'நிர்பயா' குற்றவாளி மீண்டும் மனு ; தூக்கு தண்டனை தள்ளிப் போகும்?
Updated : மார் 14, 2020 00:34 | Added : மார் 14, 2020 00:11
Updated : மார் 14, 2020 00:34 | Added : மார் 14, 2020 00:11
புதுடில்லி : 'நிர்பயா' பாலியல் பலாத்கார கொலை வழக்கில், துாக்கு தண்டனை கைதி, வினய் குமார் சர்மா, தன் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததில், அரசியலமைப்பு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த, 2012ல், டில்லியில், மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்ஸில், நான்கு கொடியவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இவ்வழக்கில், வினய் சர்மா, அக் ஷய் குமார், முகேஷ் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரும், மாறி மாறி மனுக்களை தாக்கல் செய்ததால், மூன்று முறை, துாக்கு தண்டனை நிறைவேற்றுவது தள்ளிப் போனது.
நான்காவதுமுறையாக, வரும், 20ம் தேதி துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி நீதிமன்றம் புதிய 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று, வினய் சர்மா சார்பில், வழக்கறிஞர், ஏ.பி.சிங்., டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வினய் சர்மா, ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு, பிப்., 1ல் நிராகரிக்கப்பட்டது. இந்தமனுவை நிராகரித்ததில், அரசியலமைப்பு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
டில்லி உள்துறை அமைச்சர், சத்யேந்திர ஜெயின், கருணை மனுவை நிராகரிக்குமாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்; அதில், அவர் கையொப்பம் இல்லை. இதை உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்த போது, 'சத்யேந்திர ஜெயின் கையொப்பம், 'வாட்ஸ் ஆப்' மூலம் பெறப்பட்டது' என, மத்திய அரசு தெரிவித்தது. கருணை மனு அனுப்பும் போது, டில்லியில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன.
அதன்படி, சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர்தான், சத்யேந்திர ஜெயின். அவர் உள்துறை அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, கருணை மனுவை நிராகரிக்கு மாறு, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க முடியாது. இதுபோல, கருணை மனுவை நிராகரிக்க, சட்ட விரோதமாகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும், பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளன. இது, நீதித் துறையின் மாண்பையும், தேர்தல் ஆணையத்தின் மதிப்பையும் சீர்குலைக்கும் செயல்.
எனவே, கருணை மனு நிராகரிப்பில், சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து, உரிய அமைப்புகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே, நம் அரசியல் சாசனத்தின் நோக்கம். எனவே, என் மனு தொடர்பாக, விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், நால்வரின் துாக்கு தண்டனை, நான்காவது முறையாக தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment