Monday, September 24, 2018

முடிச்சூர் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு...மரண பீதி! இரு நாள் மழைக்கே மலைப்பாதையாக மாறிய அவலம்:

Updated : செப் 23, 2018 22:46 | Added : செப் 23, 2018 22:45




தாம்பரம் - முடிச்சூர் சாலை, வரதராஜபுரம், கிஷ்கிந்தா சாலைகளில், அடையாற்றின் குறுக்கே நடைபெறும் பாலப் பணிகளுக்காக, அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளும், இரண்டு நாள் மழைக்கே, மலைப்பாதையை விட மோசமாக சேதமடைந்துள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள், மரண பீதியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.அடையாற்றில் ஏற்பட்ட, 2015 வெள்ளத்திற்கு பிறகு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.நீரோட்டம் தடையின்றி செல்ல வசதியாக, ஆறு அகலப்படுத்தப்பட்டது.

பலத்த சேதம்

இதன் தொடர்ச்சியாக, அடையாறு ஆற்றை குறுக்கிட்டு செல்லும் நெடுஞ்சாலைகளில், தற்போதைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணிகளை செய்ய, நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப் பட்டது.இதற்காக, சில மாதங்களுக்கு முன், டெண்டர் விடப்பட்ட நிலையில், சமீபத்தில் பணிகள் துவங்கின.

திட்டப்படி, முடிச்சூர் - - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், வரதராஜபுரம் அருகே, 2.50 கோடி ரூபாய் செலவில், 192 அடி நீளம், 40 அடி அகலத்தில், புதிதாக பாலம் கட்டப்படுகிறது. அதேபோல், தாம்பரம் - - சோமங்கலம் சாலையில், சமத்துவ பெரியார் நகர் அருகே, 3.26 கோடி ரூபாய் செலவில், 215 அடி நீளம், 40 அடி அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது.இதற்காக, புதிய பாலம் கட்டும் பகுதிகளில், ஆற்றுக்குள் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. இப்பாதைகள், இரண்டு நாட்களாக பெய்த மழையால், பலத்த சேதமடைந்து உள்ளன.இதனால், வாகன ஓட்டிகள் மரண பீதியில் பயணிக்கின்றனர். முடிச்சூர் பகுதி மக்களும், மணிமங்கலம், மலைப்பட்டு பகுதிகளுக்கு சென்று வர கடும் அவதியடைகின்றனர்.

முடிச்சூர் பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:தாம்பரம்-- - முடிச்சூர் சாலையில், காந்தி சாலை முதல் கிருஷ்ணா நகர் வரை, சாலையின் ஒரு புறம், பாதாள சாக்கடை பணிகளும், மறுபுறம் மழைநீர் வடிகால் பணிகளும் நடக்கின்றன.

படுமோசம்

அதேபோல், கிருஷ்ணா நகர் முதல், சுண்ணாம்பு கால்வாய் வரை, மழைநீர் வடிகால் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் நடக்கின்றன.இதில், மழைநீர் வடிகால் பணிகளை, நெடுஞ்சாலைத் துறையும், பாதாள சாக்கடை பணிகளை, நகராட்சி நிர்வாகமும் செய்து வருகின்றன.இப்பணிகள், படுமந்தமாக நடந்து வருவதால், தாம்பரம் - --முடிச்சூர் சாலையில், சுண்ணாம்பு கால்வாய் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு சாலை, மலைப்பாதையைவிட படுமோசமாக உள்ளது.இதை கடந்து, 3 கி.மீ., துாரம் சென்றால், மணிமங்கலம் சாலையில், வரத ராஜபுரம் அருகே, அடையாறின் குறுக்கே பாலப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள், மழை துவங்கியதால் மந்தகதியில் நடக்கின்றன.

சமீபத்தில் பெய்த மழையால், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள, மாற்றுப் பாதைகள் மிகவும் சேதமடைந்து, மணல் மேடுகளாக காட்சியளிக்கின்றன. அவற்றில், வாகன ஓட்டிகள் மரண பீதியிலேயே பயணிக்க வேண்டி உள்ளது.ஒரு மாதத்திற்கு முன், பழைய பாலத்தை உடைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கினர். அதுவும், 80 சதவீதம் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க, ஆற்றில் இருந்து நீர் வெளியேற, ஒரேயொரு குழாய் மட்டுமே உள்ளது. அதனால், பெருமழை பெய்தால், நீரோட்டம் தடைபட்டு, மாற்றுப்பாதையை மறைத்து வெள்ளம் வெளியேறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாற்றுப்பாதை சேதம்!

பாலப் பணிகளுக்காக, ஆற்றினுள் மிக தாழ்வாகவும், குறுகிய அளவிலும் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாதை என்பதால், நெடுஞ்சாலைத் துறையினர், முழுக்க முழுக்க மணலை வைத்து, ஏனோ தானேவென்று பாதை அமைத்துள்ளனர்.சமீபத்தில் பெய்த மழையில், மாற்றுப்பாதை முழுவதும் சேதம்அடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகிவிட்டது. இதனால், சாலையின் இரு புறங்களிலிருந்தும், ஆற்றினுள் இறங்கும் வாகனங்கள், நேரடியாக ஒன்றுடன் ஒன்று மோதி, விபத்தில் சிக்குகின்றன.

தீர்வு என்ன?

 ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து, 6 அடி உயரம், 35 முதல், 40 அடி அகலத்தில், மாற்றுப்பாதையை, தார் சாலையாக அமைக்க வேண்டும். பணி முடியும் வரை, காலை மற்றும் மாலை வேளைகளில், நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் பணியில் நியமிக்கப்பட வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால், நீர் வெளியேற வசதியாக, 3 முதல், 5 ராட்சத குழாய்களை அமைக்க வேண்டும். - நமது நிருபர்- -

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...