சிறையில் 2 ஆண்டுகளைக் கழித்துவிட்டார் சசிகலா: ஆனால் இன்னும் ஒன்று மட்டும் நடக்கவில்லை?!
Published on : 12th February 2019 11:25 AM |
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற வி.கே. சசிகலா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், அவர் எந்த விதிமீறலிலும் ஈடுபடாமல், அவர் மீது வேறு எந்தக் குற்றங்களும் இல்லை எனும் பட்சத்தில், கர்நாடக பரோல் விதிகளின் அடிப்படையில், சசிகலா அடுத்த ஆண்டு இதே தேதியில் சிறையில் இருந்தே விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், சிறை விதிகளின் படி, நீண்ட கால மற்றும் குறுகிய கால சிறைத் தண்டனை பெற்ற கைதிகளை, நன்னடத்தையைக் காரணம் காட்டி தண்டனையில் 4ல் 3 பங்கு காலத்தை பூர்த்தி செய்துவிட்டாலே, அவரை விடுவிக்கலாம்.
எனவே, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 2021ம் ஆண்டுக்கு பதிலாக 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விடுதலையாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
சரி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார், முன்கூட்டியே விடுதலையாவார் என்பது தெரிந்துவிட்டது. அப்படி இருந்தும், நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவு மட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதுதான் அபராதம்.
அதாவது, ரூ.66.65 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறைத் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது, ஆனால், குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை அபராதத் தொகையை வசூலிக்கவோ, சட்டவிரோதமாக சேமித்த சொத்துக்களை முடக்கவோ எந்த தீவிர நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நடத்திய கர்நாடக அரசு தான், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குற்றவாளிகளிடம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்கும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறது. அதே சமயம், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டு சொத்துக்களை முடக்க வேண்டும்.
அதே போல, சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறைக்கும் உரிமை உள்ளது. நடவடிக்கை எடுக்க இத்தனை துறைகளுக்கு அதிகாரம் இருந்தும் இதுவரை யாருமே அந்தப் பணிக்கான துரும்பைக் கூட கிள்ளி வைக்கவில்லை.
இதில்லாமல், 2007ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் ரூ.16 கோடி வரிக்காக, சொத்துக்களை முடக்கி அதன் மூலம் பணத்தை வசூலிக்க வருமான வரித் துறைக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த விஷயத்தில் வருமான வரித்துறை மௌனமாகவே உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2015ம் ஆண்டு மே 11ம் தேதி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்ததோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
சிறைத் தண்டனையே பாதி கழிந்துவிட்ட நிலையில், அபராதத் தொகையை வசூலிப்பதிலும், சொத்துக்களை முடக்குவதிலும் யாருக்கு அப்படி என்னதான் தயக்கம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், இனியாவது தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை எந்தவொரு துறையாவது மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
நம்பிக்கை அதானே எல்லாம்..
No comments:
Post a Comment