Tuesday, November 12, 2019


திரை வெளிச்சம்: அவசரம் காட்டாத நவரச நாயகன்!



க.நாகப்பன்

புத்தாயிரத்தின் தமிழ் சினிமா வரலாற்றில் அதிர்ஷ்டசாலி நடிகர் யாரென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு கார்த்தி என்று சொல்லிவிடலாம். பத்து ஆண்டுகள் நடிப்புப் பயணத்தில் அல்லது பத்து படங்களில் ஒரு நடிகருக்குக் கிடைக்கும் அனுபவமும் பெயரும் அவரது அறிமுகமான ‘பருத்திவீரன்’ படத்திலேயே கிடைத்தது என்றால் அது மிகையில்லை.

அறிமுகப் படத்திலேயே மிகப் பெரிய ஓப்பனிங், இமாலய வெற்றி, ரசிகர் மன்றம் என்று கார்த்திக்குக் கிடைத்த வரவேற்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ‘பராசக்தி’ படத்தின் மூலம் சிவாஜிக்குக் கிடைத்த அதே வாழ்த்தும் பாராட்டும் ‘பருத்தி வீரன்’ படம் வழியே கார்த்திக்குக் கிடைத்ததாக சினிமா ஆர்வலர்கள் சிலாகித்திருக்கிறார்கள். கார்த்தியின் சாதனை அவ்வளவு பெரிதா என்று யோசிப்பவர்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

அப்பா, அண்ணன் வழியில்..

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த கார்த்தி, அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்கில் மாஸ்டர் சயின்ஸ் படித்தார். பகுதி நேரமாக அவர் செய்த கிராபிக் டிசைனர் வேலை திருப்தியளிக்கவில்லை. அப்பா, அண்ணன் வழியில் சினிமாதான் தனக்கான பாதை என்று அவர்களின் ராஜபாட்டையில் பயணிக்கத் தீர்மானித்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் படித்து முடித்ததும் மணிரத்னத்திடம் உதவி இயக்குநர் ஆனார். ‘ஆய்த எழுத்து’ படத்தில் அண்ணன் சூர்யா நாயகனாக நடிக்க, தம்பி கார்த்தி உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். சித்தார்த்துடன் ஒரு காட்சியிலும் வந்துபோனார்.

இயக்குநராக நினைத்த க்ளீன் ஷேவ் கார்த்திதான், ‘பருத்தி வீர’னில் அடர்ந்த தாடி, தொடைக்கு மேல் டவுசர் தெரிய ஏற்றிக் கட்டிய லுங்கி, கிராமத்து வட்டார வழக்குப் பேச்சு மொழியை அப்படியே பிரதிபலிக்கும் லந்து, உடல் மொழியிலேயே தெனாவட்டைக் காட்டும் லாகவம், போதையில் திரிந்தபடி வாய்ச்சவடால் விட்டே பிறரை மிரட்டும் களியாட்டம், வாழிடத்தின் தன்மை உணர்ந்து அந்த நிலத்துக்கேற்ற மனிதராக உருமாறியது என்று மதுரை மண்ணில் சண்டித்தனம் செய்யும் இளைஞனாகவே ‘பருத்திவீர’னில் தன் கதாபாத்திரத்தை பிரதிபலித்தார்.

நவரச நாயகன்

இத்தனைக்கும் சூர்யாவின் வருகைக்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்தே கார்த்தியின் வருகை தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. அதற்காக அவர் கவலைப்படவில்லை, எண்ணிக்கை அளவில் படங்களை அதிகப்படுத்துவதில் ஆர்வமோ, அவசரமோ காட்டவில்லை. தரமான படங்களிலேயே கவனம் செலுத்தினார். இதனால் கார்த்தியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமானது.

