Wednesday, March 22, 2017

ஜெயலலிதா விடுவிப்பு என்பது செல்லாது ரூ.100 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். மரணம் அடைந்ததால் அவரை விடுவித்தது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மார்ச் 22, 05:45 AM

புதுடெல்லி,

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சுமார் ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தனிக்கோர்ட்டு தண்டனை

இது தொடர்பான வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்தார்.

முடிவில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என கண்டு, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஐகோர்ட்டு விடுதலை

தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ந் தேதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

இந்த அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

கர்நாடக அரசு அப்பீல்

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து, இறுதி வாதங்கள் முடிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தங்களது தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வழங்கினர்.

இந்த தீர்ப்பில், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது (இல்லாமல் போகிறது) என கூறிய நீதிபதிகள் மற்ற 3 பேர் மீது தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர்.
இந்த 3 பேரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், 3 பேரும் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடையவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறு ஆய்வு மனு

இப்போது இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், அவரது மரணத்தை அடுத்து அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது என கூறப்பட்டுள்ளது. இது தவறானது. எனவே மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கேள்விக்கே இடம் இல்லை

ஒரு வழக்கில் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒருவர் இறந்து விட்டால், அப்பீல் வழக்கு அற்றுப்போகும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அதைத் தொடர்ந்து வழங்கப்படுகிற தீர்ப்பு, இறந்த நபர் உயிரோடு இருந்திருந்தால் எப்படி வழங்கப்பட்டிருக்குமோ அதே வலிமையுடன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி அப்பீல் அற்றுப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சட்டப்பிரிவும் வகை செய்யவில்லை. அதேபோன்று சுப்ரீம் கோர்ட்டின் 2013-ம் ஆண்டு விதிகளும் கூறவில்லை.

அபராதம் ரூ.100 கோடி

மற்றொரு வகையில் பார்த்தால், சுப்ரீம் கோர்ட்டு விதிகள் 2013, சிவில் அப்பீல் வழக்குகளிலும் சரி, தேர்தல் வழக்குகளிலும் சரி, விசாரணை முடிந்தபிறகு சம்மந்தப்பட்ட நபர் இறந்து விட்டால், வழக்கு அற்றுப்போகும் என்ற நிலை வராது என கூறுகிறது.

இந்த வழக்கை பொறுத்தமட்டில், (தண்டிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதால்) சிறைத்தண்டனை பலனற்றது. இருந்தபோதிலும், தனிக்கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். அந்த அபராதத்தை அவரது சொத்துகள் மூலம் வசூலித்திருக்க வேண்டும்.

சரியானது அல்ல

இந்த வழக்கில் ஜெயலலிதா சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலை இல்லை. ஆனால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சட்டப்படி நிலைத்து நிற்கத்தக்கது. அதை அவர் சொத்துகள் மூலம் வசூலிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வருமானத்துக்கு மீறி சொத்து குவித்த வழக்குகளில் இது தேவைப்படுகிறது.

இந்த வழக்கில், அப்பீல் அற்றுப்போகிறது என்பது சரியானது அல்ல.

பரிசீலனைக்கு உரியது

எனவே இறந்துபோன நபருக்கு சிறைத்தண்டனை வழங்குவது பலனற்றது என்றபோதிலும், அபராதம் விதிக்கப்படுவதும், சட்டவிரோதமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்யலாமா என்பதுவும் பரிசீலனைக்கு உரியது.
இந்த நிலையில், பிப்ரவரி 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிராக தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...