Sunday, October 6, 2019

லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த எஸ்ஐ பாரத நேரு

By ENS | Published on : 05th October 2019 03:24 PM |



திருவாரூர்: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் திருடிய கொள்ளையர்களை பைக்கில் துரத்திச் சென்று பிடித்து, கொள்ளைச் சம்பவம் குறித்து துப்புத் துலங்க உதவிய எஸ்ஐ பாரத நேருவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்த நிலையில், திருவாரூரில் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்த பாரத நேருதான், குற்றவாளிகளில் ஒருவரை கையும் களவுமாக பிடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

எஸ்ஐ நேருவும், இதர காவலர்களும் வழக்கம் போல வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனம் ஒன்று அவர்களைப் பார்த்ததும் வேறு திசையில் வேகமாகச் சென்றது.

பைக்கின் பின்னால் சென்ற குற்றவாளியைப் பார்த்ததுமே பாரத நேருவுக்குத் தெரிந்து விட்டது, வெகு நாளாகத் தேடப்படும் குற்றவாளி மணிகண்டன் என்பது. உடனடியாக தனது புல்லட்டை எடுத்துக் கொண்டு சக காவலருடன் குற்றவாளிகளைத் துரத்திச் சென்றார்.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சினிமாக் காட்சிகளைப் போல குற்றவாளிகளை விடாமல் துரத்திச் சென்ற பாரத நேரு, மணிகண்டனைப் பிடித்துவிட்டார்.

அவனுடன் வந்த மற்றொரு குற்றவாளி சுரேஷ் தன்னிடம் இருந்து நகைப் பையை வீசி எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டான்.

திருவாரூர் காவல் நிலையத்துக்கு, திருடிய நகைகளோடு பிடித்து வந்து மணிகண்டனை விசாரித்த போது, லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பலில் தானும் ஒருவர் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் திருடிய கொள்ளையர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

சாமர்த்தியமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த பாரத நேரு உள்ளிட்ட காவலர்களுக்கு பல வகைகளில் பாராட்டு குவிகிறது.

எம்.பி.எட் பட்டதாரியான பாரத நேரு, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல்துறை துணை ஆய்வாளராக திருவாரூர் நகர காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024