இரண்டாம் படம் என்பது இயக்குநருக்கு மட்டுமல்ல; நடிகருக்கும் ஆசிட் டெஸ்ட்தான் என்பதை கார்த்தி நன்கு உணர்ந்திருந்தார். சிவகுமார், சூர்யா என்று நிருபணம் செய்த இரு நடிப்புக் கலைஞர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் மூன்றாம் நடிகர் என்ற புரிதலும் எச்சரிக்கையும் அவரிடம் ஊறிப்போய் இருந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மாலைநேரத்து மயக்கம்’ டிராப் ஆக, அடுத்த படமான ‘ஆயிரத்தில் ஒருவ’னில் கைகோத்தார். கார்த்திக்கு நடிப்பு வரவில்லை. நக்கலும் எகத்தாளமுமாக அந்த ‘பருத்தி வீரன்’ கெத்திலேயே இருக்கிறார் என்ற அவச்சொல் வந்துவிடாக் கூடாதென்ற மெனக்கெடல் ‘ஆயிரத்தில் ஒருவ’னில் அப்பட்டமாகத் தெரிந்தது. கூலியாக, காமெடி ரவுடியாக, தனித்தீவில் உள்ள மனிதர்களைக் கண்டு அலறிய சாமானியனாக, இயலாமையை வெளிப்படுத்தும் நம்மில் ஒருவனாக, சோழர்களின் தூதுவனாக அழுத்தமாகத் தடம் பதித்த கார்த்தி, ‘பையா’வில் நகரத்து இளைஞனாக கலகலப்பான நடிப்பைத் தந்தார். ‘நான் மகான் அல்ல’ படத்தின் மூலம் நம்ம வீட்டுப் பையன் என்ற அடையாளத்துக்குள் வந்தார். 2010-ம் ஆண்டில்தான் இந்த மூன்று படங்களும் வெளியாகி ஹிட் அடித்தன. அந்த வகையில் 2010, கார்த்தி தனது நவரசங்களையும் வெளிப்படுத்திக் காட்டிய படங்களில் தோன்றிய முக்கியமான ஆண்டு.

பாடம் கற்ற கார்த்தி

‘சிறுத்தை’ படத்துக்குக் கிடைத்த வெற்றியால் ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று வணிக சினிமாவுக்கான ரெடிமேட் நடிப்புக்குள் தன்னை ஒப்படைத்தார். கார்த்தி - சந்தானம் கூட்டணி பேசப்பட்டாலும் படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ‘பிரியாணி’ ஓரளவு வெற்றிபெற, கார்த்திக்குள் இருக்கும் இயல்பான, மிகை விரும்பா நடிகனை பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ படம் மீட்டெடுத்தது.

கதைத் தேர்வு மட்டுமே நம்மை மேம்படுத்தும் என்பதை கார்த்தி அனுபவப்பூர்வமாக உணர்ந்தார். அதனால்தான் வேறு வேறு ஜானர்களில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். காமெடி கலந்த ஆக்‌ஷனில் அசரடித்த ‘சிறுத்தை’, கம்பீரம் கலந்த கற்பனை வரலாற்றுக் கதாபாத்திரம் ஒன்றில் ‘காஷ்மோரா’, மாமன் உறவில் பிடிப்புகொண்ட ‘கொம்பன்’, உடைந்த குடும்பத்தை ஒட்டவைக்கும் கிராமிய இளைஞனாக ‘கடைக்குட்டி சிங்கம்’, இரக்கமற்ற கொலவெறித் திருடர்களை தேசம் முழுவதும் தேடியலைந்து, உயிரைப் பணயம் வைத்துப் பிடிக்கும் காவல் அதிகாரியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, என நீளும் பட்டியலில், ‘காற்று வெளியிடை’, ‘தேவ்’ ஆகிய படங்கள் சாக்லேட் இளைஞனாகக் காட்ட முற்பட்டதையும், அதற்கு ரசிகர்கள் தந்த எதிர்வினையை கார்த்தி உணர்ந்துகொண்டார்.

போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ‘சிறுத்தை’ ரத்னவேல் பாண்டியனுக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தீரன் திருமாறனுக்கும் பல வித்தியாசங்களை நுட்பமாகக் காட்டினார். ‘காஷ்மோரா’வில் தளபதி ராஜ்நாயக், அவரது ஆவி, பேயோட்டி காஷ்மோரா என்று இரு கதாபாத்திரங்களில் மூன்று விதத் தோற்றங்களில் மறக்க முடியாத நடிப்பை வழங்கினார். கருந்தாடியைக் கர்வமாகத் தடவிக்கொண்டு படைத் தளபதிக்கான வீரத்தை, நயன்தாரா உள்ளிட்ட பெண்கள் மீதான மோகத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கார்த்தி வேறு ஒரு பரிமாணத்தில் அதிரவைத்தார்.

சில்லிட வைத்த ‘டெல்லி’

‘கைதி’ படத்தின் கார்த்தி ஏற்ற டெல்லி கதாபாத்திரம் தோற்றத்தால் மட்டுமே கணிக்க முடியாதது. அதில், மனத்தால் மகளின் பாசத்துக்கு ஏங்கும் இயல்பான தகப்பன் என்று நடிப்பின் எல்லைகளைத் தொட்டார். மகளின் பிறப்பைக் காண முடியாமல் சிறைப்பறவையாய் மீண்டு எழும் நேரத்தில், சாகசச் சூழலில் சிக்கி, சக மனிதம் காக்க, ஆபத்தின் எந்த எல்லையிலும் பிரவேசிக்கும் முன்னாள் ‘கைதி’யாக மென்மைக்கும் திண்மைக்கும் நடுவில் நின்று கதாபாத்திரத்தின் எல்லைக்கோட்டை கடந்து செல்லாத நடிப்புக் கலைஞனாக கார்த்தியால் மிளிர முடிந்திருக்கிறது.

மகள் அமுதாவின் ஒளிப்படத்தை வாட்ஸ் அப்பில் பார்த்துக் கலங்கும் கார்த்தியால் அந்த உணர்வை எப்படிக் கொண்டுவர முடிந்தது? சொந்த வாழ்க்கையில் தன் மகளைப் பிரிந்து ஷூட்டிங்கில் இருக்கும் கார்த்தி அவருடன் நேரம் செலவழிக்க முடியாத குற்ற உணர்வைத்தான் படத்தில் அழுகையாகவும் ஏக்கமாகவும் நமக்குள் கடத்தியிருப்பார்.

அதனால்தான் நாம் கார்த்தியின் நடிப்பை மெய் மறந்து சிலாகிக்கிறோம். விஜிக்கும் தனக்குமான காதல் குறித்து எந்த ஃபிளாஷ்பேக் உத்தியையும் பின்பற்றாமல் கார்த்தி குரல்வழி நடிப்பின் மூலம் கச்சிதமாகக் கதையாக வெளிப்படுத்தும்போது கண்ணீர் சிந்துகிறோம். இது கார்த்தி எனும் கலைஞனுக்குக் கிடைத்த வெற்றியே.

மெத்தட் ஆக்டிங் நடிப்புமுறையின் நீட்சியாக இன்றைய புத்தாயிரத்தின் நடிப்புக் கலைஞர்கள் பலர் தங்கள் ஏற்கும் கதாபாத்திரத்தை மிகையின்றி வெளிப்படுத்திச் செல்கிறார்கள். அந்த வகையில் யதார்த்தத்துக்கு மிக அருகில் பயணிக்கும் நடிகர்களில் ஒருவராக கார்த்தியும் இடம் பெறுகிறார்.

கதைக்குள் சென்று கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு அதன் களத்தைத் தேடிச் சென்று அந்த வாழ்க்கையை அனுபவித்து நடித்ததால்தான், கார்த்தியால் 12 ஆண்டுகளில் 18 படங்களில் மட்டும் நடிக்க முடிந்தது. வணிக சினிமாவில் வாழ்க்கைக்கு ஊக்கம் தரும் கதாபாத்திரங்களை நாடும் ஆசீர்வதிக்கப்பட்ட நடிகராக அவரது பரிமாணமும் பயணமும் தொடரட்டும்.

தொடர்புக்கு:-
nagappan.k@hindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024