Tuesday, October 8, 2019

48,000 பஸ் ஊழியர்கள் தெலுங்கானாவில் நீக்கம்; முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு

Updated : அக் 08, 2019 00:09 | Added : அக் 07, 2019 21:03

ஐதராபாத்: தெலுங்கானாவில் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை முதல்வர் சந்திரசேகர ராவ் வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வழித்தடங்களிலும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை தனியாருக்கு குத்தகைக்கு விடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,4ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தெலுங்கானாவில் தினமும் ஒரு கோடி பேர் போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணித்து வந்த நிலையில் பண்டிகை காலத்தில் நடக்கும் இந்த போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அக்.,5ம் தேதி மாலைக்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென முதல்வர் சந்திரசேகர ராவ் கெடு விதித்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் இதை பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்களையும் உடனடியாக வேலையிலிருந்து நீக்கி முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார்.

அவர் கூறியதாவது: இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் பஸ் போக்குவரத்தை அதிகம் நம்பியுள்ளனர். இது போன்ற நேரத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.

தெலுங்கானா போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே 1,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. தற்போது நடக்கும் போராட்டத்தால் இந்த நஷ்டம் 5000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. நிலைமையை சீராக்க மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டிரைவர், கண்டக்டர்களாக தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் டிரைவர்களும் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வழித்தடங்களிலும் தனியார் பஸ்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்படும். அரசு பஸ்களில் குறிப்பிட்ட பஸ்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் சில நாட்களில் இயல்புநிலை திரும்பி விடும். போக்குவரத்து ஊழியர்களின் மிரட்டலுக்கு அரசு அடிபணியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களால் போக்குவரத்தில் பெரும் குளறுபடி ஏற்படுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. போதிய பயிற்சி இல்லாதவர்கள் டிரைவர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகம் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் கண்டக்டர்களாக பணியாற்றுவோர் பயணியரிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கோர்ட்டில் முறையிட முடிவு:

போராட்டம் குறித்து தெலுங்கானா போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் அஸ்வத்தாமா கூறியதாவது: போராட்டம் நடத்திய ஊழியர்களுக்கு முறையான அறிவிப்போ 'நோட்டீசோ' தராமல் அவசரம் அவசரமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். போராட்டம் குறித்தும் அதற்கான விதிமுறைகள் குறித்தும் எங்களுக்கும் தெரியும். நம் நாட்டில் சட்டம் உள்ளது. அதை மீறி எதுவும் செய்து விட முடியாது. இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் பெறுவோம். தெலுங்கானா மாநில அரசு எங்களை புழு பூச்சிகளை போல நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு அக்.,10ல் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024