மத்திய அரசு ஊழியர் டி.ஏ., உயர்வு: 48 லட்சம் பேர் பயனடைவர்
Added : மார் 14, 2020 00:55
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப் படி, 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 48 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர்.டில்லியில் நேற்று, பிரதமர், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியம்இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்தி, 17 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக அதிகரிக்க, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர்; ஓய்வூதியம் பெறும், 65 லட்சம் பேர் பயன் பெறுவர். இந்த உயர்வு, இந்தாண்டு, ஜன., 1 முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். இதனால், மத்திய அரசுக்கு, கூடுதலாக, 14 ஆயிரத்து, 595 கோடி ரூபாய் செலவாகும்.ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, 'யெஸ் பேங்க்' மறுசீரமைப்பு திட்டத்திற்கு, கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.இத்திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில், வங்கியில், பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்த்தப்படும். அடுத்த ஏழு நாட்களில், வங்கியில் புதிய இயக்குனர் குழு அமைக்கப்படும்.இவ்வங்கியில், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட பல முதலீட்டு நிறுவனங்கள், பங்கு மூலதனம் மேற்கொள்ள உள்ளன.ஆதரவு விலைவிவசாயிகளை ஊக்குவிக்க, தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படும் கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை, 1 குவிண்டாலுக்கு, அதாவது, 100 கிலோவுக்கு, 439 ரூபாய் உயர்த்தப்பட்டு, 9,960 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை, 1 குவிண்டாலுக்கு, 380 ரூபாய் அதிகரித்து, 10 ஆயிரத்து, 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், செலுத்திய வரிகள் மற்றும் தீர்வைகளை, ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தை நிலவரம் குறித்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment