திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாளுடன் ஒருநாள்!திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிறதே என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால், அப்படி நீண்ட நேரம் ஆவதற்கு உரிய காரணம் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டால், அவர் மேல் நமக்கு கோபம் வராது. நித்தியப்படிக்கு அதாவது தினம்தோறும் அவருக்கு செய்யப்பட்டும் சேவைகளால்தான் இத்தனை நேரம் ஆகிறது. இந்த சேவைகள் எல்லாம் இன்று நேற்றல்ல, ஶ்ரீராமானுஜர் அவர்களால் வரையறுக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருபவை. ஒரு நாள் முழுவதும் அங்கு நடைபெறும் சேவைகள் பற்றிய தொகுப்பு இது.
திருமலையில் ஒரு நாள் முழுவதும் வெங்கடேசப் பெருமாளுடன் இருந்து அங்கு நடை பெறும் சேவை மற்றும் பூஜைகளைக் கண்டுகளிப்போம். ஒவ்வொரு சேவை நடந்துமுடிந்ததும்தான், ‘
ஸ்பெஷல் தரிசனம்’, ‘சர்வ தரிசனம்’, ‘திவ்ய தரிசனம்’ காண வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருமலையானுக்குரிய நித்தியசேவைகள்.
சுப்ரபாத சேவை
விடியற்காலை -3.00 முதல் 3.30மணி
நம்மைப் போல் அவர் 8 மணிநேரமும் தூங்குவதில்லை... 8 மணி வரையிலும் தூங்குவதில்லை. சுப்ரபாத சேவையின் மூலம் அவரை விடியற்காலை 3 மணிக்கெல்லாம் பள்ளியெழச் செய்கிறார்கள்.
‘’கௌசல்யா சுப்ரஜா ராம! பூர்வா சந்த்யா ப்ரவர்ததே!
உத்திஷ்ட நரசார்தூல! கர்தவ்யம் தைவமாஹ்நிகம்!!’’
ஆழ்வார்கள் கூற்றுப்படி வழிவழியாய் ஆட்செய்யப்பட்டு வரும் கைங்கர்யங்களில் ஒன்று எம்பெருமானைத் துயிலெழுப்பும் திருப்பள்ளி எழுச்சியை உணர்த்தும் சேவையே சுப்ரபாத சேவையாகும். 15 ம் நூற்றாண்டில் ஸ்ரீமணவாள மாமுனி சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி எழுதினார். இந்த திவ்ய கானத்தை எங்கு கேட்டாலும், மனது திருமலை க்ஷேத்திரத்தை சென்றடைகிறது.
ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 3.00-3.30 மணி)
தோமாலை சேவை
தோமாலை சேவை போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேகம் புஷ்ப அலங்காரப் பிரியனான திருவேங்கட முடையானின் திவ்ய மங்கள மூர்த்திக்கு அநேக புஷ்ப மாலைகளுடன், துளசி மாலைகளோடு செய்யும் அலங்காரம் தோமாலை சேவை!.
சேவை நேரத்தில் மாலைகள் உள்ள மூங்கில் கூடையை ஜீயர் ஸ்வாமிகள் தலைமீது சுமந்து, சத்ர சாமரங்களுடன் பலகை மணி, சின்னடோலி ஒலிக்க, சந்நிதி இடையர் தீவட்டியுடன் வழிகாட்ட புஷ்ப அறையிலிருந்து புறப்பட்டு துவஜஸ்தம்பத்தை பிரதட்சணம் பண்ணி, வெள்ளி வாயில் வழியாக உள்ளே வந்து விமான பிரதட்சணம் செய்து தங்க வாயில் வழியாகச் சென்று ஸ்வாமி சந்நிதிக்குள் சமர்ப்பிப்பார்.
அர்ச்சக ஸ்வாமிகள் இந்த மாலைகளை ஸ்வீகரித்து மூல மூர்த்தியின் திருமார்புக்கும்,திருக்கழுத்துக்கும், மலர் மாலைகளை அணிவிப்பார்.
கொலுவு (தர்பார்)
தங்க வாயிலை ஒட்டி உள்ளே இருக்கும் அறையை ‘ஸ்நாபன மண்டபம்’ என்பார்கள். இங்கே திருமலையானுக்கு பிரதி தினமும் ஆஸ்தானம் நடைபெறும். ஸ்ரீநிவாச மூர்த்தியை மங்கள வாத்தியம் முழங்க, ஸ்நாபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் கொலுவிருக்க வைப்பார்கள்.
ஆஸ்தான பண்டிதர் ஸ்ரீநிவாச பிரபுவுக்கு பஞ்சாங்கத்தை வாசித்து, அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களைக் கூறுவார். அன்றைய உத்ஸவ விசேஷங்களை ஸ்வாமிக்குத் தெரிவிப்பர்.
