Sunday, November 17, 2019

தேர்தல் பிரசாரம் செய்த அரசு ஊழியரின் பணி நீக்கம் ரத்து சரியானதே: ஐகோர்ட்

Added : நவ 16, 2019 20:10

சென்னை:தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த, அரசு ஊழியர் பணி நீக்கத்தை ரத்து செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நெடுஞ்சாலை துறையில், திருவண்ணாமலை கோட்டத்தில், விநாயகமூர்த்தி என்பவர் உதவியாளராக பணியாற்றினார்.கடந்த, ௨௦௧௧ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் பிச்சாண்டிக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்ததாக, விநாயகமூர்த்திக்கு எதிராகநடவடிக்கை எடுக்க, தேர்தல் மேற்பார்வையாளர் பரிந்துரைத்தார்.விசாரணை நடத்திய துறை அதிகாரிகள், விநாயகமூர்த்திக்கு, மூன்று ஆண்டுகளுக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இது குறித்த அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. வழங்கப்பட்ட தண்டனை போதுமானது அல்ல என, கலெக்டர் தரப்பில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, விநாயகமூர்த்தியை பணி நீக்கம் செய்து, நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விநாயகமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது. மூன்றாண்டு ஊக்க ஊதியத்தை ரத்து செய்ததே போதுமானது என்றும், உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, உயர் நீதிமன்ற, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024