எங்கே என் ஜீவனே இன்று (செப்.25 )- மகாளயபட்சம் ஆரம்பம்
Added : செப் 24, 2018 21:36
உடலை விட்டு பிரிந்த பின் உயிரானது 13 நாள் வரை தனது வீட்டு வாசலில் நிற்கும். முதல் மூன்று நாள் நீரிலும், அடுத்த மூன்று நாள் நெருப்பிலும், அடுத்த மூன்று நாள் காற்றிலும் தங்கும். துக்கம் கேட்க வருவோரை எல்லாம் பார்த்தபின், 10ம் நாளன்று வீட்டிற்குள் கண்ணுக்குத் தெரியாமல் நுழையும். 11,12ம் நாளில் கொடுக்கப்படும் பிண்டங்களை ஏற்கும். இறுதி காரியத்தின் போது இறந்தவர் உருவமாக நியமிக்கப்படுபவரை (ஆவாஹனம் செய்யப்படுபவரை) கூர்ந்து பார்த்தால் அவர் சாப்பிடும் முறையில் இறந்த உயிரின் சாயல் தெரியும். 13ம் நாள் யமதுாதர்களான கிங்கரர்கள் உயிரை கட்டி இழுத்துச் செல்வர். பகலிலும், இரவிலுமாக நடந்து யமபுரத்தை உயிர் அடைய ஓராண்டாகும். அதுவரை உயிருக்கு பசி, தாகம் ஏற்படும் என்பதால் மாதத்தில் ஒருநாள் அதாவது இறந்த திதியன்று வழியில் தங்க அனுமதியளிப்பர். இந்த ஓராண்டு வரை மாதம் தோறும் இறந்த திதியன்று உயிரின் பசியைப் போக்க பிண்டம் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. இறந்தவர்கள் பாவி என்றால் யமபுரத்திற்கும், புண்ணியம் செய்திருந்தால் பிரம்மலோகத்திற்கும் செல்வர்.
அவர்கள் தங்களின் வாரிசுகளை பார்க்க பூமிக்கு வரும் காலம் மகாளயபட்சமாகும். அதாவது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்கள். அப்போது தமக்குரிய பிண்டத்தை வழங்குமாறு நம் வீட்டு வாசலில் காத்திருப்பர். முன்னோர் இறந்த மாதம், பட்சம், திதியன்று ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்னை, துர்சம்பவம் ஏற்படும். மீண்டும் முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டால் துன்பம் தீரும். சிலருக்கு முன்னோர்கள் இறந்த திதி தெரிவதில்லை. அவர்களும் மகாளயபட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளயபட்ச தர்ப்பணத்தால் ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் சேரும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளவர்களும் இதை தவிர்க்கக் கூடாது.
தந்தை இறந்த திதியில் இந்த தர்ப்பணம் செய்வது நல்லது. தர்ப்பணத்தின் போது மூன்று தலைமுறையினர் அதாவது தந்தை, தாத்தா, முப்பாட்டனார், தாயார், பாட்டி, முப்பாட்டியின் பெயர்களை குறிப்பிட வேண்டும். திதி தெரியாதவர்கள் அஷ்டமி அல்லது பரணி நட்சத்திரத்தில் செய்யலாம். இக்காலத்தில் அசைவம், வெங்காயம், பூண்டு சேர்க்காமல் வீட்டில் மட்டும் சாப்பிட வேண்டும். எண்ணெய்க் குளியல், தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். இன்று மகாளய பட்சம் துவங்குகிறது. செப். 28ல் மகாபரணி, அக்.2ல் மத்யாஷ்டமி அக்.8ல் மகாளய அமாவாசை வருகின்றன. தவறாமல் முன்னோரை வழிபடுங்கள். வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள். எஸ்.சந்திரசேகர்
No comments:
Post a Comment