Saturday, September 21, 2019

எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் ஆள் மாறாட்டம் டாக்டர் குடும்பம் ஓட்டம்; உதவிய அதிகாரிகள் யார்?

Updated : செப் 21, 2019 00:20 | Added : செப் 20, 2019 22:47

சென்னை,: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், ஆள்மாறாட்டம் செய்வதற்கு, உதவிய அதிகாரிகள் யார் யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட, டாக்டர் குடும்பம் தலைமறைவாகி உள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேஷன்; சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.இவரது மகன், உதித் சூர்யா, இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சியடைய வில்லை.

சந்தேகம்

இந்தாண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதி, 385 மதிப்பெண்கள் பெற்று, கவுன்சிலிங்கில், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார். மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் தேனி மருத்துவ கல்லுாரி முதல்வருக்கு, இம்மாதம், 11 மற்றும் 13ல், புகார் ஒன்று வந்தது. அதில், உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்து, கல்லுாரியில் சேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.

விசாரணையை துவங்கிய, பேராசிரியர் குழுவினர், ஆள்மாறாட்டம் செய்ததை, புகைப்பட ஆதாரங்கள் வாயிலாக கண்டுபிடித்தனர். இதையடுத்து, மாணவரிடமும், பெற்றோரிடமும், மருத்துவ கல்லுாரி நிர்வாகம் விசாரித்துள்ளது. அப்போது, படிப்பை கைவிடுவதாக, மாணவர் கடிதம் அளித்துள்ளார்.இது குறித்த செய்திகள் வெளியே கசிந்ததும், ஒரு வாரத்திற்கு பின், போலீசில் கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

இதனால், இந்த மோசடிக்கு, கல்லுாரி நிர்வாகம் உதவியுள்ளதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ் தான் சரிபார்க்கப் படும்; உதித் சூர்யா விவகாரத்தில், யாருடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினரும் உதவினரா என்ற, சந்தேகம் உள்ளது.

இதற்கிடையில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய, மாணவனின் குடும்பத்தினர், தலைமறைவாகி உள்ளனர்.தனிப்படை போலீசார், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், டாக்டர் வெங்கடேஷன் குறித்து விசாரித்தனர். டாக்டர் குடும்பம் பிடிபட்டால் மட்டுமே, இந்த விவகாரத்தில், உண்மை வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது.

விசாரணை


இந்த சம்பவம் குறித்து, தேனி மருத்துவ கல்லுாரி முதல்வர், மருத்துவ கல்வி இயக்குனர், நாராயணபாபுவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதையடுத்து, முறைகேடு தொடர்பாக, விரிவான ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நேற்று துவங்கின. சென்னை மருத்துவ கல்லுாரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை உடன் வைத்து, அவர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில்,சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்,மருத்துவ சுற்றுலா கண்காட்சியை துவக்கி வைத்த பின், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது:நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்தின் வாயிலாக, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையும் நடக்கிறது. நீட் தேர்வை, தமிழக அரசு நடத்தவில்லை; மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. இதற்கு, தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'மனித தன்மை வேண்டும்'

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் அளித்த பேட்டி:தேனி மருத்துவ கல்லுாரியில் நடந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க, பல்கலை.,யின் இணைப்பு கல்லுாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். விபரங்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தால், 24 மணி நேரத்திற்குள் பல்கலைக்கு தெரிவிக்க வேண்டும்.

பல்கலைக்கும், மாணவர் சேர்க்கைக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம்.மருத்துவ துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில், முறைகேட்டில் ஈடுபட வேண்டாம்; எந்த துறையும் தரக்குறைவானது அல்ல. வயதில் சிறியவர்கள் முறைகேட்டில் ஈடுபட, பெரியவர்கள் உறுதுணையாக இருக்க கூடாது. அனைவரும், மனித தன்மையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...