அதே போன்று மறுநாள் திதி, வார, நக்ஷத்திரங்களையும் செவிமடுப்பார்கள். நித்திய அன்னப்பிரசாத திட்டத்துக்கு சிறந்த அளவில் நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களின் பெயர்களை எம்பெருமானிடத்தே வாசிப்பார்கள். பொக்கிஷதாரர்(கணக்கு) குமாஸ்தா எம்பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட முந்தைய நாள் வருவாய் விவரங்களை, ஆர்ஜித சேவையின் மூலம், பிரசாதங்களின் விற்பனை மூலம், உண்டியல் மூலம், காணிக்கையாக வந்த தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் இதர உலோகப் பாத்திரங்கள், நகைகள் போன்றவற்றின் மூலம் வந்த நிகர வருவாயை பைசாவே வரை கணக்கிட்டு ஸ்ரீநிவாச மூர்த்திக்கு விவரமாகக் கூறி பக்தி பிரபத்தியோடு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விடைபெறுவார்.
சஹஸ்ரநாமார்ச்சனை
திருமலை க்ஷேத்திரத்தில் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு ஒவ்வொரு நாளும் மூன்று வேளை இந்த அர்ச்சனை சேவை நடைபெறும். உதயத்தில் நடைபெறும் முதல் அர்ச்சனையின் போது ஸ்வாமியை சஹஸ்ரநாமா வளியுடனும், மதியம், மாலை நடைபெறும் அர்ச்சனையின் போது அஷ்டோத்த சதநாமாவளியுடனும் அர்ச்சிக்கப்படுகின்றது. திருக்கோயிலில் காலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் நடைபெறும்.
எம்பெருமானுக்கு சக்கரைப் பொங்கல், புளியோதரை, பொங்கல் முதலான அன்ன பிரசாதத்துடன் லட்டு, வடை போன்றவற்றையும் சேர்த்து நிவேதனம் செய்வார்கள். இதற்கு முன்பே ஒரு பரிசாரகர் சுவாமி மடைப்பள்ளியிலிருந்து பிரசாதங்களை மேளதாள மரியாதையுடன் வராஹ சுவாமி திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்வார்.
திருமலை க்ஷேத்திர சம்பிரதாயப்படி ஸ்ரீவராஹ சுவாமிக்கு முதல் நிவேதனம் நடைபெறும். அங்கு நிவேதனம் நடந்த பிறகு இங்கு ஆனந்த நிலையத்தில் எம்பெருமானுக்கு நைவேத்தியம் நிவேதிக்கப்படுகிறது. அதன் பின்னர் அர்ச்சக ஸ்வாமிகள் சுகந்த திரவியம் பூசின தாம்பூலத்தை பக்தியுடன் சுவாமிக்கு சமர்ப்பிக்கின்றனர்.
நித்திய கல்யாணோத்ஸவம்
ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ மலையப்ப ஸ்வாமிக்கு நித்திய கல்யாணோத்ஸவம் நடைபெறுகிறது. இரண்டாவது அர்ச்சனை, மணி நிவேதனம் பூர்த்தியான பிறகு, திருமலையான் உற்சவ மூர்த்தியை சகல ராஜமரியாதையுடன் ஆனந்த நிலையத்திலிருந்து சம்பங்கி பிரதட்சணத்தில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். 15 ம் நூற்றாண்டில், தாளப்பாக்கம் வம்சத்தாரால் இந்த கல்யாணோத்ஸவம் ஆரம்பிக்கப்பட்டதாக கல்வெட்டு மூலம் தெரிகிறது.
தாளப்பாக்கம் வம்சத்தவரே இன்னும் கன்னியாதானம் பண்ணுவது குறிப்பிடதக்கது. உலக மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ பெண்கள் இப்பிறவியிலும் அடுத்து பிறவியிலும் சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்னும் மகா சங்கல்பத்தோடு ஏழுமலையானுக்கு கல்யாணோத்ஸவம் பண்ணுவது வழக்கம்.
இங்கு நித்திய கல்யாணம் பண்ணுவதாலே இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானை, ‘நித்திய கல்யாண சக்கரவர்த்தி’ என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை நிர்வகிக்கும்.
டோலோத்ஸவம்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மலையப்பஸ்வாமி கல்யாணோத்ஸவத்துக்குப் பிறகு கிரஹஸ்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்க கண்ணாடி அரங்கத்துக்கு எழுந்தருளப்பண்ணுகின்றனர். இந்த மண்டபம் நடுவில் அமைக்கப்பட்டுள்ள டோலில் (ஊஞ்சலில்) ஸ்வாமியை உபய நாச்சிமார்கள் சமேதராக ஊஞ்சல் சேவையை நிர்வகிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மதியம் 1.00 முதல் 2.00 மணிக்கு மத்தியில் நடைபெறும்.
ஆர்ஜித பிரம்மோத்ஸம்
உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளும் மலையப்ப ஸ்வாமிக்கு வாகன சேவையை நிர்வகிப்பது ஆர்ஜித பிரமோத்ஸவமாக அழைக்கப்படுகின்றது. பக்தர்களின் முன்னிலையில், மலையப்ப சுவாமியை வரிசையாக செஷ, கருட, அனுமன் வாகனங்கள் மீது எழுந்தருளப் பண்ணுவித்து கற்பூர நீராஜனம் சமர்ப்பிப்பர். பிரதி தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மத்தியில் வைபவோத்ஸவ மண்டபத்தில் நடைபெறும்.
