Wednesday, October 9, 2019

தற்கொலையின் தூதர்கள் 
 Published : 05 Oct 2019 09:50 am



டாக்டர். ஆ. காட்சன்

அக்டோபர் 10: உலக மனநல நாள்


சமீபத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்பு என்னிடம் பேசிய ஆசிரியர் ஒருவர் ‘நீங்க சொல்ற மாதிரி நாங்க பசங்களைக் கொஞ்சம்கூடக் கண்டிக்க முடியலை சார். பிரம்பை ஓங்கினாலே, சார் சன் டிவியா, தந்தி டிவியா எந்த டிவி நியூஸ்ல வரனும்னு முடிவு பண்ணிக்கோங்க’ என்று மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.

மன உளைச்சலின் உச்சக்கட்டத்திலோ வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலோ மனநோய்களின் தாக்கத்தாலோ தற்கொலைதான் தீர்வு என்று முடிவெடுத்த காலம் மாறி, சிரித்துவிட்டுக் கடந்துசெல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம் சீரியஸாக முடிவெடுக்கும் தற்போதைய போக்கு பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால்தான் என்னவோ உலக சுகாதார நிறுவனமும் ‘தற்கொலைத் தடுப்பில் கவனம் செலுத்துவோம்’ என்ற மையக்கருத்தை இந்த ஆண்டு உலக மனநல நாளில் முன்வைத்துள்ளது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை மரணம் நடக்கிறது என்று இந்நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.


எல்லாம் குடி மயம்

வீட்டுக்குள் விஷப்பாம்பை வைத்துக்கொண்டு யாரும் மூட்டைப்பூச்சியை நசுக்குவதற்கு நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் மதுபோதையால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள். தற்கொலை முயற்சி செய்து, காப்பாற்றப்பட்டு, மனநல ஆலோசனைக்காக என்னிடம் வந்த சுமார் 230 பேரை ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சிகரமான காரணம் தெரியவந்தது. இதில் கிட்டத்தட்ட ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருந்தனர்.

இதில் ஆண்களில் சுமார் 41 சதவீதத்தினர் மது அருந்திய பிறகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் (83%) குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு காரணமும் இன்றி போதையில் இருந்தபோது தானாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து மது அருந்துவது தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் தன்மை கொண்டது என்பதும், போதையில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் தெளிவாகிறது.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம்

பெண்களிடம் குடிப்பழக்கம் அதிகம் இல்லை என்பதால் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள் என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இதே ஆய்வு, திருமணமான பெண்களில் 24.4 சதவீதத்தினரின் தற்கொலை முடிவுக்குக் காரணம் கணவனின் குடிப்பழக்கம்தான் என்றும் கூறுகிறது. குடிபோதையில் கணவனால் தாக்கப்படுவது, சந்தேகம் போன்ற நேரடிக் காரணங்கள் முதல் கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்ப அமைதி இழப்பு, சமூகத்தில் அவமானம், கடன், குழந்தைகளையும் எதிர்காலத்தையும் குறித்த பயம் போன்ற மறைமுகக் காரணங்களும் இதில் அடங்கும். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனின் குடிப்பழக்கத்தை மாற்ற முடியாமல் திணறி, என்ன செய்வது என்று தெரியாமல் உதவி கேட்டு ஒரு கதறலின் வெளிப்பாடாகவே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்

யார் ஆபத்பாந்தவன்?

பெரும்பாலான தற்கொலை எண்ணங்கள் உணர்ச்சிவசப்படுதலின் உச்சத்தில், நொடிப்பொழுதில் தற்கொலை முயற்சியாக மாறிவிடுகின்றன. அதைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது பூச்சிக்கொல்லி, மாத்திரைகள், கயிறு போன்ற தற்கொலை செய்துகொள்வதற்கான முறைகள் எளிதில் கிடைப்பதுதான் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மதுபானங்கள் எங்கும் எளிதில் கிடைப்பதுதான் சுமார் மூன்றில் ஒரு பங்கு தற்கொலை முயற்சிகளுக்குக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. தற்கொலை முயற்சி மரணமாக முடிந்த சம்பவங்களை இதில் சேர்த்தால் பாதிப்பின் தீவிரம் இன்னும் அதிகமாகவே தெரியும்.

அரசு மருத்துவமனைகளில் பெண்கள், குழந்தைகளைத் தவிர்த்து உள் - வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் மதுவால் உடல் - மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்றால் மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகளை நுகர்வோராகவும், செலவினங்களை அதிகரிப்பவர்களாகவும் இவர்களைக் கருதுவதில் தவறேதும் இல்லை. ஒருபுறம் அரசு - தனிநபரின் வீண் பொருளாதார விரயமாக இருக்கும் மதுபானம், இன்னொரு புறம் அரசின் முக்கிய வருவாயாகக் கருதப்படுவது, பழைய படம் ஒன்றில் நாகேஷ் கீழே கிடந்த நாலணாவை ஓட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஓட்டலில் சாப்பிடச்சென்ற காமெடி போன்றதுதான் இது.

இன்னொரு பக்கம்

மதுப்பழக்கம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இருபது வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பதின் பருவத்தினரின் பாதை வேறு வழியாகத் தற்கொலை உலகுக்குள் நுழைகிறது. ஸ்மார்ட்போன், விலையுயர்ந்த பைக், இரண்டும் இல்லாவிட்டால் உலகில் வாழத் தகுதியற்றவர்கள் அல்லது தரம் குறைந்துபோனவர்கள் என்ற மாயையான தோற்றமும் படிப்பில் ஒரு மதிப்பெண் குறைந்தால்கூடத் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாகக் கருதும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் தற்போது முன்னிலையில் நிற்கும் தற்கொலை மிரட்டல், முயற்சிகளுக்கான காரணங்கள்.

பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு ‘செய் அல்லது செத்து மடி ‘ என்ற நனவிலி மனக்கோட்பாடுகளோடு நிர்ப்பந்திக்கும் பெற்றோர்கள், படிப்பைக் கற்றுக்கொடுப்பதில் தங்கள் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று காட்டும் முயற்சியில் மாணவர்களை வாழக் கற்றுக்கொடுக்கத் தவறிய பள்ளிகள் என இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் எக்கச்சக்க பொதுத்தேர்வுகளும், நுழைவுத்தேர்வுகளும் வேறு.

கனடாவிலுள்ள டொரண்டோ நகரின் உயரமான பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வது 2004 வரை அங்கு பிரபலமான ஒன்று. இந்த ஆண்டில் பாலத்தைச் சுற்றிலும் தடுப்புவேலி அமைத்த பிறகு ஆண்டுக்கு 9 ஆக இருந்த தற்கொலை மரணங்கள், வருடத்துக்கு 0.1 ஆகக் குறைந்துவிட்டதாம். இதைப் போன்ற ஏராளமான ஆய்வுகளில் ஒரு சிறிய மாற்றத்தால் தற்கொலைகள் பெரிய அளவில் தடுக்கப்பட முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க மேற்கூறிய பெரிய காரணங்களைக் கவனத்தில் கொண்டு அரசு, தனிமனிதனால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சமுதாய - கொள்கை மாற்றமும் பல உயிரிழப்புகளைத் தவிர்ப்பதுடன் பொருளாதார விரயங்களையும் குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கட்டுரையாளர்,
மனநலமருத்துவர், உதவிப்பேராசிரியர்,
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...