Monday, September 24, 2018

108 ஆம்புலன்ஸ் சேவை தெரியும்... `515 கணேசன் கார் சேவை’ தெரியுமா?

ப.பிரியதர்ஷினி

108 ஆம்புலன்ஸ் சேவை நமக்கெல்லாம் தெரிந்திருக்கும்... `515 கணேசன் இலவச கார் சேவை’ தெரியுமா? தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், `உதவி’ என்று யார் கேட்டாலும், காரை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பிரசவம், அவசர சிகிச்சை... எனப் பல உதவிகளுக்காக 46 வருடங்களாக ஒரு ஆம்புலன்ஸ் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கணேசனின் அம்பாசிடர் கார்.



புதுக்கோட்டையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலங்குடி. ஊரில் இறங்கி, `கணேசன்...’ என்ற பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. `515...’ என்றால் உடனே அடையாளம் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு டீக்கடைக்காரரிடம் `515 கணேசன்’ குறித்து விசாரித்தோம்... ``நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டாரு. உதவினு யார் கேட்டாலும், காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாரு. அக்கம்பக்கத்துல இருக்குற புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஊருங்க மட்டும் இல்லை... சமயத்துல வெளி மாநிலங்களுக்குக்கூட அவரோட கார் பறக்கும். `கையில் காசு இல்லை’னு சொன்னா, `எனக்குப் பணம் முக்கியம் இல்லை’ம்பாரு. அவர்கிட்ட இருக்குற பணத்தைச் செலவு செஞ்சு உதவி செய்வாரு 515. (அவரை `515’ என்றுதான் ஊர் மக்கள் அழைக்கிறார்கள்). பெத்த புள்ளைக்கு அஞ்சு ரூபா தர்றதுக்கு யோசிக்கிற இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷர். சாதாரண ஓட்டு வீட்டுலதான் குடியிருக்காரு. `ரேஷன் கடை அரிசியும் பருப்பும் இருந்தாப் போதும்... எங்க வயிறு நிறைஞ்சிடும்’னு சொல்லிட்டு வர்றவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செய்வார். இவரோட நல்ல எண்ணத்துக்கு ஏராளமான பரிசுகள் கிடைச்சிருக்கு. வேற என்ன... ஏகப்பட்ட பட்டங்கள், சான்றிதழ்கள்தான். இவ்வளவு ஏன்... அவர் தெருவுல இருக்குறவங்க, அவங்களோட வீட்டுக்கு வழி சொல்லணும்னா எப்படிச் சொல்வாங்க தெரியுமா... `515 வீட்டுலருந்து நாலு வீடு தள்ளி எங்க வீடு இருக்கு’, `515 வீட்டுக்கு எதிர்ல எங்க வீடு...’ இப்படியெல்லாம்தான் சொல்வாங்க’’ என்று சொல்லி கணேசன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார் டீக்கடைக்காரர்.




`பல வருடங்களாக இப்படி ஒரு சேவை செய்ய வேண்டும் என்றால் ஒன்று, அவர் பெரும் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். அல்லது, ட்ரஸ்ட் ஏதாவது நடத்தி, நிதி திரட்டி, அதைக்கொண்டு உதவி செய்பவராக இருக்க வேண்டும்.’ - இப்படியெல்லாம் யோசித்தபடி வழி விசாரித்துக்கொண்டு `515’ வீட்டுக்குச் சென்றோம். நாம் நினைத்ததுபோல அவர் வீடு பெரிய பங்களா எல்லாம் இல்லை. சாதாரண பிளாஸ்டிக் கூரை வேய்ந்த எளிமையான வீடு. வீட்டுக்கருகில் அழகழகான குட்டிக் குட்டிச் செடிகள்... சிவப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்ட தரை. மலர்ந்த முகத்தோடு நம்மை வரவேற்றார் கணேசன். நரைத்த தலை, லுங்கி, சாதாரணமான ஒரு சட்டை. `இவரா மக்கள் சேவை செய்பவர்?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே சரளமாகப் பேச ஆரம்பித்தார் கணேசன்...

``ஆலங்குடிதான் எனக்குச் சொந்த ஊர். அப்பா ஒரு மாட்டுத் தரகர். என் சின்ன வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க. அப்புறம் நானா ஏதேதோ வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினேன். வாழ்க்கையில முன்னேறிக் காண்பிச்சவங்க எல்லாருக்குமே மனைவிதான் உதவியா இருப்பாங்க. எனக்கும் என் மனைவி தெய்வானைதான் எல்லாமே. எங்களுக்கு அஞ்சு பெண் குழந்தைங்க... எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு...’’ என்றவரிடம், ``அது ஏன் உங்களை `515’-னு எல்லாரும் கூப்பிடுறாங்க?’’ என்று கேட்டோம்.



