40 பேராசிரியர்களுக்கு பதிவாளர், 'நோட்டீஸ்'
Added : மார் 14, 2020 00:21
Added : மார் 14, 2020 00:21
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில், பதவி உயர்வு பெற்ற, 40 பேராசிரியர்களின் தகுதி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க கோரி, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக செல்லத்துரை பதவி வகித்த போது, இணை பேராசிரியர்கள், 40 பேருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.இதில், விதமீறல் இருந்ததாக, புகார் எழுந்தது. இதையடுத்து, அவரது பதவிக் காலத்தில் நடந்த பதவி உயர்வு, பணி நியமனங்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில், உயர்மட்ட குழு விசாரித்தது.அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், 'பதவி உயர்வுக்காக தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் தவறு உள்ளது. உரிய முறையில், ஆவணங்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்' என பரிந்துரைத்தது.
இதன்படி, 40 பேராசிரியர்களும், அனைத்து ஆவணங்களையும் மார்ச், 16க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, பதிவாளர் சங்கர் நடேசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பதிவாளர் கூறுகையில், ''யு.ஜி.சி.,யின், 2016ம் ஆண்டு வழிகாட்டுதல்படி, ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது. மீண்டும் பரிசீலித்து, பதவி உயர்வு வழங்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment