டிக். டிக்.. டிக்...
Published : 18 Sep 2018 11:46 IST
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
‘டைமே இல்ல’ என்று புலம்புவரா நீங்கள்? ‘24 மணி நேரம் பத்தல’ என்று புகார் கூறுபவரா? ’ஓயாம ஓடியும் முடிக்க முடியல’ என்று அலுத்துக்கொள்பவரா? டைம் இருந்தால் வாங்களேன். ‘நேரம்’ பற்றிக் கொஞ்ச நேரம் பேசுவோம்!
24 மணி நேரம் போதாதா?
ஏதோ மற்றவர்களுக்கு 24 மணி நேரத்துக்கு மேல் இருப்பதுபோலவும் தங்களுக்குக் குறைவாக இருப்பது போலவும் பலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அதே 24 மணி நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை புரிந்தவர்களின் வாழ்வே அவர்களுக்கான பதில். நேரம் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது.
அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது புரியாமல், ‘சொல்வது ஈசி, செய்து பார்த்தால்தானே கஷ்டம் தெரியும்’ என்று சொல்கிறோம். நாம் நேரத்துக்கு அடிமைபட்டுக் கிடக்கிறோம். செய்யவேண்டியதைச் செய்ய நேரமில்லை என்று புலம்புகிறோம். நேரத்தை நமக்குச் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. எது முக்கியம் என்ற தெளிவின்மையே நேரமின்மைக்கான அடிப்படை காரணம் என்ற புரிதல் நமக்கு இருப்பதில்லை.
மொழியை மாற்றுங்கள்
நேரமின்மையைக் களைய முதலில் உங்கள் மொழியை மாற்றுங்கள் என்கிறார் லாரா வேண்டர்காம். உடம்பை செக்கப் செய்துகொள்ள நேரமில்லை என்று நீங்கள் நினைத்தால், ‘க்ளினிக் போக நேரமில்லை’ என்று சொல்வதற்கு பதில் ’என் ஆரோக்கியம் இப்போது முக்கியமில்லை’ என்று சொல்லிப் பாருங்கள்.
நினைப்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா. அதுதான் விஷயம். மொழியை மாற்றும்போது நேரத்தின் முக்கியத்துவத்தைத் தானாகவே உணர்வீர்கள் என்கிறார் லாரா. இவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு ‘You Have More Time Than You Think’.
பழக்கத்தை மாற்றுங்கள்
வாழ்க்கையிலும் பணியிலும் சிலவற்றைத் தினமும் நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதற்கு நேரத்தைச் செலவழித்தே தீர வேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் குழந்தையைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் நேரம், ஆபீஸில் வாராந்திர மீட்டிங். அவற்றுக்கான நேரம் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டதல்ல.
அதை நீங்கள் மாற்றவும் முடியாது. ஆனால், உங்களால் மாற்ற முடிந்த விஷயங்களுக்கு நீங்கள் செலழிக்கும் நேரத்தை நீங்கள் மாற்ற முயற்சிக்கலாமே. உதாரணத்துக்குக் காலை வாக்கிங் செல்ல நேரமில்லை என்பதைக் காலை ஒரு மணி நேரம் முன்னதாக எழுவதன் மூலம் சாத்தியமாக்குவது.
மனநிலையை மாற்றுங்கள்
நேரம் பற்றி நினைப்பதையும் அதை அணுகும் விதத்தையும் மாற்றினால், நேரம் தானாக அதிகரிக்கும் என்கிறார் லாரா. 24 மணி நேரம் போதவில்லை என்று நமக்குத் தோன்றுகிறதா? 24 மணி நேரம் குறைவாகத் தோன்றுகிறதா? காலை எழுந்து அன்று என்ன செய்வது என்று திட்டமிடுவதை விடுத்து அந்த வாரம் என்ன செய்வது என்று திட்டமிட்டுப் பாருங்கள். அப்பொழுது 168 மணி நேரம் உங்களுக்குக் கிடைக்கும்.
சிறியதாய் தொடங்குங்கள்
தினம் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா? வாரத்துக்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். சில வாரங்களுக்குப் பின் அதை இரண்டு முறையாகக் கூட்டும் வழியைத் தேடுங்கள். ருசி கண்ட பூனைபோல் உங்கள் மனம் அதற்கு எப்படியாவது நேரத்தைக் கண்டெடுக்கும். அதே போல் ஆபீஸில் மீட்டிங்குகளைத் திட்டமிட்டதற்கு பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னதாக முடிக்க முடியுமா என்று முயற்சித்துப் பாருங்கள்.
மாற்றி யோசியுங்கள்
ஆபீஸ் மீட்டிங்கில் உட்கார்ந்து தான் பேச வேண்டும் என்றில்லையே. முடிந்தால் நின்றுகொண்டு பேசுங்கள். உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு பேசும்போது தான் மீட்டிங் டைம் வளர்கிறது. மீட்டிங்குகளை நின்றுகொண்டு நடத்திப் பாருங்கள். அது படக்கென்று முடிவுற்று உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. உங்களது நேரத்தை நீங்கள் மதித்தால் மட்டுமே மற்றவர்கள் உங்கள் நேரத்தை மதிப்பார்கள்.