Monday, September 24, 2018

சபாஷ், உ,லகிலேயே, பெரிய, மருத்துவ காப்பீட்டு, திட்டம்,துவக்கினார், மோடி

ராஞ்சி: உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். ஏழை, எளிய மக்கள் கடனாளியாவதை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் வகையிலும், இந்த திட்டம் அமைந்துள்ளது. ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்தால்,
10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேர் பயனடைவர்.

ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

வதந்தி

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும், 10.71 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கும். ஏழை, எளிய மக்கள், சிகிச்சைக்காக பணம் செலவிட முடியாமல், கடனாளியாவதை தடுக்கும் வகையில், இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேருவதற்காக யாரும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. சமூக, பொருளாதார மற்றும் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பின் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தஉறுப்பினர்கள் சிகிச்சை பெறலாம். இதனால், அரசுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்; இது, உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாகக் கருதப்படுகிறது. இதற்காக மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.








திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக இது அமைந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள், வெறும் ஓட்டு வங்கி அரசியலையே நடத்தி வந்தனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதை பற்றி, அவர்கள் கவலைப்பட்டதே இல்லை.

'மோடிகேர்'

அதே நேரத்தில், மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக, இந்த திட்டத்தை, பா.ஜ., அரசு பார்க்கிறது. மக்கள் யாரும் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்பதே என் ஆசை.
தவிர்க்க முடியாத காரணத்தால், நோய்வாய்ப்பட நேர்ந்தால், பணம் இல்லாததால், சிகிச்சை பெற முடியாத  நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

பணக்காரர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும், ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே, பா.ஜ., அரசின் நோக்கம்.இந்த திட்டம், எவ்வளவு பிரமாண்டமானது என்பதை, இதயம், சிறுநீரகம், குடல், இரைப்பை, சர்க்கரை நோய் என, 1,300 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை, 'மோடிகேர்' என, சிலர் கிண்டல் செய்கின்றனர். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், சேவை செய்யக் கூடிய திட்டமாகவே இதை நான் பார்க்கிறேன்.

நாடு முழுவதும்

'அனைவருடன் இணைந்து, அனைவரது நலனுக்காக' என்ற அரசின் தாரக மந்திரத்துக்கு ஏற்ப, எந்தப் பாகுபாடும் இல்லாமல், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும், 13 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தால், 2,500 புதிய தனியார் மருத்துவமனைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால்,வேலைவாய்ப்புகள் பெருகும்.இவ்வாறு அவர்பேசினார்.

தமிழகத்தில், 2.85 கோடி பேருக்கு பயன்

பிரதமர் மோடி, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற, தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, நேற்று துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, சென்னை, தேனாம்பேட்டையில், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை ஒருங்கிணைக்கும் விழா நடந்தது.இதில், ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து, 10 பேருக்கு, காப்பீட்டு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

* தமிழகத்தில், ஏழை மக்களின் மருத்துவ சேவைக்காக, 2012 முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம், பிரதமரின் தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துடன் இணைத்து சேவையாற்ற, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. செப்., 11ல், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது

* தமிழகத்தில் உள்ள, சமூக, பொருளாதார, ஜாதி வாரியாக, 77 லட்சம் குடும்பங்களில் உள்ள, 2.85 கோடி பேர், ஓராண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவுகளை இலவசமாக பெறலாம். முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 1.57 கோடி பயனாளிகளுக்கும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டை பெற முடியும்

* காது நுண் எலும்பு, காது பொருத்தும் சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட   சிகிச்சைகளுக்காக, தகுதியுள்ள அனைவரும், தலா, 25 லட்சம் ரூபாய் வரை பெற முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024