By ஆர்.எஸ். நாராயணன்
First Published : 02 November 2015 01:39 AM IST
"பாரத சமுதாயம் வாழ்கவே
வாழ்க வாழ்க பாரத சமுதாயம்
வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொதுஉடமை
ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கு
ஒரு புதுமை...'
- சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவில் நிகழ்ந்த போல்ஷ்விக் புரட்சியின் பின்னணியை நினைவில் நிறுத்தி பாரதியார் பேசிய பொதுஉடமை இன்று நகைப்பிற்குரியதாகிவிட்டது. ரஷியாவும் சீனாவும் இன்று தனிஉடமை ராஜ்ஜியங்களாகிவிட்ட போது பாரத சமுதாயம் எம்மாத்திரம்? முப்பது கோடி ஜனங்கள் இன்று 126 கோடியாகிவிட்டனர்.
"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டோ?' உண்டு. உண்டு. உண்டு.
சென்ற வாரம் எனக்குப் பழக்கமான ஒரு விவசாயி என்னிடம் வந்தார். "மழையை நம்பி தக்காளி பயிரிட்டேன். கருகிவிட்டது. வறட்சி தாங்கி வளர்ந்த வாடாமல்லி விலையில்லாமல் வாடிவிட்டது. வாங்கிய கடனை அடைக்க மாட்டை விற்றேன். பாலுக்கும் விலை இல்லை. மாட்டுக்கும் விலை இல்லை... மாடு விற்ற காசில் மக்காச் சோளம் போட்டுள்ளேன்... அரிசி வாங்கப் பணம் இல்லை. இட்லிக் கடையிலும் கடன்... ஐயா பெரிய மனது பண்ணி அவசரத்திற்கு ஆயிரம் ரூபாய் தாருங்கள். மக்காச்சோளம் அறுத்ததும் தருகிறேன்...' என்று கடன் கேட்டார். எனக்கு வள்ளுவர் கவனத்திற்கு வந்தார்.
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்!'
126 கோடி இந்திய மக்களில் சுமார் 3 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வேலை உள்ளது. சுமார் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தாலும், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து விவசாயம் செய்கிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வழியில்லாமல் தூக்கில் தொங்கத் தயங்குவதில்லை.
இனி பணம் இல்லாதவரைப் பற்றிப் பேசாமல் செல்வந்தர்களைப் பற்றிப் பேசலாமே! சுமார் 60 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டில் வாழ்ந்தாலும், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்வதாக கிரெடிட் சூசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு, மேலும் 24,000 கோடீஸ்வரர்களை இந்தியா உருவாக்கிவிட்டது. இரண்டு லட்சம் கோடீஸ்வரர் இலக்கை இந்தியா எட்டிவிட்ட நிலையில் இந்த உயர்வு சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
126 கோடி இந்தியர்களில் 0.4 சதவீதம் மக்களின் வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலருக்கு மேல். ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் மட்டுமே இந் நாட்டு மன்னர்கள். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்று பாடிய பாரதியின் வாக்கு பொய்த்துப் போனது. ஓட்டுரிமையுள்ள குடிமக்கள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை பெற்றுக் கொண்டு பிரஜா உரிமையை மறந்து ஊழலுக்கு விலை போனதால் ஜனநாயகம் பணநாயகமானது.
அடுத்த கேள்வி, இந்தியாவில் யார் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள்? அவர்களின் தொழில்கள் எவை என்று கவனித்தால் அரசியல், பங்குச்சந்தை, ஹவாலா, கள்ளக்கடத்தல், கனரகத் தொழில், மென்தகடு, செல்லிடப்பேசி, உலாபேசி 2ஜி, 3ஜி, 4ஜி என்று பல இருப்பினும், பல்லடுக்கு மாளிகை - ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், பங்குரிமை / பங்குத் தரகர்கள் முக்கியமானவர்கள். தேர்தல் ஆணையம் தரும் தகவல்களின்படி எம்.எல்.ஏ., எம்.பி. வேட்பாளர்களில் 90 சதவீதம் ரியல் எஸ்டேட், பங்குத்தரகு / பங்குதாரர்களாக உள்ளனர்.
இன்று எம்.எல்.ஏ. / எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அந்த வேட்பாளர் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். கோடியே முதல் முக்கியத் தகுதியாக இருக்கிறது. இது அனைத்துக் கட்சிகளுமே பொதுவாக மேற்கொண்டிருக்கும் நடைமுறை.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் "இந் நாட்டு மன்னர்கள்' தொடர்பாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 50 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்கிறது.
தில்லியில் மக்களுக்காகவே நாங்கள் என்று மார்தட்டிப் பேசி போட்டியிட்டு வென்ற அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வேட்பாளர்களில் 33 பேர் கோடீஸ்வரர்கள். அவ்வாறே பா.ஜ.க., காங்கிரஸிலும் கோடீஸ்வரர்களே பெரும்பான்மையாகப் போட்டியிட்டனர்.
இந்திய அரசியலில் எல்லாக் கட்சியினரும் கோடீஸ்வரர்களையே களத்தில் இறக்கும் காரணம், கோடீஸ்வரர்களின் வெற்றியை 26 சதவீதம் உறுதி செய்யலாம். லட்சாதிபதிகளின் வெற்றிக்கு உறுதி ஏழு சதவீதமே.
இதைவிடத் திடுக்கிட வைக்கும் ஒரு புள்ளிவிவரம், ஒரு எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அவர் போட்டியிட விரும்பினால் ஐந்தாண்டு இடைவெளியில் அவர் சொத்தைப் பன்மடங்கு பெருக்கியிருந்தால் மறுபடியும் சீட் கிடைக்க வழி உண்டு.
