தரைவழி தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகம்
பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி சேவையில் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயன்பாட்டில் உள்ள லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்காக ’பிரண்ட்ஸ் அண்ட் பேமிலி’ என்ற புதிய திட்டம் மார்ச் 14-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைவோர் குறிப்பிட்ட கட்டணங்கள் செலுத்தி தங்களுடைய தரைவழி தொலைபேசி எண்ணுடன் 1 முதல் 3 தரைவழி தொலைபேசி அல்லது கைபேசி எண்களை இணைத்து அளவில்லா அழைப்பு வசதியை பெற முடியும். இதற்கு ஒரு எண்ணுக்கு ரூ.21, 2 எண்களுக்கு ரூ.39, 3 எண்களுக்கு ரூ.49 என மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் இன்று (மார்ச் 19), மார்ச் 26 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண வேலை நாட்களை போல் இயங்கும். அப்போது, வழக்கம்போல் தரைவழி தொலைபேசி, அகண்ட அலைக்கற்றை சேவை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம். சிம்கார்டு விற்பனையும் நடைபெறும்.
பிஎஸ்என்எல் இணைப்புகளிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைப்பு பெற விரும்பினால், அவர்களுக்கு மறுஇணைப்பு கட்டணம் மற்றும் நிறுவல் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். புதிய பிரீபெய்டு சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு சலுகைகள் ஜூன் 14-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
ஜிஎஸ்எம் பிரீபெய்டு வாடிக்கை யாளர்கள் ரூ.139 ரீசார்ஜ் செய்து பிஎஸ்என்எல் இருந்து பிஎஸ்என்எல்-க்கு இந்தியா முழுவதுக்கும் அளவில்லா அழைப்புகள் மற்றும் 500 எம்.பி டேட்டா வசதி பெறலாம். அதேபோல், ரூ.339 ரீசார்ஜ் செய்து அனைத்து எண்களுக்கும் இந்தியா முழுவதுக்கும் அளவில்லா அழைப்பு மற்றும் இன்டர்நெட் டேட்டா பெறலாம். இந்த 2 திட்டங்களும் 28 நாட்கள் செல்லத்தக்கதாக இருக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment