Sunday, February 17, 2019


சின்னத்தம்பி சொல்லும் செய்தி!


By ஆசிரியர் | Published on : 12th February 2019 01:36 AM |

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வெறுப்பையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேரன்பையும் பெற்றிருக்கிறது சின்னத்தம்பி என்கிற 25 வயது ஆண் யானை. இந்த யானையைப் பழக்கப்படுத்தி கும்கி யானையாக்க முடியாது என்று யானைகள் குறித்த அறிஞர் அஜய் தேசாய் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக வனத் துறை அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாகவே, சின்னத்தம்பி என்கிற இந்த யானை கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை பகுதிகளில் நடமாடி வருகிறது. ஆரம்பத்தில் பெரியதம்பி என்று ஊர் மக்களால் பெயரிடப்பட்ட யானையுடன், சின்னத்தம்பி வனப் பகுதியிலிருந்து ஊருக்குள் வருவதும், இரண்டு யானைகளுமாகப் பயிர்களைச் சேதப்படுத்துவதும் வழக்கமாகி விட்டிருந்தது. ஒருபுறம் பயிர்களைச் சேதப்படுத்தி விவசாயிகளின் வெறுப்புக்கு உள்ளானாலும், இன்னொருபுறம் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும் இந்த யானைகள் பெற்றுக்கொண்டன என்பதுதான் வியப்புக்குரிய திருப்பம்.

இரண்டு யானைகளும் ஆனைகட்டி சாலைப் பகுதியில் சுற்றிவரும்போது, பொதுமக்கள் அவற்றுக்கு வாழைப் பழம் உள்ளிட்ட பொருள்களை வழங்குவது வழக்கமானது. பெரிய தம்பியும், சின்னத்தம்பியும் அந்தப் பகுதி மக்கள் யாரையும் துன்புறுத்தியதே இல்லை. சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது வரை சாதுவான மிருகங்களாகவே காட்சியளித்தன. ஆனால், பயிர்களை நாசம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்ததுதான், விவசாயிகள் இந்த அளவுக்கு வெறுப்பும் கோபமும் அடைந்திருப்பதற்குக் காரணம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியதம்பி யானை இறந்துவிட்டது. சின்னத்தம்பிக்குப் புதிய துணையாக விநாயகன் என்கிற யானை அமைந்தது. பெண் யானை ஒன்றுடனும் குட்டிகளுடனும்கூட சின்னத்தம்பியை ஊர் மக்கள் ஒரு சில முறை பார்த்திருக்கிறார்கள். வனத் துறையினரால் விநாயகன் யானை பிடிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் கொண்டுவிடப்பட்டது. சின்னத்தம்பியை வனத்துக்குள் அனுப்பும் முயற்சி வெற்றி பெறவில்லை.

இப்போது சின்னத்தம்பியின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதை கும்கியாக பழக்கப்படுத்த முடியாது என்று அஜய் தேசாய் கூறியிருக்கும் நிலையில், சின்னத்தம்பியை என்ன செய்வது என்கிற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது வனத் துறை. வனத் துறையினர் மீண்டும் விரட்டிவிட்டால், காட்டில் திரியும் ஏனைய யானைகளையும் அழைத்துக் கொண்டு அது மீண்டும் ஊருக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார்கள், பயிர் நாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் 2016-இல் 98 யானைகளும், 2017-இல் 124 யானைகளும், 2018-இல் 84 யானைகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டத்தில் 307 யானைகள், 126 மனிதர்கள் என உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், யானைகளின் வாழ்வாதாரமான வனங்கள் அழிக்கப்படுவதும், அவற்றின் வழித்தடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும்தான்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 41,410 முதல் 52,345 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 60% ஆசிய யானைகள் காணப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில்தான் மிக அதிகமாக யானைகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் 11,960, வடகிழக்கு இந்தியாவில் 10,139, மத்திய கிழக்குப் பகுதியில் 3, 128, வட இந்தியாவில் 2,085 யானைகள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தென்னிந்தியாவில் யானை வழித்தடங்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகத்தில் உள்ள மொத்த வழித்தடங்கள் 17 மட்டுமே. வட மாநிலங்களில் 150 சதுர கி.மீ.க்கு ஒரு வழித்தடம் காணப்படுவதாலும், எல்லா வழித்தடங்களும் விளைநிலங்கள் வழியாக இருப்பதாலும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் தினசரி நிகழ்வாகவே மாறியிருக்கின்றன. தமிழகத்தின் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றுதான் கூறவேண்டும்.
தென்னிந்தியாவில்தான் மிகச் சிறந்த யானை சரணாலயங்கள் உள்ளன. பந்திப்பூர், நாகர்ஹோலே, முதுமலை, வயநாடு, பிலிகிரி ரங்கசுவாமி கோவில், காவேரி, பிரம்மகிரி உள்ளிட்ட யானை சரணாலயங்களில் யானைகளுக்கான எல்லாவித உணவும் கிடைக்கிறது. யானைகள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை. தங்களது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவை பயணிக்கும் வழித்தடங்கள் அடைக்கப்படும்போதும், ஆக்கிரமிக்கப்படும்போதும்தான் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுகின்றன.
கோவை மாவட்டத்தில் மட்டு
ம் கடந்த ஏழு ஆண்டுகளில் 77 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 61 பேர் காயமடைந்திருக்கிறார்கள்; 2,421 முறை விவசாய நிலங்களில் யானைகள் நுழைந்து குறைந்தது 261 முறை பயிர்கள் நாசமடைந்துள்ளன.

யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வனப் பகுதிகள் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தாத வரை, காடுகளிலிருந்து யானைகள் ஊருக்குள் வருவதும், பயிர்களை நாசம் செய்வதும் அதிகரிக்குமே தவிர குறையாது. இதுதான் சின்னத்தம்பி நமக்கு உணர்த்தும் பாடம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024