வெற்றி முகம்: முயற்சிகள் தோற்பதில்லை - நேற்று அரசு பள்ளி ஆசிரியர்; இன்று மாவட்ட கல்வி அதிகாரி
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு விவசாயி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர்.அறிவழகன்தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.
சொந்த ஊர் பெண்ணாடம் அருகேயுள்ள பெ.பொன்னேரி என்னும் குக்கிராமம். தந்தை ரெகுபதி, விவசாயி. தாயார் மணிமேகலை, இல்லத்தரசி. அரசு உயர் அதிகாரியாக வர வேண்டும் என்பது அறிவழகனின் லட்சியம். ஆனால் நீண்ட போராட்டத்துக்குப் பின்னரே அவரது லட்சியம் நிறைவேறியுள்ளது. அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி, அதன்பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு, தற்போது நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வு என அவரது அடுத்தடுத்த வெற்றிகளின் பின்னே பல்வேறு போராட்டங்களும், தோல்விகளும் மறைந்து கிடக்கின்றன.
தொடர்ந்து படிப்பேன்!
கிராமத்து விவசாயின் மகனான அறிழவகன் பிளஸ் 2 முடித்த பின்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். அடுத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் பி.ஏ. வரலாறு முடித்தார். அப்போது அவருக்குச் சட்டம் படிக்கும் ஆர்வம் உண்டாகவே அரசு சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். 2-ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது 1995-ல் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கிறது.
அந்தப் பணியில் இருந்துகொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் எம்.ஏ. வரலாறும், அதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் எம்.ஃபில். ஒன்றன்பின் ஒன்றாக முடித்தார்.
ஆசிரியர் பணியில் இருந்த அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை 2001-ல் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தொடர்ந்து முயற்சிசெய்தும் வெற்றி கிடைக்கவில்லை. துணை ஆட்சியர் ஆகும் நோக்கில் 2008-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்குத் தயாரானார். இதற்கிடையே, அந்த ஆண்டு அவருக்குப் பட்டதாரி ஆசிரியராக (வரலாறு) பதவி உயர்வு கிடைத்தது.
படித்தது ஒருபோதும் வீண்போகாது!
அரசு உயர் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லையே என்று கவலை ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் கையில் உள்ள ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்ய வேண்டும் என்று கருதி அதன்படி பணியைத் தொடர்ந்தார். இந்த நிலையில்,2014-ல் 11 மாவட்டக் கல்வி அதிகாரிகளை நேரடியாகத் தேர்வுசெய்ய டி.என்.பி.எஸ்.சி. ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
600 மதிப்பெண்களுக்குக் கூடுதலாகப் பொது அறிவு பாடங்கள் சேர்க்கப்பட்டுப் புதிய மாற்றங்களோடு தேர்வு நடத்தப்பட்டது. ஏற்கெனவே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும், குரூப்-1 தேர்வுக்கும் தன்னை முழுவதுமாகத் தயார்படுத்தியிருந்ததால், புதிய முறை டி.இ.ஓ. தேர்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டார். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என அத்தனை தேர்வுகளிலும் வெற்றி. டி.இ.ஓ. தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. பணிக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் அறிவழகனும் ஒருவர். மெரிட் பட்டியலில் அவருக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவர், மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பயிற்சி பெறும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். தனது தேர்வு தயாரிப்பு அனுபவங்கள் குறித்து அறிவழகன், “எனது வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்தது யூ.பி.எஸ்.சி. தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வெழுதிய அனுபவம்தான். புதிய டி.இ.ஓ. தேர்வில் புதிதாக 2 பொது அறிவுதாள்கள் சேர்க்கப்பட்டது எனக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது. நீண்ட காலமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும், குரூப்-1 தேர்வுக்கும் படித்து வந்ததால் அந்த அனுபவம் டி.இ.ஓ. தேர்வில் பொது அறிவுதாளில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவியது. படித்தது ஒருபோதும் வீண்போகாது என்று சொல்வார்கள். அதுபோல எனது பழைய உழைப்பு டி.இ.ஓ. தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
டி.இ.ஓ. புதிய தேர்வுமுறையில் பொது அறிவு தாள்கள் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. காரணம் பொது அறிவு தாளில் அனைத்துப் பாடங்களும் இடம்பெறுவதால் மாவட்டக் கல்வி அதிகாரியாகத் தேர்வுசெய்யப்படுபவர்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும்” என்றார்.
அன்பான ஆலோசனை
டி.இ.ஓ. தேர்வில் வெற்றிபெற விரும்புவோர் தங்கள் பாடத்துடன் பொது அறிவு பாடத்துக்கு அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தேர்வுக்கான அறிவிப்பு வந்த பிறகு படிப்பது என்பது மிகவும் கஷ்டம், எனவே, தேர்வுக்கான அறிவிப்பு வரும்வரை காத்திருக்காமல் இப்போதிருந்தே தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் இத்தேர்வில் வெற்றிபெற முடியும். டி.இ.ஓ. தேர்வெழுத விரும்பும் இளைஞர்களுக்கு என்னுடைய அன்பான அட்வைஸ் இதுதான்.
No comments:
Post a Comment