கொட்டும் மழையில் குளித்தபடி பொங்கல் பரிசு வாங்கிய மக்கள்
Added : ஜன 05, 2021 23:36
சென்னை:கொட்டும் மழையிலும் நனைந்தபடி, ரேஷன் கடைகளுக்கு வந்து, பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கி சென்றனர்.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, முந்திரி,திராட்சை,ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பு வினியோகம், நேற்று முன்தினம் முதல் துவங்கியது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கன மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி, ரேஷன் கடைகள் முன், மக்கள் குவிந்தனர். பலர் குடை பிடித்தும், 'ரெயின் கோட்' அணிந்தும் வரிசையில் நின்றனர். சில பெண்கள், தங்களின் புடவை மற்றும் தலையில் பிளாஸ்டிக் கவரை போட்டிருந்தனர். மழையில் நனைந்தபடி, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர். ஈரப்பதத்தால், 2,500 ரூபாயை எண்ணி வழங்குவதில், ரேஷன் ஊழியர்கள் சிரமப்பட்டனர். கார்டுதாரர்களும், ஒரு முறைக்கு, இரண்டு, மூன்று முறைக்கு மேல், ரொக்க பணத்தை எண்ணி வாங்கினர்.
கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கனில் உள்ள தேதியில் வாங்கவில்லை என்றால், பரிசு தொகுப்பு கிடைக்காது என, யாரும் கருத வேண்டாம். எனவே, மழையில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிரமப்பட்டு வர வேண்டாம்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள், வரும், 12, 13ம் தேதிகளில் வாங்கலாம். மழையில் நனையாதபடி, கரும்பு உள்ளிட்ட, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பாதுகாப்பாக வைக்குமாறு, ரேஷன் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment