தலையங்கம்
கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை
DAILY THANTHI
மார்ச் 22, 03:00 AM
பழைய காலங்களில் திரைப்படங்கள் பொதுவாக யதார்த்த உண்மைகளை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன. பாடல்கள் என்றாலும் சரி, திரைக்கதை, வசனம் என்றாலும் சரி, சமூகத்தில் நிலவும் அவலநிலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்தது. அந்தவகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி 1953–ம் ஆண்டில் வெளிவந்த ‘திரும்பிப்பார்’ என்ற படத்தில், ‘‘கலப்படம்... கலப்படம்... எங்கும், எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரைமூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...’’ என்றொரு பாடல்வரும். அந்தபாடலிலுள்ள வரிகள் ஒவ்வொன்றும் 64 ஆண்டுகள் கழித்தும், இன்னும் நாட்டில் விஷக்கிருமியாக பரவிவருவது வேதனையளிக்கிறது. இப்போதெல்லாம் புதிது, புதிதாக எத்தனையோ நோய்கள் வருகின்றன. இதற்கெல்லாம் டாக்டர்களிடம் சென்றால், நீங்கள் சாப்பிட்ட உணவில் கலப்படம், குடித்த குளிர்பானத்தில் கலப்படம், அதுதான் இவ்வளவு உடல்நலக்கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது என்று பலநேரங்களில் சொல்கிறார்கள். சரி உணவில்தான் கலப்படம், குளிர்பானத்தில்தான் கலப்படம், இதை குணமாக்க மருந்துகள் வாங்கி சாப்பிடுவோம் என்றால், மருந்திலும் கலப்படம். கலப்படக் குற்றங்கள் செய்ததற்காக பல மருந்துகள் தடைச்செய்யப்பட்டுள்ளன. கலப்படம் செய்வது உயிர்க்கொல்லி குற்றமாகும்.
1976–ம் ஆண்டு நெருக்கடிநிலை பிரகடனத்தின்போது, கலப்பட குற்றங்களைத்தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, அதற்குப்பிறகு அங்கொன்றும், இங்குகொன்றுமாக கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு–272–ல் உணவு மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் குளிர்பானத்தில் கலப்படம் இருந்தால் அது குற்றமாக கருதப்பட்டு, நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய குற்றத்திற்கான தண்டனையைப் பார்த்தால், 6 மாதம்வரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று இருக்கிறது. இதேபோல, பிரிவு 273–ல் இந்த கலப்படப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும், 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம் என்றுதான் இருக்கிறது. இதே அபராதம்தான் மருந்தில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட மருந்தை விற்பவர்களுக்கும் விதிக்கப்பட இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 274, 275 வகைசெய்கிறது. குற்றங்களின் தன்மையைப் பார்த்தால், இந்த தண்டனை போதாது, கலப்படம்செய்து கொள்ளை லாபம் அடிப்பவர்கள், அடுத்தவர்களின் உடல்நிலை பாதிக்குமே என்று கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவர்களுக்கு இந்த அபராதம் நிச்சயமாக போதாது. நாம் கலப்படம் செய்வோம், கண்டுபிடித்தால் ரூ.1,000 அபராதம் என்றவகையில் எளிதாக தப்பித்துக்கொள்ளலாம் என்ற உணர்வே கலப்படம் செய்யத்தூண்டுகிறது என்றொரு குறைபாடு பொதுமக்களிடையே வெகு நாட்களாக இருந்தது. உணவு கலப்படச்சட்டம் என்பது மத்திய, மாநில அரசுகள் இரண்டும் கையாளக்கூடிய பொதுப்பட்டியலை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், ஒடிசா மாநிலங்களில் இந்திய தண்டனைச்சட்டத்தை திருத்தி கடுமையான தண்டனை விதிக்க வகைசெய்துள்ளது.
உச்சநீதிமன்றம் இந்த கலப்பட விவகாரத்தை இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பி ஒரு நல்ல சட்டம் உருவாக்க பரிந்துரை செய்தது. இதையொட்டி, இந்திய சட்ட ஆணையம் இந்த கலப்பட சட்டத்தை ஆழமாக விவாதித்தது. மத்திய அரசாங்கத்தின் சட்டசெயலாளரும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசாங்கத்தின் கருத்துகளை தெரிவித்தார். இப்போது, இந்த குற்றங்களுக்கு 6 மாதம்வரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் என்பதை மாற்றி, ஆயுள் தண்டனை மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் என்றவகையில் திருத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக புதிதாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரும் முன்பு, அரசு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள் உள்பட அனைவருடனும் கலந்துபேசி, கலப்படம் இல்லாத புதிய சமுதாயத்தை படைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment