ஏகாம்பரநாதர் கோவில் பல்லக்கில் 3 கிலோ வெள்ளி தகடு மாயம்
Added : நவ 07, 2020 23:22 |
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பழைய பல்லக்கில், 3 கிலோ வெள்ளி தகடுகள் மாயமானது, ஆய்வில் தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு பெற்று விளங்கும் பழமையான ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள, ஆபரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் சார்பில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.தொடர்ந்து, அக்டோபர், 13ம் தேதி, அறநிலையத் துறை துணை ஆணையர் தலைமையில், நகைகள் சரிபார்ப்பு குழு, ஆய்வை துவங்கியது.
கோவிலில் உள்ள பல சன்னிதிகளில், சுவாமிக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.இந்நிலையில், வெள்ளி சம்பந்தப்பட்ட பொருட்களை, ஆய்வுக் குழுவினர், நேற்று சரிபார்த்தனர். அப்போது, 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வெள்ளி தகடு பொருத்தப்பட்ட பல்லக்கில் இருந்த, வெள்ளி தகடுகள் காணாமல் போனது தெரியவந்தது.
அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவதுஇந்தப் பல்லக்கு, 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு முறை ஆய்வின்போது, என்னென்ன பொருட்கள் கோவிலில் இருக்கின்றன என, அதன் பட்டியலை பார்த்து, அந்த பொருட்களை எடை போடுவோம். அப்போது இருக்கும் எடை அளவை பதிவு செய்வோம். அதன்படி, வெள்ளி தகடு பொருத்தப்பட்ட பல்லக்கை, ஆய்வு செய்தோம். அதில், 1954ல் நடந்த ஆய்வின்போது, அந்த பல்லக்கில், 11 கிலோ எடையுடைய வெள்ளித் தகடு பொருத்தப்பட்டு உள்ளதாக கணக்கில் உள்ளது.
தற்போது நடத்திய ஆய்வில், 8.800 கிராம் வெள்ளி மட்டுமே இருந்தது. 3 கிலோ மாயமானது குறித்து, ஆணையருக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் தான், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment