Saturday, September 14, 2019

மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்!

By DIN  |   Published on : 14th September 2019 03:40 PM 
mahalaya-amavasai-3

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் மஹாளயபட்சம் ஆரம்பமாகும். இது, 15 நாட்கள் அதாவது புரட்டாசி மாதத்தில் வரும் (17.09.19 - 28.09.19) அமாவாசை வரையிலான காலம் மஹாளயபட்சமாகும்.
பித்ருக்களின் ஆராதனைக்கு உகந்த காலம் என்றும் சொல்லலாம். மஹாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மஹாளய பட்சமாகும். முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமாகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மைக் காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். அவன் வாழ்க்கையில் எப்பாடுபட்டேனும் முன்னுக்கு வந்துவிடுவான். ஆக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டை சுத்த பத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

மஹாளயபட்சம் தொடங்கி அதாவது பிரதமை முதல் சதுர்த்தசி முடியும் வரை உள்ள ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்ப்போம். 
* முதல்நாள் - பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.
* இரண்டாம் நாள் - துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.
* மூன்றாம் நாள் - திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
* நான்காம் நாள் - சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.
* ஐந்தாம் நாள் - பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
* ஆறாம் நாள் - சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும்.
* ஏழாம் நாள் - சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்யோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
* எட்டாம் நாள் - அஷ்டமி திதியில் தர்ப்பணம் செவதால் அறிவாற்றல் பெருகும்.
* ஒன்பதாம் நாள் - நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்
பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
* பத்தாம் நாள் - தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
* பதினொன்றாம் நாள் - ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.
* பனிரெண்டாம் நாள் - துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
* பதின்மூன்றாம் நாள் - திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.
* பதினான்காம் நாள் - சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.
* பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை நாளாகும்.

இடைவிடாது தொடர்ந்து 15 நாட்களும் தர்ப்பணம் செய்தால் நம் முன்னோர்களின் ஆசியுடன், நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...