கொரோனா பரவல் எதிரொலி ரயில்களில், 'ஏசி' பெட்டிகள் ரத்து
Added : ஏப் 10, 2020 00:34
புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக நிற்கும் வரை, ரயில்களில், 'ஏசி' பெட்டிகளை ரத்து செய்ய, ரயில்வே முடிவு செய்துள்ளது,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாட்டில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ரயில் சேவை துவக்கப்பட்டாலும், அதில் சில கட்டுப்பாடுகளை விதிக்க, ரயில்வே முடிவு செய்து உள்ளது.'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தான், வைரஸ் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. அதனால், ரயில்களில், 'ஏசி' பெட்டிகளை ரத்து செய்ய, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும், பயணியருக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அது முடிவு செய்து உள்ளது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், பயணியர் ரயில் நிலையத்துக்கு வர வேண்டும். அங்கு, அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை உட்பட, கொரோனா தொடர்பான பரிசோதனைகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்பதிவு செய்துள்ள பயணியர் மட்டுமே, பிளாட்பாரத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்படும். பயணத்துக்கு, 12 மணி நேரத்துக்கு முன், பயணியர், தங்கள் உடல் நிலை குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
வைரஸ் பாதிப்பு உள்ளது தெரிந்தால், அந்த பயணி உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடப் படுவார். அவரது பயணம் ரத்து செய்யப்படும்.பயணத்தின் போது, பயணியர், முக கவசம், கையுறை அணிவது கட்டாயமாக்கப்படும். இவை இரண்டையும், ரயில்வே குறைந்த விலையில் வழங்கும். வியாபாரிகள், ரயில் பெட்டிக்குள் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொற்று பரவாமல் இருக்க, முதியவர்கள், ரயில் பயணத்தை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுவர். பயணத்தின் போது சமூக விலக்கலை, பயணியர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
அனுமதியின்றி யாரும் நுழைவதை தடுக்க, ரயில் பெட்டிகளில், நான்கு கதவுகளும் மூடப்படும்.பெரும்பாலான ரயில்கள், வழியில் எங்கும் நிற்காமல் செல்லும். சமூக விலக்கலை கடைப்பிடிக்கும் வகையில், பெட்டிகளில், இரண்டு பயணியர் மட்டுமே, பயணிக்க அனுமதிக்கப்படுவர். இந்த விதிமுறைகள் அமல்படுத்துவது பற்றி, பயணியருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், 21 நாள் ஊரடங்கு முடிந்த பின், ரயில்களை இயக்க எந்த திட்டமும் இல்லை என, ரயில்வே தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment