வாட்ஸ் ஆப்' குழுக்களில் தகவல்கள் பகிர தடையா?
Added : ஏப் 09, 2020 23:36
சென்னை : கொரோனா குறித்து, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் எந்த தகவலையும் பரப்பக்கூடாது என, மத்திய அரசு எச்சரித்துள்ளதாக, வெளியான செய்தி வெறும் வதந்தி என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு, நாளிதழ்கள், ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் தான், தகவல்களை தருகின்றன. இதில், சமூக வலைதளங்களில் வதந்திகளையும், பொய் தகவல்களையும், சிலர் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், 'கொரோனா குறித்து, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், எந்த தகவல்களையும் பரப்பக் கூடாது; பரப்பினால், 'அட்மின்'கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளதாக, சிலர் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின், முதன்மை செயலர், ரவி நாயக், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். இது வதந்தி என்றும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின், 'டுவிட்டர்' பக்கத்தில், இந்த விளக்கம் வெளியாகி உள்ளது. இதுபோன்று, மத்திய அரசு அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு, வதந்திகளை பரப்பி, மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment