மத்திய அரசு அதிகாரிகள் அலுவலகம் வர உத்தரவு
Updated : ஜூன் 15, 2021 08:42 | Added : ஜூன் 15, 2021 08:40
புதுடில்லி : மத்திய அரசு பணியில், சார்புச் செயலர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும், நாளை முதல் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வந்து பணியாற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசுப் பணியில், சார்புச் செயலர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவீதம் பேர், நாளை முதல் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். சார்புச் செயலர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும், நாளை முதல் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும்.
கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அலுவலகம் மூன்று நேரங்களாக பிரித்து செயல்படும்.மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப் பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், அந்த அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்படும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள், தொலைபேசி அல்லது மற்ற மின்னணு தொடர்பு சாதனங்கள் வாயிலாக எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து கூட்டங்களும் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். மிக முக்கியமான மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கான கூட்டங்களை மட்டும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் நேரடியாக நடத்தலாம்.அலுவலகத்தில் வைத்து அலுவல் ரீதியாக வெளி ஆட்களை சந்திப்பது தவிர்க்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தும் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment