ஓர் அநியாய மரணத்துக்குப் பின்பான போராட்டங்கள் என்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. அதேநேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போவச் செய்வது என்பது அதிகார மையங்களுக்கு ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொனி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்து விரட்டியும் கூட போராட்டம் ஒடுக்கப்படும்.
இதில் சேலம் வினுபிரியா தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு பிரச்சினையை தற்காலிகமான முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
எந்தவித சமாளிப்பும், திசை திருப்பல்களும், அவதூறுகளும், மிரட்டல்களுமின்றி பகிரங்க மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அதிகாரி இறங்கி வந்திருப்பது என்பது நமக்கு புதுமையானதுதான். ஆனால் காக்கிச் சட்டைகள் இப்படியான மன்னிப்புக் கோரல்களை எப்போதோ துவங்கியிருந்திருந்தால் இன்னும் சில மாற்றங்களை நாம் அனுபவிக்கத் தவறியிருக்க மாட்டோம்.
இந்த மன்னிப்புக் கோரலுக்குப் பின்னால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் செயல்பாடின்மை, ஊழல், பாரபட்சம் என்பது நபர்களுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொருமுறையும் தன்னை தகவமைத்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இங்குண்டு. பாடகி ஒருவருக்கு எதிராக ஆபாசமாக இணையத்தில் பேசியதாக, வழக்குப் பதிந்து விரைந்து பிடித்து, கைது செய்த காவல்துறை, அதற்கு நிகராக, வேறு எந்த இணையக்குற்றங்களிலும் இதுவரை செயல்பட்டதாக நான் அறிந்திருக்கவேயில்லை.
இந்த மன்னிப்பு கோரலுக்குப் பின்னால் மாவட்டக் காவல்துறை, மிக வேகமாகச் சாட்டையைச் சுழற்றும் உண்மையான குற்றவாளி விரைந்து பிடிக்கப்படலாம், தவறு செய்த காவல்துறையினர் தண்டிக்கப்படலாம். இவை மட்டுமே தன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு, பெண்ணை இழந்த பெற்றோருக்கு போதுமா என்ற கேள்வியெழும் முன்...
ஒட்டுமொத்தப் பெற்றோர்களிடமும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இந்த உரையாடல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தால், அதற்காக நானும் முன்பாகவே பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை மட்டுமே குறை சொல்லும் நோக்கம் என்னிடமில்லை. ஒரு தந்தையாக நானே என்னை இதில் பொருத்தி அந்த உரையாடலை நிகழ்த்த வேண்டியும் உள்ளது.
ஒரு பெண்ணை அடி பணிய வைக்க, தோற்கடிக்க, பழிவாங்க குலைக்கச்செய்ய அவளின் பெண்மை மீது தாக்குதல் நடத்தினால் போதும் என வக்கிரம் மிகுந்த, கோழைத்தனமான ஆண்கள் நினைப்பதை மறுக்கவே முடியாது.
ஆண் மட்டுமல்ல, பெண்களும் கூட பெண்களை அவ்வாறு மிரட்டியதைக் கேள்விப்பட்டதுண்டு. நான் முப்பது ஃபேக் ஐடி வச்சிருக்கேன், அதிலிருந்து உன் படத்தை மார்ஃபிங் செய்து போட்டு சாவடிப்பேன் என சவால்விட்ட ஒரு பெண் குறித்து அறிந்தபோது பேச்சு மூச்சற்றுப்போனேன். ஆகா, ஆணோ பெண்ணோ இன்னொரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதன் மூலம் வீழ்த்த முடியும், அழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
இந்த நிலையில் வினுபிரியா எழுதியதென இணையத்தில் வெளியான கடிதத்தில் இருக்கும் வரிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழலில், செயல்படாத சைபர் கிரைம் போலீஸாரை மற்றும் குற்றவாளியைப் பிடித்து தண்டித்துவிடுதல் மட்டுமே ஒட்டுமொத்தத் தீர்வாகுமா?
''என்னோட லைஃப் போனதுக்கப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்'' என்ற ஒரு பெண்ணின் மனநிலைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் படம் மார்பிங் செய்யப்பட்டோ அல்லது உண்மையாகவோ ஆபாசமாக வெளிவந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே போய்விட்டது என்ற தீர்ப்பை அந்த 22 வயது பெண்ணுக்கு வழங்கியது யார்? மேம்போக்காக, படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது? அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு சொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன?.
