முடிவுரைக்கு முகவுரை எழுத நியமிக்கப்பட்டதா ராஜன் குழு?
Added : ஜூன் 14, 2021 23:38
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
முதலில், 'நீட்' தேர்வால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராயவே குழு அமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், குழுவின் விபரங்கள் வெளியிடப்பட்ட போது, பாதிப்பு என்பது, தாக்கம் என மாற்றப்பட்டது. அதாவது, நீட் தேர்வில் கெட்டது மட்டுமல்ல, நல்லது என்ன நடந்திருக்கிறது என்றும் சீர்துாக்கிப் பார்த்து, தன் கருத்துகளைத் தெரிவிக்கவே, இக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், குழுவில் உள்ள உறுப்பினர்கள், அந்த பாரபட்சமற்ற பார்வையோடு அணுகுவர் என்பதற்கான முகாந்திரமே தெரியவில்லை என்கின்றனர், கல்வியாளர்கள்.
ஏனெனில், குழுவில் நீதிபதி ராஜனை தவிர, உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்தும், டாக்டர் ஜவஹர் நேசனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள ஆறு பேர் அரசுத்துறை செயலர்கள்.ஆலோசனை கேட்பராஇதில், ரவீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலர். இந்த அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கம். 'டிவி' மற்றும் பத்திரிகை பேட்டிகளில், நுழைவுத் தேர்வுகள் பற்றிய கடுமையான விமர்சனங்களையே, இது நாள் வரை ரவீந்திரநாத் முன்வைத்து வருகிறார்.கல்வியாளரான ஜவஹர் நேசன், ஒரு தனியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர். கடந்த ஆண்டு வெளியான, தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்தவர். 'இந்துத்வா தத்துவத்தின் அடிப்படையில் உருவான, தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கிறேன்' என்று கருத்து சொன்னவர். அதற்காக ஒரு புத்தகம் எழுதி, அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. இவரும், நுழைவுத் தேர்வுகளுக்கு ஆதரவாக பேசப் போவதில்லை.அப்படி என்றால், 'நீட் தேர்வு மோசம்; அதனால், பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது; அது வேண்டாம்' என்று எழுதப்பட்டுள்ள முடிவுரைக்கு, இந்தக் குழு சான்றுகளை தேடி, வலு சேர்க்கத் தான் உருவாக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்
.மேலும், இந்தக் குழு எப்படி கருத்துகளைக் கேட்டு அறியப் போகிறது என்ற, தெளிவும் இல்லை. ஆணையம் அமைக்கப்படுமானால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, விபரங்களை சேகரிக்கும். இல்லாவிட்டால், விருப்பமுள்ளவர்கள் ஆணையத்தின் முன் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக வழங்க முடியும்.ஆனால், அமைக்கப்பட்டு இருப்பதோ குழு. இதற்கான சட்ட அந்தஸ்து என்ன என்பதும் தெளிவில்லாமல் உள்ளது. இவர்கள் எந்தக் கல்வியாளரையாவது கூப்பிட்டு, ஆலோசனை கேட்பரா என்பதும் தெரியவில்லை. பொதுமக்கள் தரப்பில் இருந்து, நீட் தேர்வு நியாயத்தை எழுத்து பூர்வமாகப் பெற, வாய்ப்பு அளிக்கப்படுமா என்றும் தெரியவில்லை அல்லது குழுவுக்குள்ளேயே பேசி, அறிக்கை தயாரிப்பரா என்பதும் தெளிவில்லை.அத்துடன், இவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கை மீது, என்ன நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பதிலும் தெளிவில்லை.
இதை வைத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியுமா... ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தான், நாடெங்கும் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நடத்தப்படுகிறது.இது தொடர்பாக, எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டாலும், அது உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. மருத்துவ கல்வி பயில, மாணவர்கள் தங்களை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில், உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது.தார்மீக மரியாதைஇந்நிலையில், நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கைக்கு என்ன வலிமை உள்ளது, அதன் பயன் என்ன என்ற கேள்விகளை, பல பெற்றோரும், கல்வியாளர்களும் எழுப்புகின்றனர்.