அது, 1968-ம் வருஷம். ரோட்ல நடந்து போய்க்கிட்டு இருந்தேன். ஒருத்தர், தன்னோட மனைவியை ஒரு தள்ளுவண்டியிலவெச்சு தள்ளிக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தாரு. ஏன்னு பார்த்தப்போதான் தெரிஞ்சுது... அந்தப் பொண்ணு நிறைமாத கர்ப்பிணினு. என் மனசு உடைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்கு வந்து, என் மனைவி தெய்வானைகிட்ட விஷயத்தைச் சொன்னேன். `இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு உதவறதுக்கு ஏதாவது பண்ணணும்’னு என் ஆதங்கத்தையும் சொன்னேன். அவங்க, `இதை உங்களால மாத்த முடியுமா... இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு உங்களால என்ன பண்ண முடியும்’னு கேட்டாங்க. `முடியும்’னு சொன்னேன். நான்வெச்சிருந்த பழைய இரும்புக்கடையை வித்தேன். 17,500 ரூபா கிடைச்சுது. அந்தப் பணத்துல, செகண்ட் ஹேண்ட்ல ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அந்த காரோட நம்பர் TNZ-515. நான் முதன்முதல்ல வாங்கின காரோட நம்பரையே `515 இலவச சேவை கார்’னு பேரா வெச்சேன். `உதவி’னு கேட்குறவங்களுக்கு, நேரம் காலம் பார்க்காம காரை எடுத்துட்டுப் போய் என்னால ஆனதைச் செய்றேன்...’’ அடக்கத்தோடு சொல்கிறார் கணேசன்.

கிட்டத்தட்ட 46 வருடங்களாக இந்தச் சேவையைச் செய்துவருகிறார் கணேசன். அதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. காருக்கு டீசல் போடுவது, அது ரிப்பேர் சரி பார்ப்பது... என அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார். கார் சேவைக்கு வேளை வராத நேரத்தில், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்துகிறார். இதுவரை 19 அம்பாசிடர் கார்களை வாங்கியிருக்கிறார் கணேசன். ஒரு கார் பழுதாகிவிட்டது, இனி ஓடும் கண்டிஷனில் இல்லை என்று தெரிந்ததுமே அடுத்த காரை வாங்கிவிடுவார். எல்லாமே செகண்ட் ஹேண்ட் கார்கள்தான். அத்தனைக்கும் `515’தான் பெயர். அவரேதான் முதலாளி, அவரேதான் டிரைவர்!



இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றிருக்கிறது, விபத்துக்கு ஆளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றிருக்கிறது 515 கார். அது மட்டுமல்ல... பணம் இல்லாமல், சடலத்தை ஊருக்குக் கொண்டு போக முடியாமல் தவிப்பவர்களுக்கும் இவரின் கார் உதவிக்கு ஓடி வரும்... இலவசமாக! அப்படி, இது வரை 5,400 சடலங்களை பல ஊர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. கொச்சின், பெங்களூரு, தூத்துக்குடி... என கணேசன் பயணித்த ஊர்கள் எண்ணற்றவை. நாம் அவரைப் பார்ப்பதற்கு சற்று முன்னர்தான் திருநெல்வேலி வரை ஒரு கர்ப்பிணியை அழைத்துச் சென்று, விட்டுவிட்டு வந்திருந்தார்.

நாம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே செல்போனில் அவருக்கு அழைப்பு! உள்ளே போனவர், கார் சாவியுடன் வெளியே வந்தார். `நீங்க என் மனைவி தெய்வானைகிட்ட பேசிக்கிட்டு இருங்க. பக்கத்துல ஒரு பொண்ணுக்குப் பிரசவ வலியாம்... ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்துடுறேன்.’’ நம் பதிலை எதிர்பாராமல், காரை எடுத்துக்கொண்டு விரைந்தார் கணேசன். `காலம் மாறினாலும், சிலரின் குணங்கள் மாறாது’ என்பார்கள். உலகெங்கும் நாம் அறியாத எத்தனையோ கணேசன்கள், பிரதிபலன் பார்க்காமல் யாருக்கோ உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 515 கணேசனின் சேவையை மனமார வாழ்த்தலாம், வணங்கலாம்!



No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...