உதாரணமாக, தில்லி பிஜ்வாசன் தொகுதியில் 2008-இல் சத்பிரகாஷ் ராணா போட்டியிட்டபோது அவரிடம் ரூ.6.38 கோடி சொத்து இருந்தது. 2013-இல் நின்றபோது அவர் சொத்து ரூ.105.51 கோடி. ஐந்தாண்டு இடைவெளியில் தன் சொத்தை 16 மடங்கு உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.
கோடிகளைப் பற்றி பேசும்போது மற்றொரு வகையான புள்ளிவிவரத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் தரும் தகவல் அடிப்படையில் - 543 மக்களவைத் தொகுதிகள், 2,700 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள், 40 பெரிய அரசியல் கட்சிகள், 22 தேசிய மொழிக் கூட்டம் - செய்யும் செலவுகள் அடிப்படையில் இந்திய ஜனநாயகத்தின் அடக்கவிலை சுமார் ரூ.2,50,000 கோடி.
ஆகவே, அரசியல் என்பதும் ஒரு வகையான பங்குச் சந்தை சூதாட்டமே. ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பதவிக்கு இரண்டு கோடி செலவழிப்பதில் என்ன தவறு? வாக்குச்சீட்டின் விலை ரூ.500 அல்லது ரூ.1,000 என்று கொண்டாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வறுமைக்கோட்டில் வாழும் 60 சதவீத இந்தியர்களுக்கு இரண்டு நாள் கூலி, பிரியாணி, முட்டை, சாப்பாடு கிடைக்கிறதே. படித்த நகரவாசிகளுக்கும், கிராமத்து மேல்தட்டு மக்களுக்கும் பணம் பட்டுவாடா இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை பட்ஜெட் என்பது நாட்டின் நியதி ஆகிவிட்டது. இந்தியா விடுதலையான பிறகு புகழ்பெற்ற பொருளியல் மேதைகளான சிந்தாமணி தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நேருவுக்குப் பின் சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றோர் பதவி வகித்த காலகட்டத்தில் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருந்தது.
ஒரு காலகட்டத்தில் ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, ராஜாஜி, கே.எம். முன்ஷி, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அப்பழுக்கற்றத் தலைவர்கள் இந்தியாவை ஆண்டபோது சிறு சிறு ஊழல் புகார்கள் எழுந்ததுண்டு.
அரசு அதிகாரிகள் ஊழல் செய்தனர். நேரு காலத்து அமைச்சர்கள் ஊழல் என்றால் ஓட்டம் பிடிப்பார்கள். அன்று அரசியல் வியாபாரமில்லை. கக்கனைப் போல் ஒருவர் அமைச்சராக முடிந்தது. இன்று அப்படி இல்லை. ரியல் எஸ்டேட், பங்குகள், தனியார் பொறியியல் கல்லூரி என்று கோடியை அடையாளப்படுத்தும் தொழில் வேண்டும். சரி, பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு வருவோம்.
பற்றாக்குறை பட்ஜெட்டின் பன்முக வளர்ச்சிக்கு மன்மோகன் சிங் நிதியமைச்சராயிருந்தபோது வித்திட்டார். பின்னர், ப.சிதம்பரம் விருட்சமாக அதை வளர்த்தார். சிதம்பரம் சென்றார். அருண் ஜேட்லி வந்தார். எத்தனை ஜேட்லி வந்தாலும் இந்த நிலையைக் குறைப்பதோ, மாற்றுவதோ எளிதல்ல.
ஒரு சாதாரண மனிதனுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் என்ற தத்துவம் புரியாது. பற்றாக்குறை என்றால் அப்படியே விட்டுவிடுவதல்ல. பற்றாக்குறையை ஈடுசெய்ய வரம்பு மீறும் வழியில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும்.
அரசு கஜானாக்களுக்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வந்துவிடும். இப்படி நோட்டுகள் அச்சடித்து வழங்கினால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயரும். விலைவாசி உயரும்போது வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுவர். சரி சரி.
இப்படி அச்சடித்த நோட்டுகள் எங்கே போயிற்று? பல கோடி ரூபாய் செலவு செய்து எம்.பி., எம்.எல்.ஏ. ஆனவர்கள் எவ்வளவு கோடி சம்பாதித்தார்கள்? இதற்கெல்லாம் விடை வேண்டினால் ஆடிட்டர் ஜெனரல் விடை தருவார்.
2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ச ஊழல், ஆகாச ஊழல் என்று அவருக்குத் தெரிந்தவற்றைக் கூறலாம். தெரியாத கணக்குகள் எவ்வளவோ?
இந்தியாவில் மாபெரும் பதவிகளை வகித்த மாண்புமிகு அமைச்சர்களும், மாபெரும் அரசு செயலாளர்களும், தத்தம் கோடீஸ்வரர் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள லட்சம் லட்சமாகக் கையூட்டுகளைப் பெற்று வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களுக்குக் கையொப்பம் இட்டு, ஒப்பந்தப் போர்வையில் வளர்ந்த தொழில் மன்னர்கள், ரியல் எஸ்டேட் மன்னர்கள், பங்குத்தரகு மன்னர்கள் ஆகியோரையும் அரவணைத்து இரண்டு லட்சம் கோடீஸ்வரர்களை உருவாக்கினார்கள்.
இரண்டு லட்சம் கோடீஸ்வரர்களால் இது கோடி நாடு. ஆனால், இந்தியா என்று குடிமக்கள் நாடாக மாறும்?
126 கோடி இந்திய மக்களில் சுமார் 3 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வேலை உள்ளது. சுமார் 60% மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தாலும், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து விவசாயம் செய்கிறார்கள்.