மரணம் கற்பிக்குமா பாடம்?
By வி. குமாரமுருகன்பேனர் கலாசாரம் கூடாது என நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும்கூட, அவை காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன என்பதை வியாழக்கிழமை நடைபெற்ற விபத்து வெளிப்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீ(23), பைக்கில் சென்ற போது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்தது; அதன் விளைவாக கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி அவர் உயிரிழந்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர் சுபஸ்ரீயின் உயிரைப் பறித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வின் கவனத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் சட்டவிரோத பேனர் கலாசாரத்தை அதிகாரிகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். சட்டவிரோத பேனர் வழக்கு தொடர்பான பதில் மனுவில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்; ஆனால், தற்போது ஓர் உயிர் பலியாகிவிட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது? குடிமக்களின் உயிர் அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா, மனித உயிர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை இவ்வளவு தானா? திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா, பேனர் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாதா உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்பெல்லாம், சுவரில் எழுதப்படுவது வழக்கத்தில் இருந்தது. தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படுவது தொடங்கியது. அதன் பின் தொடங்கிய இத்தகைய பிளக்ஸ், பேனர், கட்-அவுட் கலாசாரம் முடிவதாகத் தெரியவில்லை. சிறு குழந்தைகளுக்கான விழா தொடங்கி அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசு விழாக்கள் குறித்த அறிவிப்புகள், பிறந்த, இறந்த தின நிகழ்வுகள், பள்ளி விளம்பரங்கள், தனியார் நிறுவன போர்டுகள்...இப்படி நீண்டு கொண்டே செல்கிறது பட்டியல். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, விழா நடத்துவோர், மாணவர்கள், மக்கள் என எல்லோரும் விளம்பரங்களை விரும்புவதால்தான் நீதிமன்றங்கள் பலமுறை கூறியும் கூட பேனர் கலாசாரம் தொடருகிறது.
மேலும், போட்டி போட்டுக் கொண்டு பேனர் வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த கட்சித் தலைவர் வரும்போது இந்தப் பகுதியில் 20 பேனர் வைத்திருந்தனர். நாம் 21-ஆவது வைக்க வேண்டாமா? என்ற தலைவரின் விருப்பத்துக்காக தொண்டர்களும் வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெடுஞ்சாலையில் அந்தக் கட்சியினரைவிட நாம்தான் அதிக தொலைவுக்கு கட்-அவுட்டுகள் வைக்க வேண்டும். பேனர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்தக் கலாசாரம் என்னவோ மனித மூளையை ஆக்கிரமித்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது, சாலையின் இருபுறமும் குழிகள் தோண்டி வரவேற்பு வளைவுகள் வைப்பதும் நடைபெறுகிறது.இந்த குறுகிய வளைவிற்குள் நுழைந்துதான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதால் எதிரெதிரே வரும் இரண்டு வாகனங்கள் வளைவுக்குள் நுழைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது.
பெரும்பாலும் தலைவர்கள் வரும் சாலையில் இவை அமைக்கப்படுவதால், ஏற்கெனவே முடங்கும் சாலைப் போக்குவரத்து, இந்த வரவேற்பு வளைவுகளாலும் கூடுதல் நேரம் முடங்குவதும் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன.
இவை எல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியும் என்றாலும்கூட ஆளும் கட்சி பேனர் வைக்கும் போது தடுக்க முடியாத அதிகாரிகள், எதிர்க்கட்சியினர் வைக்கும்போது தடுத்தால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதற்காக கண்டுகொள்வதில்லை. அதையும் தாண்டி எதிர்க்கட்சியினர் வைக்கும் பேனரை அகற்ற நினைத்தால், ஆளும் கட்சியினர் வைக்கும் பேனர்களுக்கு அனுமதி அளித்தீர்களே என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு உருவாகும் என்பதால், அதிகாரிகள் பலரும் இது குறித்துக் கவலைப்படுவதில்லை என்று தோன்றுகிறது.
சரி, பூனைக்கு மணி கட்டுவது யார் எனற கேள்விக்கு விடையாக நீதிமன்றம் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதையடுத்து பேனர் வைக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து விட்டனர்.
பேனர் வைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து விட்டார். பாமக, விசிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பேனர் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தி விட்டனர். தலைவர்கள் அறிவுறுத்திவிட்ட நிலையில், கட்சியினர் அதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
உயர்நீதிமன்றம் சொல்வதுபோல், வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ள பாதை தலைவர்களுக்கு வழிகாட்டும் பாதை அல்ல. தொண்டர்களுக்கு வழிகாட்டுபவர்களாக தலைவர்கள் மாறிவிட்டால், பேனர் பா(போ)தை ம(றை)றந்து விடும். நல்ல பாதை நம் கண் முன் நிற்கும். சுபஸ்ரீ மரணம் அனைவருக்கும் பாடம்.
No comments:
Post a Comment