எஸ்பிபி., சர்ச்சை: இளையராஜா செய்தது சரியே!
இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் சரியா... தவறா...? என்ற விவாதம் போய் கொண்டிருக்கும் வேளையில், தனது காப்புரிமையை நிலைநாட்ட இளையராஜா செய்தது சட்டப்படி சரியே. சட்டத்தை மதிக்கும் எஸ்.பி.பி.,யும் இதை நிச்சயம் புரிந்து கொண்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ்த் திரையிசை உலகில் இப்படி ஒரு மோதல் ஏற்படும் என்று ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தங்களது நட்பைப் பற்றி பல மேடைகளில் இளையராஜாவும், எஸ்பிபியும் வெளிப்படுத்தியவர்கள். அவர் இவரைப் பற்றிப் புகழ, இவர் அவரைப் பற்றிப் புகழ என பல இசை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தவர்கள்தான் நாம். ஆனால், ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சியின் மூலம் இருவருக்குள்ளும் இப்படி ஒரு மோதல் நடந்தது எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் இந்த மோதல் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது.
இளையராஜா கடந்த வருடம் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை அந்த நிகழ்ச்சியில் பாட அழைத்ததாகவும், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக 7 லட்சம் ரூபாய் வாங்கும் எஸ்பிபி, 20 லட்ச ரூபாய்க்கு குறையாமல் கொடுத்தால்தான் வருவேன் எனச் சொன்னதாகவும் 'வாட்ஸ்-அப்'பில் தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கின்றன.
இளையராஜாவின் நிலைப்பாடு
2015ம் ஆண்டு தன்னுடைய பாடல்களை ஒலி, ஒளிபரப்புவதும் மற்ற ஊடகங்களில் பயன்படுத்துவது குறித்தும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தார் இளையராஜா. இளையராஜாவின் அறிவிப்பைத் தொடர்ந்து 'எப்எம்' வானொலிகள் பலவும் அவருடைய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தின. இருந்தாலும் இளையராஜா தனக்கென தனி ஊடக அமைப்புகளை 'யு டியூப், ஃபேஸ்புக், இணையதளம்' ஆகியவற்றில் ஏற்படுத்தி அதன் மூலம் ரசிகர்கள், அவருடைய பாடல்களைக் கேட்க வழி செய்தார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல்போன் நிறுவனங்கள் தான் இப்படிப்பட்ட பாடல்களைப் பணமாக்கும் வித்தையை சுலபமாக ஆரம்பித்து வைத்தன. பாடல்கள் டவுன்லோடு, ரிங்டோன் என பல விதத்தில் அவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலை ஆரம்பித்தனர். ஏதோ ஒரு மணியோசையை ரிங்டோனாக வைத்துக் கொண்டிருந்த பலரும், தங்களுக்குப் பிடித்தமான பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
ரூ.100 கோடி ராயல்டி வர வேண்டியுள்ளது
அதே சமயம் தனக்கு வரவேண்டிய ராயல்டி தொகையே சுமார் 100 கோடி இருக்கிறது, அது வசூலானால் அதிலிருந்து பாதித் தொகையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்குத் தருவதாகவும் இளையராஜா அறிவித்தார். அதோடு, தன் பாடல்களை சாதாரணமான கலை நிகழ்ச்சிகளில் பாடும் இசைக் குழுக்களுக்குப் பெருந்தன்மையோடும் அனுமதி அளித்தார். யு டியூபில் அதிகாரப்பூர்வமில்லாத பல கணக்குகளில் இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களையும் லட்சக் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அதை முறைப்படுத்தினால் அதன் மூலமே காப்புரிமை வைத்திருக்கும் இளையராஜாவிற்கு வருமானம் வரும்.
காப்புரிமை என்பதில் யாருக்குச் சொந்தம் அதிகம் என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பாடல்களைப் பொறுத்தவரையில் இசையமைப்பாளருக்கு, பாடலாசிரியருக்கு, தயாரிப்பாளருக்கு பங்கிருப்பதாகவும் அதைப் பாடியவர்களுக்கும் பங்கில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால், 2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின் படி பாடியவர்களுக்கும் பங்குண்டு என்கிறார்கள். இந்த சட்டம் பற்றி திரையிசை உலகில் ஒரு குழப்பமான தன்மையே நிலவுகிறது.