ஆர்ஜித வசந்தோத்ஸவம்
ஆர்ஜித வசந்தோத்ஸவத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி பக்தர்களின் முன்னிலையில் வசந்தோத்ஸவம் நடைபெறுகிறது. பால், தயிர், சந்தனம், மஞ்சள் முதலான அபிஷேக பொருட்களுடன் கண்ணுக்கு விருந்தாக அமையும். இந்த வசந்தோத்ஸவம் வைப வோத்ஸவ மண்டபத்தில் மாலை 3-4 மணிக்கு மத்தியில் நிர்வகிக்கப்படுகிறது.
சஹஸ்ர தீபலங்கார சேவை
உபய தேவிமார்களுடன் எழுந்தருளும் மலையப்ப ஸ்வாமி சர்வ அலங்காரத்துடன் வைபவோத்ஸவ மண்டபத்திலிருந்து கொலுவு மண்டபத்துக்கு எழுந்தருள்வார் .அதற்குள் திவ்ய உலகமாக ஒளிர்விடும் சஹஸ்ர தீபங்களின் இடையில் உள்ள ஊஞ்சலில் எம்பெருமான் உபய தேவிமார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு திருக்காட்சியளிக்கின்றார். வேத, நாத, கானங்களைக் கேட்டுக் கொண்டு மலையப்ப ஸ்வாமி மெதுவாக ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.
ஆலயமணி மணியோசை
தினமும் மாலை வேளையில் எம்பெருமானின் நைவேத்தியத்தின் போது ஒலிக்கும் ஆலய மணியோசை இல்லந்தோறும் ஒலிக்க வேண்டும் என்றும் எண்ணத்தில் ஸ்ரீவேங்கடேஸ்வரா பக்தி சானல் தினமும் மாலை வேளையில் 7.30 மணி முதல் 8.00 மணி வரை இதனை நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.
ஏகாந்த சேவை
எம்பெருமான் திருக்கோயிலில் இறுதியாக நடைபெறும் சேவை ஏகாந்த சேவை. தங்கக் கட்டிலை கொண்டு வந்து ஆனந்த நிலையத்தின் முன்பு உள்ள சயன மண்டபத்தில் வெள்ளி கொலுசில் தொங்கவிடப்பட்டு அதன் மீது பட்டு மெத்தை, தலை அணை அமர்த்துவர்.
திருமலையானுடைய பரம பக்தரான தாரிகொண்ட வெங்கமாம்பாள் வம்சத்தவர்கள் அந்தத் தங்கக் கட்டிலைச் சுற்றி வைப்பர். தாரிகொண்ட வெங்கமாம்பாள் சார்பில் சமர்பிக்கப்படும் முத்துஹாரத்தி தட்டை, ஏகாங்கிக்கு அளித்து அவர் வெளியே வந்து விடுவார். சந்நிதியிடையர் இந்த கட்டிலின் முன்பு இரண்டு தீபங்களை ஏற்றி வெளியே வருவார்.
அர்ச்சக ஸ்வாமிகள் ராமர் மேடை கதவை சாத்தி, தங்கவாயிலுக்குத் திரையிடுவார். அப்போது கருட மண்டபம் அருகே சன்னாயி மேளம் கேட்பதற்கு இனிமையாக வாசிக்கப்படும். ஆலயத்துக்குள் அர்ச்சக ஸ்வாமிகள், எம்பெருமானுக்கு உபசாரங்கள் பண்ணி, பல்வேறு பழங்களால் சர்க்கரை, தேன்கலந்து தயார் செய்யப்பட்ட பிரசாதத்தை, சர்க்கரை, முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், உலர்ந்த தேங்காய்த் துண்டு கலந்து தயார் செய்த பிரசாதத்தையும் சர்க்கரை கலந்த சூடான பாலையும், நிவேதிப்பர். சுகந்த திரவிய வாசனைக் கலந்த தாம்பூலத்தை சமர்ப்பித்து, கற்பூர நீராஜனம் சமர்ப்பிப்பர்.
அதன் பின்னர் அர்ச்சக ஸ்வாமிகள் மறுபடியும் ஸ்வாமிக்கு பாத நமஸ்காரம் பண்ணி, அங்குள்ள போக ஸ்ரீநிவாசமூர்த்தியை பஞ்சசயனத்தின் மீது பள்ளி கொள்ளுமாறு பிரார்த்தித்து, கட்டிலின் மீதிருந்து பக்தர்களை காணும்படிக்கு தென்னிசை தலை வைத்தப்படி பள்ளிகொள்ளச் செய்வார்கள்.
கோயிலின் உள்ளே இந்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க பக்தர்கள், தங்கவாயில் முன்பு உட்கார்ந்து
ஸ்வாமி தரிசனந்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஏகாந்த சேவைக்கு பிறகு யாரும் விமான பிரதட்சணம் செய்யமாட்டார்கள். அந்த சமயத்தில் அங்கு தேவதைகள் உலவுவதாக ஐதீகம்.
எஸ்.கதிரேசன்