By உதயை மு. வீரையன்
First Published : 26 October 2015 01:19 AM IST
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 21 அன்று போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டது.
÷இந்த நிலையில் இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு யு.ஜி.சி. கடிதம் அனுப்பியுள்ளது.
÷பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள் முகவரி தவறு எனத் திரும்பி வந்துள்ளன. இதனால் அந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகும் நிலை உருவாகும்.
÷எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை தொடர்பான தகவலையும் யு.ஜி.சி.-க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
÷உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவாக எட்டு பல்கலைக்கழகங்களும், தில்லியில் ஆறு பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு, பிகார், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் தலா ஒன்றுமாக 21 போலிப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
÷இந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய எச்சரிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறதே தவிர, இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. இதனை நம்பி மாணவர்கள் சேர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்காததன் காரணம் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?
÷இதனையொட்டி மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), இந்தியக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதைப் பற்றி ஓர் எச்சரிக்கை செய்துள்ளது.
÷யு.ஜி.சி.-இன் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாமல் சில கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்குவது கவனத்துக்கு வந்துள்ளது என்றும், இந்தக் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் பட்டங்கள், பட்ட மேற்படிப்புக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ செல்லத் தகுந்ததாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
÷இந்தியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக அந்தந்த நாடுகளின் அங்கீகாரக் கவுன்சில்கள் மூலம் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
÷இந்திய சுயநிதிக் கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை குறைந்த அளவு "பி' கிரேடு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளைக் குறைந்த அளவு 5 ஆண்டுகள் வழங்கியிருக்க வேண்டும்.
÷இந்த ஒப்பந்தம் மூலம் அளிக்கப்படும் படிப்புகள் பற்றிய முழு விவரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக தொடர்புடைய இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும், யு.ஜி.சி.யிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்னும் விதிகளை யு.ஜி.சி. வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் கடமைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர்த் தொழில்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக உலக முதலீட்டாளர்களை அறைகூவி அழைக்கின்றன. இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் தொடங்கி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரை விற்பனை செய்வதற்கே அரசு துடிக்கிறது.
÷இப்போது கல்வித் துறையிலும் அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. இதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.
÷160 நாடுகள் கலந்து கொள்ளும் உலக வர்த்தக மையம் (WTO), வரும் டிசம்பர் 15 அன்று கென்யா நாட்டின் நைரோபியில் கூடுகிறது. இந்த பத்தாவது வட்ட அமைச்சக மாநாட்டில் கல்வித் துறைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடப் போகிறது.
÷உலக வர்த்தக மையம் என்பது உலகின் செல்வந்த நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்தவற்றை வளரும் மற்றும் வளரா நாடுகளுக்குள் தடையில்லாமல் விற்பனை
செய்ய உதவுகிறது. இதில் உறுப்பினராக இருந்தால் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஒப்புதலோடு அந்த நாடுகளைச் சந்தையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
÷இந் நிலையில் பொருள்களை மட்டும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நாடுகள் இப்போது மருத்துவம், காப்பீடு, கல்வி போன்ற சேவையையும் விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளன. இதனால் சேவையில் வணிகத்துக்கான காட்ஸ்
(GATS) ஒப்பந்தம் உருவானது.
1995 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்தியா அதில் உறுப்பு நாடாக இருக்க ஒப்புதல் அளித்துவிட்டது. 2004-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கமும் ஒப்புதல் அளித்துவிட்டுச் சென்றது. 2005-இல் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசும் சம்மதம் தெரிவித்து விட்டுப் போய்விட்டது.
÷இப்போது நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசாங்கம் இதனை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசுகளின் கொள்கைகளை எதிர்த்து விமர்சித்து வெற்றி பெற்று வந்தவர்கள், பழைய வழியிலேயே போய்க் கொண்டு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
÷காட்ஸ் ஒப்பந்தம் மாணவரை வாங்குபவர் என்றும், ஆசிரியரை விற்பவர் என்றும், பல்கலைக்கழகங்களைக் கடைகள் என்றும் சொல்கிறது. அதன் அறிக்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற வார்த்தைகளே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
÷அவர்கள் கடை திறந்தால் அவர்களுக்கு மற்ற கடைக்காரர்களோடு சமமான போட்டி இருக்க வேண்டும். அதாவது அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் அவர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று கூறுகிறது காட்ஸ் ஒப்பந்தம்.
÷160 நாடுகளின் கடைகள் வரும் என்பதால் அரசாங்கத்தினால் அனைவருக்கும் சலுகைகள், மானியங்கள் வழங்க இயலாது என்பதால் மானியமும், சலுகைகளும் இல்லாமல் அரசுப் பல்கலைக்கழகங்கள் படிப்படியாக மூடப்படலாம்.
÷திறக்கப்படும் கல்விக் கடைகள் தரமானதாக இருக்கும் என்று யாராலும் உத்தரவாதம் வழங்க இயலாது என்று காட்ஸ் கூறுகிறது. அத்துடன் பாடத் திட்டம், கற்றுக்கொடுக்கும் முறை ஆகியவை அவர்களாலேயே முடிவு செய்யப்படும்.
÷அவர்கள் கல்வி, வணிகம் செய்ய நமது நாட்டுச் சட்டம் ஏதாவது தடையாக இருந்தால் அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். கல்விக்கான கட்டணத்தை அவர்களே முடிவு செய்வார்கள். நமது அரசு, நீதிமன்றம் ஆகிய எதற்கும் அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லர். இவ்வாறு அவர்களுக்கு வசதியாக ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
÷இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய அறைகூவலாகும். வளர்ந்த நாடுகளோடு போட்டி போட முடியாமல், இருப்பதையும் இழக்கும் அபாயம் ஏற்படும். நமது மொழி, கலை, பண்பாடு அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிடும். மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் எல்லாம் பறிக்கப்படும்.
÷இந்தியக் கல்வித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வெளிப்படையாகக் கூறாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை எப்படியோ தெரிந்து கொண்ட கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரசாங்கம் எப்போதும் போல மெüனம் சாதித்து வருகிறது.
÷மனித குல வரலாற்றில் கல்விக்கென ஓர் இன்றியமையாத இடம் உண்டு. அதுதான் நாகரிக வளர்ச்சியின் ஆரம்பம். அறியாமை அகலாமல் நாகரிகம் ஏற்பட முடியாது. அறியாமை இருளை அகற்றுவதற்கு கல்வி வெளிச்சம் அவசியமாகிறது. நாகரிக சமுதாயத்தில் முக்கியப்புள்ளியாக கல்வி இருந்து வருகிறது.
÷ஆதிக்க சமுதாயமும், அரசாங்கமும் கல்வியினை மக்களுக்கு அளிக்காமல் மறுதலித்துக் கொண்டே வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மக்களுக்குக் கல்வி தரப்பட்டால் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஆதிக்கத்தையும், அரசாங்கத்தையும் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
÷இந்திய அரசமைப்புச் சட்டம், 14 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. இருந்தாலும் நாடு விடுதலையடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் கல்வி பெறும் உரிமை மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லையே!
÷தொடக்கக் கல்விதான் இப்படியென்றால் உயர்கல்வி எட்டாத உயரத்தில் ஏறிக் கொள்ளுமோ? இந்திய மக்களின் எதிர்காலம் போல இந்தியக் கல்வியின் எதிர்காலமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய எச்சரிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறதே தவிர, இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. இதனை நம்பி மாணவர்கள் சேர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்காததன் காரணம் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?