Wednesday, November 13, 2019

வேலை இல்லாமல் 10 ஆயிரம் டாக்டர்கள்

Added : நவ 13, 2019 00:34

சென்னை : ''டாக்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது,'' என, மருத்துவ கவுன்சில் துணை தலைவர் சுரேந்திரன் கூறினார்.

தமிழக மருத்துவ கவுன்சில் துணை தலைவர் சுரேந்திரன் அளித்த பேட்டி: தமிழக மருத்துவ கவுன்சிலில், 1.40 லட்சம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1.15 லட்சம் பேர், தமிழகத்தில் பணியாற்றுகின்றனர். உலக சுகாதார நிறுவனம், ஆயிரம் பேருக்கு, ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என, வரையறை செய்துள்ளது. தமிழகத்தில், 719 பேருக்கு, ஒரு டாக்டர் உள்ளனர்.மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது;

டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஆயிரம் பேருக்கு, இரண்டு டாக்டர்கள் என்ற, நிலை வரும். டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்பு இழக்கும் சூழல் ஏற்படும். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், வேலை இல்லாமல் உள்ளனர்.எனவே, டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக, மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்கவும், ஆடம்பரத்துக்காகவும், டாக்டருக்கு படிக்க வேண்டாம் என்ற, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆண்டுக்கு, 4,500 பேர், எம்.பி.பி.எஸ்., முடிக்கின்றனர். அவர்கள், முதுநிலை மருத்துவம் படிக்க, அதற்கான இடங்களை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்த பரிந்துரைகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024