''சத்தியமா சொல்றேன் என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பல. நம்புங்க'' எனும் வினுபிரியாவின் ஆயாசமான குரல் மரண ஓலமாய் எதிரொலிக்கிறது. 'ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும்?' என்ற ஒரு அல்பமான சந்தேகத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ''நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது?'' என பெற்றோரோ, உறவினரோ, காவல் துறையோ திரும்பத் திரும்பக் கேட்டிருந்தால் மட்டுமே, தோற்றுப்போன மனநிலையில், இப்படியான ஒரு அழுகுரல் வரிகள் வந்திருக்கக்கூடும்.
''அப்பா அம்மாவே என்ன நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னப்பத்தி கேவலமாக பேசுறாங்க'' இந்த வரிகளோடு, வினுபிரியா எழுதி கடைசியாக அடித்துவிடப்பட்டிருக்கும் வரிக்குள் என்ன இருக்கும் என்ற யோசனையும்தான் மிகக்கடுமையாக மிரட்டுகிறது.
''உனக்கெதிராக கோழைத்தனமாக, வக்கிரத்தோடு ஏவிவிடப்படும் தாக்குதலின்போது, ஊரும் உலகமும் உனக்கு எதிராக நின்றாலும், ஒரு தாயாக, தந்தையாக நான் உன் பக்கம் நிற்கிறேன்'' எனத் தரும் உறுதி, நம்பிக்கை, உத்திரவாதம் தானே அடித்து வீழ்த்தப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டெடுக்கும்.
காவல்துறையினரின் அலைக்கழிப்பு, செயலின்மை, லஞ்சம் வாங்கிய கொடூரத்தனம் மட்டுமே அந்த பெண்ணின் சுய கொலைக்கு காரணமென நாம் இந்தத் தற்கொலையைக் கடந்துபோவதென்றால், காவல்துறை கண்காணிப்பாளர் கேட்ட பகிரங்க மன்னிப்போடு திருப்தியடைந்துவிடுவதுதான் சரியெனப்படுகிறது.
மகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள் முன் விரல் சுட்டி, நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள், ஏன் இப்படிச் செய்யவில்லை எனக் கேட்பது இந்தச் சூழலில் எந்த வகையிலும் நியாயமான செயலாகாது.
கோழைகள், வக்கிரம் மிகுந்தவர்கள் பெண்களை வீழ்த்த இதுபோன்ற ஆயுதங்களை, ஒரு குற்றத்தின் தண்டனைக்குப் பின்பு இனி முன்னெடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. ஒரு அதிகாரியின் பகிரங்க மன்னிப்போடு, தவறிழைத்த காவல்துறையினர் பாவமன்னிப்பு பெற்று, தங்களை உணர்ந்து புனிதர்களாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பிவிட முடியாது.
ஆனால், வினுபிரியாவின் இந்தக் கடிதம், வினுப்பிரியாவை ஒத்த பெண்களுக்கு, ஒரு சித்தரிக்கப்படும் ஆபாசப் படம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவதாக நம்புகிறீர்களா என்பதையும், வினுபிரியாவின் பெற்றோர், உறவினர், தொடர்புடைய அதிகாரிகளை ஊசி - நூல் என்று சந்தேகித்து, அவர்களைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறீர்களா எனும் மிகப்பெரிய கேள்விகளைத் தான் காற்றில் விதைத்துள்ளது.
இனி எஞ்சியுள்ளவர்கள் தீர்மானிக்க வேண்டியது எது வாழ்க்கை, எது அவமானம், எது தவறு என்பதைத்தான். வினுபிரியாக்கள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்தும்வரை, பெற்றோரும் உற்றாரும் வினுபிரியாக்களோடு உரத்து உடன் நிற்கும் வரை, வக்கிரம் மிகுந்த கோழைகளும், ஊழல் அதிகாரிகளும் ஒடுங்கிவிடுவார்கள் என நம்பாதீர்கள்.
ஈரோடு கதிர் - எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/
தொடர்புக்கு kathir7@gmail.com