கைது! லஞ்சம் வாங்கிய 16 அரசு அலுவலர்கள்...:519 சவரன்; 6 கிலோ வெள்ளி சிக்கியது;ரூ.4.29 கோடி ரொக்கம் பறிமுதல்: பீதியில் உறைந்த 54 துறை அதிகாரிகள்
Added : நவ 07, 2020 23:38
வேலுாரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் துவங்கி, தமிழகம் முழுதும் ஒரு மாதமாக, அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தொடர் வேட்டையில், லஞ்சம் வாங்கிய, 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடந்த இடங்களில் இருந்து, 4.29 கோடி ரூபாய் ரொக்கம்; 519 சவரன் தங்கம்; 9 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி சோதனை தொடர்வதால், தங்கள் மீதும் நடவடிக்கை பாயுமோ என, அரசின், 54துறைஅதிகாரிகளும் பீதியில் உறைந்துள்ளனர்.
நாடு முழுதும், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு அலுவலகங்களில், வசூல் வேட்டை நடப்பதாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.உடன், 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒரு தனிப்படையில், ஒரு டி.எஸ்.பி., - நான்கு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் என, 20 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு நடத்தினர்.
அதன் பயனாக, வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டையில், லஞ்ச வேட்டை நடத்தி வந்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர், பன்னீர் செல்வம் சிக்கினார்.பெயர் மாற்றம்இவரது கட்டுப்பாட்டின் கீழ், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில், புதிதாக தொழிற்சாலைகள், பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் துவங்குதல்; அவற்றுக்கான பெயர் மாற்றம், புதுப்பித்தல் தொடர்பான அனுமதியை, இவரிடம் தான் பெற வேண்டும்.
அத்துடன், பன்னீர் செல்வம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தோல் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, 'மாசு இல்லை' என, சான்றிதழ் வழங்க வேண்டும்.இதற்காக, மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார். லஞ்சம் தர மறுக்கும் தோல் தொழிற்சாலையை இயங்கவிடாமல், 'சீல்' வைத்து விடுவேன் என மிரட்டியே, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 25 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது, இவரது கார் உள்ளிட்ட வாகனங்களில், 33.73 லட்சம் ரூபாய் சிக்கியது.வீட்டில், 3.௨௫ கோடி ரூபாய்; 450 சவரன், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின.
சேலத்தில்
சேலம் மண்டல பதிவுத்துறை, டி.ஐ.ஜி.,யாக ஆனந்த் என்பவர் பணியாற்றினார். இவருக்கு கீழ், சேலம் கிழக்கு, மேற்கு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் வருகின்றன. இவர், தனக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருப்பதாக கூறி, மாதம் தோறும் பல லட்சம் ரூபாயை, லஞ்சமாக வாரி சுருட்டியுள்ளார்.
சமீபத்தில், கடலுார் மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.இவருக்காக நடத்தப்பட்ட விழா ஒன்றில், அதிகாரிகள் பரிசு மழையில் நனைத்து விட்டனர். ஆனந்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு 3.20 லட்சம் ரூபாய், 34 சவரன் நகைகளை கைப்பற்றினர்.
சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியில், 63.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் ஆனந்த் மற்றும் உறவினர்களின், ஏழு வங்கி கணக்குகளில் பதுக்கி இருந்த, 1 கோடி ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி உள்ளனர். இதுபோல, அக்., 1 முதல், நவம்பர், 6 வரை, தமிழகம் முழுவதும், 54 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.
லஞ்சம் வாங்கும் போது, கையும், களவுமாக சிக்கிய, 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சோதனை நடந்த அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இருந்து, 4.29 கோடி ரூபாய் ரொக்கம், 519 சவரன் தங்கம், 6 கிலோ வெள்ளி மற்றும் முறைகேடாக வாங்கிய சொத்துக்களுக்கான ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், கோவை, ராஜா தெருவில், பத்திரப் பதிவுத்துறை, இணை பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 1.70 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர், ஜெயந்த் முரளி கூறுகையில், ''மாநிலம் முழுவதும், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது; இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,'' என, தெரிவித்துள்ளார்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை தொடர்ந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில், அரசின், 54 துறை அதிகாரிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -
No comments:
Post a Comment