Wednesday, May 16, 2018

தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை ஆட்சியை பிடிக்க கடும் போட்டி



கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி 104. மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவுடன் காங்கிரஸ் அணி 115. ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018 #Congress #BJP

மே 16, 2018, 05:45 AM
பெங்களூரு,

முதல்-மந்திரி சித்த ராமையா தலைமை யில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடக சட்ட சபையின் பதவிக் காலம் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது.

இதன் காரணமாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியிலும், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

எஞ்சிய 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருவதால், கர்நாடகத்தில் இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டு விடுமோ என்ற பரபரப்பு உருவானது.

ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தல், கர்நாடக சட்டசபை தேர்தல் என்பதால், அந்த கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

அனைத்துக்கும் மேலாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடக சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்பதால், இந்த தேர்தல் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி 38 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன.

நேரம் ஆக ஆக, காங்கிரசை முந்திவிட்டு பா.ஜனதா ஏறுமுகத்தில் நடைபோடத் தொடங்கியது. 11 மணி அளவில் பெரும்பான்மைக்கு தேவையான 112 தொகுதிகளை தாண்டி பா.ஜனதா சுமார் 117 இடங்களில் முன்னிலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அக்கட்சி தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கினர். சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம் என்று அந்த கட்சியினர் அறிவித்தனர்.

இதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் முன்னணி பெற்றிருந்தது.

ஆனால் நேரம் ஆக ஆக பா.ஜனதாவின் முன்னணி நிலவரம் குறையத் தொடங்கியது. இறுதியில் தொங்கு சட்டசபை அமைந்தது. 104 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வந்தது.

காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். முல்பாகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் காங்கிரசின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தலைவர்களில், 2 தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சாமுண்டீஸ்வரியில் 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அதே நேரத்தில் பாதாமி தொகுதியில் அவர் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றார்.

கர்நாடக பா.ஜனதா தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான எடியூரப்பா சிகாரிப்புரா தொகுதியில் 35 ஆயிரத்து 394 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி, ராமநகர், சென்னபட்டணா ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி வாகை சூடினார். அவற்றில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார்.

எனவே 221 இடங்களில் மெஜாரிட்டி பலம் பெறுவதற்கு 111 இடங்கள் தேவை. இதில் 104 இடங்களை கைப்பற்றி உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி நேற்று அவசர அவசரமாக அறிவித்தது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-மந்திரி பதவியை ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், “கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருடன் நாங்கள் தொலைபேசி வாயிலாக பேசினோம். அவர்கள் இதை ஏற்றுக்கொண்டனர். இரு கட்சி தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் பெற்று உள்ள மொத்த இடங்கள் 115 ஆகும்.

அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவை பெற பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரை கர்நாடகத்திற்கு அனுப்பிவைத்தார்.

இதற்கு இடையே கவர்னர் வஜூபாய் வாலாவை நேற்று மாலை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள நிலையில், தங்களைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அவர் கவர்னரிடம் உரிமை கோரினார்.

இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூரமாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவும், அதே சமயம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமையக்கூடாது என்ற நோக்கத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு வழங்க முன்வந்து இருப்பதால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...