட பலவீனமாகவும் புரிந்துகொள்வதால்தான். உண்மையில், இது அவர்களது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மருத்துவக் கல்லூரிகளில் நிகழும் ஆரோக்கியமற்ற சூழலே இதுபோன்ற தொடர் தற்கொலைகளுக்குக் காரணம்.
ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வருகின்றனர். ஆனால், அத்தனை பேரையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கையும் மருத்துவக் கட்டமைப்பும் அங்கு இல்லை. ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளின் முதல் தொடர்பே பயிற்சி மருத்துவர்கள்தான். மூத்த மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான நேரடி உரையாடல் என்பது மிக மிக அரிது. அப்போது அந்த நோயாளியின் வைத்தியம் தொடர்பாக அந்த மருத்துவமனையில் இருக்கும் போதாமைகளால் அந்தப் பயிற்சி மருத்துவரே நேரடியாகப் பாதிக்கப்படுகிறார். அதனால்தான், மருத்துவர்களுக்கு எதிரானப் பொதுமக்கள் ஈடுபடும் வன்முறைகளில் தாக்கப்படுவது பெரும்பாலான நேரத்தில் பயிற்சி மருத்துவர்களாகவே இருக்கின்றனர். ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் அடிப்படை வசதிகளின் போதாமைகளுக்குப் பயிற்சி மருத்துவரே நேரடியாகப் பலியாகும் சூழல்தான் இங்கு இருக்கிறது. ‘அரசுப் பள்ளி சரியில்லை என்றால், அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்தான் காரணம்’ என்ற மேலோட்டமான புரிதல்போலவே ‘அரசு மருத்துவமனை சரியில்லை என்றால், அரசு மருத்துவர்தான் காரணம்’ என்ற புரிதல்தான் இருக்கிறது. இந்த மனப்பான்மையை ஊதிப் பெருக்குவதன் வழியாக அரசு நழுவிக்கொள்கிறது.
அயற்சியூட்டும் பயிற்சி மருத்துவப் பணி
ஒரு பயிற்சி மருத்துவரின் பணி என்பது நிச்சயம் உடலளவிலும் மனதளவிலும் அயற்சியானது. வாரத்துக்கு இருமுறை கிட்டத்தட்ட முப்பத்தாறு மணி நேரத் தொடர் பணி, தூக்கமின்மை, மூத்த மருத்துவர்களின் கேலிப்பேச்சுகள், அதிகாரம், பாரபட்சம், பிற பணியாளர்களின் ஒத்துழையாமை போன்றவற்றுக்கு இடையேதான் அவர்கள் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டும். ஓய்வற்ற, நெருக்கடியான மனநிலையில் அவர்கள் செய்யும் சிறு தவறுகள்கூட நோயாளிகளின் உடல்நிலையைப் பாதிக்கக்கூடியது. அப்படி நேரும் தவறுகள் இன்னும் அவர்களது மனநிலையை மோசமாக்கும்.
சமீபத்தில் நிகழ்ந்த ஆய்வுகளின்படி கிட்டத்தட்ட முப்பதிலிருந்து ஐம்பது சதவீதப் பயிற்சி மருத்துவர்கள் தீவிர மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறில் ஒரு பயிற்சி மருத்துவருக்குத் தற்கொலை எண்ணம் இருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் விஷயம். அதீதப் பணிச்சுமையும் ஆரோக்கியமற்ற சூழலும்தான் அவர்களின் மனரீதியான பிரச்சினைகளுக்கு முதன்மையான காரணம்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரு பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொள்ளும்போது, அதை அவரின் தனிப்பட்ட ஆளுமைக் குறைபாடாகச் சித்தரிப்பதை விட்டுவிட்டு, திறந்த மனதுடன் அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். பயிற்சி மருத்துவர்களின் பணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான ஓய்வையும் இளைப்பாறும் வழியையும் உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கான சுதந்திரமான, அதிகாரத் தலையீடுகள் எதுவுமற்ற குறைதீர்ப்பு மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு கலை, இலக்கிய விழாக்கள் கல்லூரி நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்த மருத்துவர்கள் நிரப்பப்பட வேண்டும். மூத்த மருத்துவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்குமான உறவை மேம்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். ஒரு மருத்துவமனை எந்த அளவுக்கு அதன் மருத்துவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் சாதகமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது நோயாளிகளுக்கும் சாதகமானதாக இருக்கும். அப்படி ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கான முதல் கடமை.
- சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: sivabalanela@gmail.com
No comments:
Post a Comment