Sunday, April 19, 2020


ஊரடங்கில் 'நகராத' கார்களை பராமரிப்பது எப்படி

Added : ஏப் 19, 2020 02:20

கொரோனா ஊரடங்கு நமக்கு மட்டுமல்ல நாளெல்லாம் நம்மை சுமக்கும் கார்களுக்கும்தான். டிவி, அலைபேசி, புத்தகம், விதவிதமான சாப்பாடு, குடும்பத்தினருடன் பேச்சு என நாம் எப்படியாவது பொழுதை போக்குகிறோம்.

ஆனால் ஊரடங்கு விதித்த நாள் முதல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும் கார்களின் நிலைமை பரிதாபம் தான்... ஊரடங்கு நாட்களில் காரை எப்படி பராமரிக்கலாம்... சொல்கிறார் மதுரை கார் மெக்கானிக் வேல்முருகன்.

1. தினமும் காரை ஸ்டார்ட் செய்து அரை மணி நேரம் ஓடவிட்டால் ஸ்டார்ட்டிங் பிரச்னை வராது. அப்படி ஓட விடும் போது ஏ.சி.,யை ஆன் செய்யலாம்.

2. தினமும் ஸ்டார்ட் செய்ய வாய்ப்பு இல்லை என்றால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டார்ட் செய்தால் பேட்டரியில் உள்ள மின் சக்தி குறையாமல் இருக்கும்.

3. கார் எடுக்கவே போவதில்லை என முடிவு செய்திருந்தால் காரில் உள்ள பேட்டரி வயரை அகற்றி விட்டால் பேட்டரி சார்ஜ் இறங்காமல் இருக்கும்.

4. கோடைகாலமாக இருப்பதால் கார்களுக்குள் பரவும் வெப்பம் குறைய ஏ.சி., பில்டர்களை          சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

5. வெளியில் கார் நிறுத்தும் சூழ்நிலை இருந்தால் கார் கண்ணாடிகளை லேசாக இறக்கி விட வேண்டும். இறக்கி விடாமல் இருந்தால் காருக்குள் இருக்கும் வெப்பம்கண்ணாடியை சேதமாக்கிவிடும்.

6. ஏ.சி., காஸ், இன்ஜின் ஆயில் அளவு சீராக இருக்க வேண்டும். ஸ்டீயரிங் வீலில், லெதர் கவர் இருந்தாலும் கூடுதலாக காட்டன் கிளாத் கவர் பொருத்தலாம்.

7. கார் கலர், உதிரி பாகங்களை பாதுகாக்க காரை வெயிலில் நிறுத்தும் போது கவர் போட்டு
மூடுவது நல்லது.

8. காரை வெயிலில் நிறுத்தும் போது முன்புற கண்ணாடி, வைப்பர் பிளேடுக்கு இடையில் 'தெர்மோ கூல்' வைக்கலாம்.

9. வெயிலில் நிறுத்திய காரை எடுக்கும் போது கார் கதவுகளை திறந்து விட்டு வெப்ப காற்று வெளியேறிய பின் ஏறி அமருங்கள்.

10. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பேட்டரியில் உள்ள 'டிஸ்டில்டு வாட்டர்' அளவை சோதிப்பது அவசியம். இதன் அளவு அதில் உள்ள அதிகபட்ச குறியீடு வரை
நிரம்பியிருக்க வேண்டும்.

11. கார் இயங்காத நிலையில் காருக்குள் லைட் எரிய விடுவது, ஸ்டீரியோவில் பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்தாலே பேட்டரியின் ஆயுள் கூடும்.

12. கார் நிறுவனம் அளிக்கும் மின்சார பாகங்கள் தவிர்த்து கூடுதலாக பேன்ஸி ஹாரன்,
அலங்கார லைட்டுகள் பயன்படுத்தினால் பேட்டரிசெயல்திறன் குறையும். ஊரடங்கு நேரம் பேட்டரி செயல்திறன் குறைந்தால் பழுதுபார்ப்பது கடினம். அதனால், பேன்ஸி ஹாரன், லைட் இணைப்பை துண்டிக்கலாம்.

13. காரை வெயிலில் நிறுத்தினால் கார் கேபின் சூடாகி சீட் கவர் துவங்கி பிளாஸ்டிக் கவர் வரை சேதமாக வாய்ப்பு உண்டு.

14. கார் நிறுத்தி இருக்கும் போது தேவையில்லாத சத்தம் வருகிறதா, ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற வாசனை வருகிறதா என கவனிக்க வேண்டும். இது போன்ற பிரச்னை இருந்தால் மெக்கானிக் ஆலோசனை கேட்கலாம்.

15. சமமான தளத்தில் காரை நிறுத்தி 'இன்ஜின் ஆயில்' சரியான அளவுக்கு இருக்கிறதா என்று நாமே பரிசோதனை செய்யலாம். ஆயில் குறைந்து இருந்தால் நாமே ஆயிலை மாற்றலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024