இந்தக் குழு நியாயமாகவே நடந்து கொள்ளலாம். ஆனால், நியாயமாக நடப்பது வெளிப்படையாக தெரிந்தால் தான் நம்பிக்கை வரும். நீட் தேர்வால் பலன்கள் உள்ளன என்பதை வெளிப்படையாக தெரிவித்து வரும் கல்வியாளர்களில் ஒருவரையேனும், இந்தக் குழுவில் நியமித்திருந்தால், நீதிபதி ராஜன் குழுவுக்கு ஒரு தார்மீக மரியாதை கிடைத்து இருக்கும்.இல்லையேல், இது ஆட்சியாளர்களின் நீட் எதிர்ப்பு கருத்துக்கு வலு சேர்க்கும், ஆவணங்கள் சேகரித்து கொடுக்கும், 'உதவியாளர்' குழுவாகவே மாறிப் போய்விடும் என, அச்சம் தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.ஒன்றும் செய்ய முடியாது: அலெக்ஸ்தமிழக பா.ஜ., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் அலெக்ஸ் கூறியதாவது:'நீட்' தேர்வு விவகாரத்தை ஆராய்ந்து, அரசுக்கு தன் பரிந்துரையை அளிக்க, கமிஷன் போடுவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசோ புத்திசாலித்தனமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு கூடி விவாதித்து, தன் கருத்தாக அரசுக்கு எதைத் தெரிவித்தாலும், அதனால் ஒன்றும் ஆகிவிடாது. கல்வியை மத்திய - மாநில அரசுகள் சட்டம் இயற்றி, நடைமுறைப்படுத்தும் வகையில் தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதனால், கல்வி தொடர்பாக, மத்திய - மாநில அரசுகள் தனித்தனியாக சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தாலும், இயற்றப்படும் சட்டங்களில் எது இறுதியில் செல்லுபடியாகும் என்றால், மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் தான்.
இப்படித்தான், பல பிரச்னைகளில் ஏற்கனவே முடிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன.நீட் விவகாரமும் அப்படிபட்டதே. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான், நாடு முழுதும் மருத்துவ கல்வியில் சேர, நீட் தேர்வுக்கான சட்டம் இயற்றப்பட்டு, அது மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.எனவே, இதில் எதுவும் செய்ய முடியாது என, எல்லா மாநில அரசுகளும், நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டன. எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை, தமிழகம் மட்டும் ஏற்க மாட்டோம் என்றால், அது சட்ட ரீதியில் ஏற்கத்தக்கதல்ல.இதை பல்வேறு வழக்குகளின் தீர்ப்பு வழியாக, உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டது. இருந்தும், தேர்தலுக்கு முன் வெற்று வாக்குறுதியை மக்களிடம், தி.மு.க., அளித்து விட்டது. 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' எனக்கூறி, ஆட்சிக்கு வந்து விட்டனர்.நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய முடியாது என்பது, தி.மு.க., ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால், மக்களிடம் கொடுத்த வாக்குறுதிக்காக, குழு போடுகிறோம்; கருத்து கேட்கிறோம் என, இப்போது நாடகம் நடத்துகின்றனர்.
தற்போது போடப்பட்டிருக்கும், நீதிபதி ராஜன் தலைமையிலான குழு கூடி, தங்களுக்குள் விவாதித்து, தங்களுடைய கருத்தாக, தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்தக் கருத்தை மேற்கோள்காட்டி, மத்திய அரசுக்கு, தங்கள் பரிந்துரையை தமிழக அரசு அனுப்பி வைக்கும்; அதனால், ஒன்றும் நடக்கப் போவதில்லை. மத்திய அரசுக்கு, கமிட்டியின் பரிந்துரையை அனுப்பி நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லி, இங்கே ஏமாற்று நாடகம் நடத்திக் கொண்டிருப்பர். நீட் தேர்வு வழக்கம் போல, இந்தாண்டும் நடக்கும் என்றால், குழப்பத்தில் இருக்கும் மாணவர்கள், எப்படி தேர்வுக்கு தயாராகுவர் என்பது தான் வேதனை. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில், தமிழக அரசு இதுபோல குழப்பத்திற்கு மேல் குழப்பம் விளைவித்து, மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடக் கூடாது.இவ்வாறு அலெக்ஸ் கூறினார்.
No comments:
Post a Comment