வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் 'சப்ளை': முதல்வர் அறிவுரை
Updated : ஏப் 01, 2020 07:56 | Added : மார் 31, 2020 22:06
சென்னை ''முடிந்தவரை வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை வழங்கும்படி, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் தெரிவித்தார். கவர்னரை சந்தித்த பின், அவர் கூறியதாவது:
நோய் பரவல், இன்னும், 15 நாட்களில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகிறோம். அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை களிலும், பரிசோதனை மையங்கள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு, நோய் தொற்று உள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் இருந்து, நோய் பரவுவதை தடுக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம்.முதல்வர் பல்வேறு நிவாரண சலுகைகளை அறிவித்துள்ளார். முடிந்தவரை வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்க, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
டில்லி சென்ற, 1,500 பேரில், 1,131 பேர் திரும்பியுள்ளனர்; அவர்களில், 800 பேரை கண்டறிந்து உள்ளோம். அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டோரை, காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் கண்காணித்து வருகின்றனர். தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து குறித்து, ஆராய்ச்சி நடந்து வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், விதிகளை பின்பற்றாவிட்டால், அரசு பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.
கவர்னருடன் முதல்வர் சந்திப்பு
முதல்வர், இ.பி.எஸ்., நேற்று மாலை, 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னரை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், தடை உத்தரவால் பாதிக்கப் பட்டோருக்கு, நிவாரண உதவிகள் வழங்க எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும், அவர் விளக்கினார்.
No comments:
Post a Comment