உலகை ஆட்டுவிக்கும் புதிய பயங்கர நோய் Published : 11 Apr 2015 16:23 IST
டாக்டர் ஆ. காட்சன் நாகலாந்திலுள்ள திமாபூரில் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கைதியை, ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல் சிறைக்குள் புகுந்து வெளிக்கொண்டுவந்தது. அத்துடன் நிற்கவில்லை, அந்த நபரைப் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்து இழுத்துக்கொண்டு சென்று கொன்ற சம்பவம் கலவரக் கும்பல் மனநிலைக்கு (Mob behaviour) மற்றுமொரு சிறந்த உதாரணம்.
சமீபத்தில் ஆப்கனில் குரானைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பெண், இது போன்ற கும்பலால்தான் கொன்று எரிக்கப்பட்டார். ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பலருக்குத் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் நம்பகத்தன்மையோ அல்லது தங்களுடைய செயல்பாட்டின் முடிவு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாமல் இருப்பதுதான்.
கலவரக் கும்பல்
கலவரக் கும்பல் மனநிலைக்கு மாறுவது என்பது உலகின் ஏதோவொரு மூலையில் நடக்கும் விஷயமல்ல. கல்லூரி மாணவர்கள் திடீரென நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுவது, மடிகணினி கிடைக்கவில்லை எனப் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடுவது, பள்ளி மாணவியை ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்துவிட்டார் எனக் கூறிப் பெற்றோர் மற்றும் கட்சியினர் பள்ளியை முற்றுகையிடுவது, மர்மக் கொலைகாரன் எனக் கருதித் தெருவில் திரியும் மனநோயாளி தாக்கப்படுவது என நாள்தோறும் நமக்கு அருகிலேயே பல கலவரக் கும்பல் நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.
இது ஆரோக்கியமான ஒன்றா அல்லது ஆரோக்கியமற்ற கலாசாரமா என்பது நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். அதுவும் சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகளின் அடிப்படையில் ஏற்படும் தகவல் பரிமாற்றங்கள் பல பயனுள்ளதாக இருந்தாலும், சில வேளைகளில் மேற்கூறிய ஆபத்தையும் உருவாக்க வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
சற்றுப் பழைய செய்தி என்றாலும் வரலாற்றில் மறக்க, மறைக்க இயலாத ஒரு நிகழ்வு அது. ஒரு தவறான செய்தி எப்படிப் பரவுகிறது, அது எப்படி ஒரு சாதாரண மனிதனையும் கலவரக் கும்பலில் ஒருவராக மாற்றுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதற்கு, இதைவிட உகந்த உதாரணம் இருக்க முடியாது. அதுவும் கடித அளவில் மட்டுமே தகவல் தொடர்பு இருந்த காலத்தில் நடந்த சம்பவம். ஆனால், அது கற்றுக்கொடுத்த பாடம் மிகப் பெரியது
சாலெம் சூனியக் கலவரம்
அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் (தற்போதைய டென்வர்) பகுதியில் 1692-ம் ஆண்டு இளம் சிறுமிகள் சிலருக்குத் திடீரென்று ஆக்ரோஷம், வலிப்பு, பேய் பிடித்தது போலப் பேசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. அவர்களை மருத்துவர் பரிசோதித்தபோது அந்தச் சிறுமிகள், பில்லிசூனியத்தால்தான் தாங்கள் அப்படி மாறியதாகக் கூறியதுடன், அந்நகரத்திலுள்ள சில பெண்கள்தான் தங்களுக்குச் சூனியம் வைத்துவிட்டதாகவும் கூறினர்.
அங்கே ஆரம்பித்தது வினை. ஏற்கெனவே, மனநோய்களுக்குச் சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத காலமாக இருந்ததாலும், மதரீதியாகப் பில்லி சூனியம் போன்ற நம்பிக்கைகளில் மக்கள் ஊறியிருந்ததாலும் இந்தச் செய்தி காட்டுத்தீ போல நகரம், சுற்றுப்புறத்தில் பரவ ஆரம்பித்தது.
இதைத் தொடர்ந்து சூனியம் வைத்ததாகச் சொல்லப்பட்ட சில பெண்களும், ஏற்கெனவே தனியாக ஆதரவின்றி வாழ்ந்துகொண்டிருந்த பல பெண்களும் சூனியக்காரிகளாகக் கருதப்பட்டு மக்களால் சிறை பிடிக்கப்பட்டனர். தாங்களும் இதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சந்தேகத்துக்கு உட்பட்டவர்களைச் சூனியக்காரிகள் என்று தீர்மானித்து, சுமார் 200 பேரைச் சிறைபிடித்தனர்.
சாலெம் சூனியத் தீர்ப்பு (Salem witch trial)
நிலைமை மோசமாவதை உணர்ந்த அப்பகுதி ஆளுநர் வில்லியம் ஃபிலிப் ஒரு தனி நீதிமன்றம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒரு வருடத்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறைபிடிப்பு சம்பவங்களும், விசாரணையும் நடந்து வந்தன. இதில் உச்சகட்டக் கொடுமையாக இதை விசாரித்த நீதிபதிகளும் பில்லி சூனியத்தால்தான் அச்சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக முடிவு செய்து, பில்லிசூனியத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்பட்ட 20 பேரைத் தூக்கிலிட உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கலவரக் கும்பல் அவர்களைப் பொது இடத்தில் தூக்கிலிட்டதுடன், தூக்கில் ஏற முரண்டுபிடித்த ஒரு பெண்ணை கல்லால் அடித்தும் கொன்று, தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது.
கலவரக் கும்பல்
மேற்கூறிய வரலாற்றுச் சம்பவம், சாதாரண மக்கள் கும்பல் எப்படி இத்தனைக் கொடூரக் கலவரக் கும்பலாக மாற வாய்ப்புள்ளது என்பதற்குச் சிறந்த உதாரணம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உருவாகும் இந்தக் கலவரக் கும்பலுக்கு மாப் (Mob) என்று பெயர். அதில் ஈடுபடுபவர்களின் மனநிலையில் அந்த நேரத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துச் சிக்மண்ட் ஃபிராய்ட், லெபான் உட்படப் பல உளவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
யார் இவர்கள்?
திடீரென்று உருவாகும் கலவரக் கும்பலுக்குத் தலைவர் யார் என்பது, அதில் பங்கேற்பவர்களுக்கே தெரியாது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைமையின் கீழோ அல்லது குறிக்கோளுடனோ இயங்குவதைவிட வதந்திகளின் அடிப்படையிலும், உணர்ச்சிப் பெருக்கின் உந்துதலினாலுமே இயங்குகின்றனர். இக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவரை முன்பே அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும், ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையை இழப்பதால், சாதாரணமாகச் சாதுவான குணம் கொண்டவர்கள்கூட, இந்தக் கலவரக் கும்பலில் சேரும்போது மூர்க்கமாக மாறிவிடுகின்றனர். நோய்க்கிருமிகள் பரவுவது போல ஒருவருடைய கோபமோ, வெறியோ மற்றவரைப் பற்றிக்கொள்கிறது. இவர்கள் படிப்பு ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, அறிவுத்திறன் ரீதியாகவோ வேறுபட்டிருந்தாலும் எண்ணம், செயல்பாடுகளில் ஒருமித்துக் கட்டுக்கடங்காமல் செயல்படுவது ஆச்சரியத்தின் உச்சகட்டம்.
உளவியல் காரணங்கள்
ஏதேனும் ஒரு தகவலைக் கேட்டு அதை உறுதிப்படுத்துவதைவிட, உணர்ச்சிப்பெருக்கின் உந்துதலுக்கு அதிக இடம் கொடுப்பது, அந்த விஷயத்தைப் பகுத்தாராயும் தர்க்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது ஆகிய இரண்டு மனநிலைகளின் விளைவே கட்டுக்கடங்காத கலவரக் கும்பல் உருவாக முக்கியக் காரணம்.
இந்தக் கலவரக் கும்பலில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கு உருவாகும் "எல்லோரும் ஈடுபடும் விஷயத்தில்தானே நாமும் ஈடுபடுகிறோம்" என்ற பொறுப்பற்ற தன்மையும், "இத்தனை பெரிய கூட்டத்தில் நாம் செய்வதை யார் கவனிக்கப் போகிறார்கள்" என்ற அநாமதேயமான எண்ணமும், கும்பல் கொடுக்கும் உற்சாகம் மற்றும் வலிமையும் மேலோங்கும்போது, சாதுவான ஒருவர்கூடப் பிறரைச் சாகடிக்கும் மனநிலைக்கு மாறிவிடுகிறார். இந்த மனநிலையில் இருப்பதால்தான் இதுபோன்ற கலவரக் கும்பலுக்குச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சலும், எதிர்ப்புகளைச் சமாளிக்கும் உத்வேகமும் ஏற்படுகிறது.
தடுக்க முடியமா?
பொதுவாக ஒரு கலவரக் கும்பல் என்பது ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த மூன்று வட்டங்களைப் போன்றது. உள்வட்டத்தில் தீவிரமான, ஆக்ரோஷமான நபர்களும், அதற்கு வெளிவட்டத்தில் சற்றுத் தீவிரம் குறைந்த, அவ்வப்போது எழுச்சியடையும் கூட்டமும், மூன்றாம் வட்டம் வெளிப் பகுதியில் வேடிக்கை பார்க்கும் அல்லது நிகழ்வுகளைப் பார்க்க விரும்பும், ஆனால் ஈடுபட விரும்பாத ஒரு கூட்டமும் இருக்கும்.
எந்தக் கலவரக் கும்பலும் இதற்கு விதிவிலக்கல்ல. இது போன்ற கும்பலான நடவடிக்கைகள் உருவாகும் முன் தடுப்பதுதான் சிறந்த, எளிய வழி. ஆனால், உருவாகிவிட்டால் கட்டுக்குள் கொண்டுவருவது எளிதல்ல. அது போன்ற நேரங்களில் இந்த மூன்றடுக்கு முறையை முழுமையாகப் புரிந்துகொண்ட பாதுகாப்புக் குழுவால் மட்டுமே குறைந்தபட்சத் தடுப்பு நடவடிக்கைகளாவது மேற்கொள்ள முடியும்.
நிரந்தர வலியாகும் உண்மைகள்
எல்லா ஆக்ரோஷமான கூட்டத்தினரின் அணுகுமுறையும் நியாயமானது என்று சொல்ல முடியாது. சாலெம் சூனியக் கலவரத் தீர்ப்பை ஆராய்ந்த ஒரு அறிவியல் நாளிதழ் 1976-ம் ஆண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் சாலெம் நகரச் சிறுமிகள் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு அவர்கள் உண்ட தானியத்தில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒருவித பூஞ்சைக் காளானின் தாக்கம் இருந்ததே காரணம் எனக் குறிப்பிடுகிறது.
எனவே, கண்ணால் காண்பது, காதால் கேட்பதைவிட தீர விசாரித்தலே சரியானது என முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அதனால், எந்த அடிப்படையும் இல்லாமல் சமூகத்தின் மனதில் படிந்துபோய்விட்ட அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில், பொய்யான காரணங்களைச் சொல்லிக் கலவரத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமான அழிவுக்கே வழிவகுக்கும்.
கட்டுரையாளர், திருநெல்வேலி மனநல மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com