நோட்டீஸ்
இந்த சூழ்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் தற்போது நடத்தி வரும் இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பாடல்களுக்கு ராயல்டி தராமல் பாடக் கூடாது என்று இளையராஜா மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பிரச்னைக்கு காரணம்
அந்த நோட்டீசிற்கு பதில் நோட்டீஸ் அனுப்பாமல் அந்த விவகாரத்தை பொதுவெளியில் எஸ்பிபி ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்தியதுதான் பிரச்சனைக்குக் காரணமாக அமைந்தது. அடுத்த நாள் இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள், இளையராஜா பாடலை பாடச் சொல்லிக் கேட்கக் கூடாது என்பதற்காகவே எஸ்பிபி இந்த வேலையை செய்தார். அதற்குப் பதில், ‛‛இளையராஜாவின் அனுமதி பெறவில்லை அனுமதி பெறாமல் பாடுவது தவறு. எனவே அனுமதி பெற்ற பிறகு அவரது பாடல்களை பாடுகிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை என்று கருதுகிறார்கள் ரசிகர்கள். ஆனால் அதை விடுத்து, ‛‛ராயல்டி பற்றியோ, காப்புரிமை பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறியதுதான் ஆச்சரியமாக இருந்தது.
ராயல்ட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள்
காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அதற்கு இந்தியாவில் ஐபிஆர்எஸ்., பிபிஎல்., சிம்கா, இஸ்ரா... போன்ற இந்திய அரசால், சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்துமே இசை கலைஞர்களுக்கு அவர்களின் ராயல்டி உரிமையை பெற்று தரவே தொடங்கப்பட்டுள்ளது.
இளையராஜா செய்தது சரியே...!
அப்படி பார்க்கையில், ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும். எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். அப்படி வசூலிக்கப்படும் பணத்தில் பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு கொடுக்கிறார்கள். அப்படியே அதில் ஒரு பகுதியை படைப்பாளியான இளையராஜாவிற்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. தனக்கான உரிமையை சட்டப்படி நிலை நாட்ட இளையராஜா முயன்றால் அது எப்படி பேராசையாகும்.
இது ஏதோ இளையராஜா மட்டும் செய்வது போன்று தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. இளையராஜா மட்டுமல்ல ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்தியாவின் டாப் இசை கலைஞர்கள் பலரும் ராயல்டி விஷயத்தில் ஐபிஆர்எஸ்., பிபிஎல்., உள்ளிட்ட அமைப்புகள் சொல்படியே நடக்கின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.
இஸ்ராவில் எஸ்பிபி.,யின் பங்கு
2013ம் ஆண்டு சென்னையில் ISRA என்ற இந்திய பாடகர்கள் உரிமை அமைப்பின் சென்னைப் பிரிவை பி.சுசீலா, கே.ஜே.யேசுதாஸ், எஸ்பிபி, ஹரிஹரன் உள்ளிட்டோர் ஆரம்பித்தார்கள். அப்போது பேசிய எஸ்பிபி, “இந்த அமைப்பு யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல. எங்களுக்கு உண்டான உரிமையைக் கேட்டுப் பெறுகிறோம். பணம் சம்பாதிப்பது ஒரு பிரச்சனையோ அல்ல,” என்றார்.
தங்களுக்கான ராயல்ட்டி தொகை கிடைக்க வேண்டும் என்று தானே இவர்கள் குரல் கொடுத்தனர். அப்படி இருக்கையில், இளையராஜா செய்தது மட்டும் எப்படி தவறாகும். இந்த விஷயத்தில் இளையராஜா சட்டப்படி தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஆகவே சட்டப்படி இது எந்த விதத்திலும் தவறாகாது என்பதே நிதர்சனமான உண்மை!
இளையராஜா - எஸ்பிபி., இருவரும் தேவை
இளையராஜா ஏதோ பணத்திற்காக செய்கிறார் என்று எஸ்பிபி., மனதில் கொள்ளாமல் 40 வருட நட்பிற்கும், சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் நம்பாமல், நட்பையும், சட்டத்தையும் நம்பினார் என்றால் இளையராஜா செய்தது சரி தான் என்று எஸ்பிபி., நிச்சயம் உணருவார். நாளையே எஸ்.பி.பி., ஒரு பாடலை எழுதி, இசையமைத்தார் என்றால் அவருக்கும் இதே சட்டம் தான் பொருந்தும். சட்டம் தெரிந்த எஸ்பிபி., நிச்சயம் இளையராஜாவின் சட்டத்தையும் ஏற்பார். தமிழ் சினிமாவிற்கு ராஜாவும் தேவை, எஸ்பிபி.,யும் தேவை, இருவரும் இணைந்து இந்த சச்சரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் மேடையில் தோன்றி இசை ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
முடிவுக்கு வருமா...?
இளையராஜாவின் ரசிகர்களுக்கும், எஸ்பிபி ரசிகர்களுக்கும் இடையேயான மோதல், சமூக வலைத்தளங்களில் வரம்பு மீறிச் சென்றுவிட்டது. எப்படியோ இளையராஜா - வைரமுத்து, இளையராஜா - பாரதிராஜா ஆகியோரின் பிரிவு போல, இளையராஜா - எஸ்பிபி இடையேயான பிரிவு பெரிதாகிவிடாமல் இளையராஜா - எஸ்பிபி.,யே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.