கோடை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரிப்பு: கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவு
இந்த ஆண்டு கோடையில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று அண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து வெப்பம் அதிகரித்தால் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தவாறு, நேற்று கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு வெப்பம் பதிவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், சேலம், திருச்சியில் 38 டிகிரி செல்சியஸும், பாளையங்கோட்டை, மதுரை, தருமபுரியில் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதனால் இரவில் புழுக்கம் அதிகரிக்கும்” என்றார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த 2005-ல் தமிழகத்தில் நல்ல மழை கிடைத்தது. சென்னையில் வெள்ளமும் ஏற்பட்டது. அடுத்து வந்த 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதேபோன்று 2015-ல் அளவுக்கதிகமாக மழை பெய்த நிலையில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அதிக வெப்பம் இருக்கத்தான் செய்யும்” என்றார்.
No comments:
Post a Comment