சுறுசுறு... சென்னை; ஜவ்வாக மதுரை!
Added : மே 09, 2020 23:17
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில், 11 மாதங்களாகியும், புதிய பதிவாளர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய பதிவாளரை தேர்வு செய்ய, சிண்டிகேட் உறுப்பினர்கள் இடம் பெற்ற, தேர்வுக்குழு நியமிக்கப்பட்டது.
முதலில் நடந்த நேர்காணலில், யாரும் தேர்வு செய்யப்படவில்லை.இதையடுத்து, ஜனவரியில் இரண்டாவது அறிவிப்பு வெளியிட சிண்டிகேட் தீர்மானித்தது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகித்த, சங்கர் நடேசனும் மே, 1ல் ராஜினாமா செய்தார்.ஆனாலும், இதுவரை, புதிய பதிவாளர் குறித்து, தேர்வு குழுவிடம், துணைவேந்தர் கிருஷ்ணன் ஆலோசனை நடத்தவில்லை. ஊரடங்கு காரணமாக, பதிவாளர் தேர்வு தாமதமாகிறது எனக், கூறப்படுகிறது. அதேநேரத்தில், சென்னை பல்கலையில், துணைவேந்தர் துரைச்சாமி பதவிக்காலம் முடிவதற்குள், புதியவரை தேர்வு செய்ய தேடல் குழு மே, 6ல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை தரத்தை நிர்ணயிக்கும், 'நாக்' கமிட்டி வருகை தரவுள்ள நிலையில், பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தால் பின்னடைவாக இருக்கும். இதற்கிடையில், பல்கலை இன்ஜினியர் பணியிடம், பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. அதனால், ஜூனியர் நிலையில் உள்ள, சிவில் இன்ஜினியர் ஆனந்தகுமாருக்கு, 'எஸ்டேட் ஆபீசர்' என, புதிய பதவியாக, பொறுப்பு வழங்கப்பட்டது. முன்பு பேராசிரியர்கள் தான், எஸ்டேட் ஆபீசர்களாக நியமிக்கப்பட்டனர்.மேலும், பணிகளை முடித்த பின்பே அனுமதி பெறப்படுகிறது என, இன்ஜினியரிங் பிரிவில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது.
சர்ச்சைகளில் சிக்கிய ஆனந்தகுமாரை நீக்கி, மூத்த இன்ஜினியரை, பல்கலை இன்ஜினியராக நியமிக்க வேண்டும்.துணைவேந்தரின் தன்னிச்சை முடிவு! காமராஜ் பல்கலை பதிவாளர் பொறுப்பு வகித்த, சங்கர் நடேசன் ராஜினாமா செய்தார். இதை சிண்டிகேட் உறுப்பினர்களிடம் துணைவேந்தர் விவாதிக்காமல், 'ராஜினாமா ஏற்கப்பட்டது; விரைவில், புதிய பொறுப்பு பதிவாளர் தேர்வு செய்யப்படுவார்' என்றார். ஆனால், 'சங்கர் நடேசனின் ராஜினாமாவை ஏற்கவில்லை' என, துணைவேந்தர் தற்போது தெரிவித்துள்ளது, தன்னிச்சை முடிவை காட்டுகிறது.
இதன் வாயிலாக, முன்னாள் துணைவேந்தர் செல்லத்துரை காலத்தில், பல்கலை வளர்ச்சியை பாதித்த முட்டுக்கட்டை செயல்பாடுகள், மீண்டும் அரங்கேறுகிறதா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment