ஹலோ ஜானு.. உன்னை மறக்க முடியலை! ராம்.. இப்ப ஏன்டா போன் பண்ண..
90ஸ் கிட்ஸ்-இன் லாக்டவுன் கலகலப்புகள்!
By Aravinthan | Updated: Friday, April 24, 2020, 10:55 [IST] சென்னை :
லாக்டவுனில் சும்மா இருக்க முடியாமல் தங்கள் முன்னாள் காதலிக்கு போனைப் போட்டு இம்சை செய்து வருகிறார்கள் பல பரிதாப 90'ஸ் கிட்ஸ். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்த லாக்டவுன் டிரென்ட் உருவாகி வருகிறது. நம் ஊரில் முக்கியமாக திருமணம் ஆகாத 90'ஸ் கிட்ஸ் ராம்கள் லாக்டவுனில் தனிமை தாங்க முடியாமல், தங்கள் ஜானுக்களுக்கு மெசேஜ் போடுவது, போன் அடிப்பது என அதில் இருக்கும் சிக்கல் புரியாமல் வினையை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.
போர் அடிக்கிறது
இந்த கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது. மக்கள் பயத்துடன் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தை விடாமல் வாரக்கணக்கில் பார்த்து போர் அடித்துப் போய் அவர்களுடன் சண்டை இட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 90’ஸ் கிட்ஸ் பாவம் இது ஒருபுறம் என்றால், முரட்டு சிங்கிள்களாக வலம் வரும் 90'ஸ் கிட்ஸ் ஆண்கள் ரொம்பப் பாவம். இந்த லாக்டவுன் நேரத்தில் நண்பர்களுடன் வெளியே சுற்ற முடியாது. அப்படியே கெத்தாக லாக்டவுன் துவக்கத்தில் வெளியே சுற்றிய சிலருக்கும் வாங்கிய "லத்தி அடி" கண் முன் வந்து போகும். அதனால், செல்போனும் கையுமாக வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலை.
தனிமையில் தவிப்பு அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம்.. காலையில் இருந்து ஏற்கனவே பார்த்த படத்தை டிவியில் வெற்றிகரமான நூறாவது முறையாக பார்த்து, வீடியோ கேமை வெறுப்பாகும் அளவுக்கு ஆடி முடித்து, இரவு வரும் போது மனதில் வெறுமையுடன், தனிமையில் தவிக்கிறார்கள். காதலிப்பவர்களுக்கு அதிக சிக்கல் இல்லை. விடிய, விடிய போன் பேசிவிட்டு நள்ளிரவு நான்கு, ஐந்து மணிக்கு படுத்து விடுவார்கள். நம்ம 90'ஸ் கிட்ஸ் சிங்கிள்கள் என்ன செய்வார்கள்? முன்னாள் காதலி நம்பர்! இந்த நேரத்தில் தான் மனது அலைபாய்ந்து தங்களின் முன்னாள் காதலி போன் நம்பரை தேடும். கான்டாக்ட் லிஸ்டில் அவரின் பெயரை தேடி எடுத்தவுடன், போன் செய்யலாமா அல்லது மெசேஜ் செய்யலாமா? அல்லது பேசாமல் விட்டு விடலாமா? என ஒரு அரை மணி நேரம் பெரிய பஞ்சாயத்து நடக்கும்.
என்ன சொல்வது? எதை வைத்து பேசுவது? ஒன்று "பார்த்து, ரொம்ப நாள் ஆகிவிட்டது" என்பதில் இருந்து மெசேஜ் ஆரம்பிக்கும் அல்லது "என்னால மறக்க முடியலை" என்பதில் இருந்து துவங்கும். இரண்டுமே அனுப்ப முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது கொரோனா. அட ஆமாம்.. கொரோனாவை சாக்காக வைத்து, "நீயும், குடும்பமும் சேஃப்பா இருக்கீங்களா? என கேட்டு ஆரம்பிப்பார்கள். போன் செய்வதில் சிக்கல் மெசேஜ் கூட பரவாயில்லை. இந்த லாக்டவுன் நேரத்தில் முன்னாள் காதலிக்கு நேரடியாக போன் அடிப்பது எல்லாம் ரொம்ப கொடுமை. முன்னாள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும் பட்சத்தில் அவரால் "இனி போன் செய்யாதே" என்பதை கூட நிம்மதியாக பேச முடியாது. வீட்டுக்குள் கணவன், குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன பேசுவது?
இப்ப ஏன் போன் பண்ண? நம் 90'ஸ் கிட்ஸ் பரிதாப ராம்கள் போன் செய்து, "ஜானு உன்னை மறக்க முடியலை.." என ஆரம்பித்தால், ஜானுக்களின் பதில் பெரும்பாலும் "ராம் இப்ப ஏன் போன் பண்ண..". என்பதாகத்தான் இருக்கிறது. நிம்மதியாக (அல்லது கரடு முரடாக) சென்று கொண்டிருக்கும் வாழ்வை, இந்த போன் கால் (இன்னும் கொஞ்சம்) குழப்பி விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.
மனநல நிபுணர்கள் சொல்வது என்ன? இது போல லாக்டவுன் நேரத்தில் முன்னாள் காதலி அல்லது காதலுனுக்கு போன் செய்வது சிக்கலை உண்டாக்கும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். காரணம், இந்த லாக்டவுன் நேரம் என்பது தனிமையை சோதனை செய்கிறது. நம்மிடம் பேச யாரும் இல்லையே என்ற எண்ணம் தான் நம் மீது இதற்கு முன் அன்பை காட்டிய முன்னாள் காதலன், காதலியின் நம்பரை தேட வைக்கிறது என்கிறார்கள்.
லாக்டவுன் முடிந்த பின்..
லாக்டவுன் முடிந்த பிறகு இருவருமே தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அப்போது இதே போன்ற தனிமை உணர்வு இருக்காது. அப்போது அவர்கள் நமக்கு தேவையில்லை என்ற எண்ணத்தில் தவிர்க்க நேரிடும். அதைத் தொடர்ந்து பல்வேறு சண்டை, சச்சரவுகள் வரக் கூடும். அது வாழ்க்கையில் நிம்மதியை குலைக்கும்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/90s-kids-are-calling-their-ex-lovers-during-this-lockdown/articlecontent-pf452028-383504.html
No comments:
Post a Comment