மன அழுத்தம் போக்க டாக்டர்களுக்கு யோகா
Added : ஏப் 22, 2020 02:10
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்களுக்கு, மன அழுத்தத்தை போக்கும் வகையில், யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிளுக்கும், நோய் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், இரவு பகலாக சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால், அவர்களின் மன அழுத்ததை போக்கும் வகையில், நேற்று, யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த யோகா பயிற்சி வகுப்பை, தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்பு குழு அலுவலர், சண்முகம், கலெக்டர், கோவிந்தராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக, கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாக்டர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்புக்குழு அலுவலர் சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது:நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் மட்டுமே, நோய்த்தொற்றை எதிர்த்து போராட முடியும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக, எலுமிச்சைச் சாறு, இஞ்சி, துளசி, மிளகு, தேன், பெரிய நெல்லிக்காய் போன்ற பொருட்களை கொண்டு, வைட்டமின் சி நிறைந்த, குடிநீர் பானம் வழங்கப்பட உள்ளது.இந்த பானத்தில், எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை. கொரோனா சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும், இந்த பானம் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment